Monday 30 January 2017

இந்துத்துவத்தின் இறுதி வடிவம்

இந்துத்துவத்தின் இறுதி வடிவம்

-டி.என். ஜா
விலை: 35/-
புதுமை பதிப்பகம்
7200260086

இன்று பெருந்திரளான இந்திய மக்கள் எதிர்கொண்டிருக்கும் இருபெரும் சவால்களாக இருமுனை கூர்தீட்டிய எறியீட்டியாக, புதிய பொருளாதார கொள்கையின் நெருக்கடிகளும் இந்துத்துவ பாசிசத்தின் கொடூர தாக்குதல்களும் விளங்குகின்றன. இவை ஒன்றுக்கொன்று தனிப்பட்ட நிகழ்வுப் போக்குகளா? இல்லவே இல்லை. ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. சொல்வதெனில் ஒன்றைப் பாதுகாக்க இன்னொன்று பயன்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் ஏகபோக நிதி மூலதனத்தை பாதுகாக்கவே இந்திய தரகு முதலாளித்துவ நிலவுடமை வர்க்க அரசு இந்துத்துவ பாசிசத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது. மேலும் இந்தியாவின் தரகு முதலாளித்துவ ஏகபோக நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற விரிவாதிக்க நலன்களிலிருந்தும் இந்துத்துவ பாசிசத்தை கட்டியமைக்கிறது.

ஒரு புறம், புதிய பொருளாதார கொள்கைகள் விவசாயிகளை ஒட்டச் சுரண்டி, அன்றாட காய்ச்சிகளாக ஓட்டாண்டிகளாக நடுத்தெருவில் நிறுத்துகின்றன. மூன்று இலட்சம் விவசாயிகளை தூக்கு கயிற்றுக்குள் தொங்கவிடுகின்றன. பல கோடி விவசாயிகளை நிலத்தை விட்டு துரத்துகின்றன. தொழிலாளர்கள் நலச் சட்டங்களை திருத்தி அவர்களை அவுட்சோர்ஸிங் அடிமைகளாக பண்ணையடிமை வாழ்க்கைக்கு தயார் செய்கின்றன. இளைஞர்களின் எதிர்காலத்தை இருட்டாக்குகின்றன. மாணவர்களையும், சிறு, குறு வணிகர்களையும் செல்லாக் காசாக தூக்கிப் போடுகின்றன. மறுபுறம் இந்துத்துவ பாசிசம், மாட்டிறைச்சி உண்பவர்களை, பாரத் மாதா கீ ஜே சொல்லாதவர்களை தேசத் துரோகிகள் என்று சிறையில் அடைக்கிறது. பன்சாரே, கல்புர்க்கி போன்ற பகுத்தறிவாதிகளை சுட்டுக் கொல்கிறது. ஐ.ஐ.டி. வாசகர் வட்டத்திற்குத் தடை, ரோஹித் வெமுலா உட்பட 10 மேற்பட்டவர்களை தற்கொலைக்குத் தள்ளுவது, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அச்சுறுத்தல் என்று அதன் கோரப் பற்கள் நீள்கின்றது.

மேலும் இது மதக் கலவரங்களுக்கும், சாதி கலவரங்களுக்கும் தூபம் போடுகின்றது. இந்துத்துவ பாசிசம் சாதிவெறி பாசிசத்தோடு கை கோர்த்து செயல்படுகின்றது. இது உயர்சாதி ஆதிக்க சக்திகளை மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிற்போக்கான பகுதியினரையும் கூட ஈர்க்க முயற்சிக்கிறது. இஸ்லாமிய-கிறித்துவ மத வெறுப்பையும், கம்யூனிச விரோதத்தையும் அவர்களிடையே பிரச்சாரம் செய்கிறது.

ஆகவே, புதிய பொருளாதார கொள்கைகளின் நெருக்கடிகளை எதிர்த்த மக்கள் போராட்டங்களை நசுக்கவும், வர்க்க அணிச் சேர்க்கையை கலைக்கவும் இந்துத்துவ பாசிசத்தை ஆளும் வர்க்கம் கேடயமாக பயன்படுத்துகின்றன. இவ்விரு கொள்கைகளிலும் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒன்றே - இந்தியப் பாசிசத்தின் இரு முகங்களே - காவியும், கதரும் இந்தியப் பாசிசத்தின் இரு சீருடைகளே. காங்கிரஸ் ‘தேசிய ஒருமைப்பாடு’ என்ற வாய்ச்சவடால் மூலம் மென்மையான சந்தர்ப்பவாதமாக இந்துத்துவ பாசிசத்தை கையாளும். பி.ஜே.பி. ‘வளர்ச்சி’ ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற வார்த்தை ஜாலம் மூலம் ‘தீவிர இந்துத்துவாவை’ கையாளும் இரண்டின் நோக்கமும் ஒன்றே. இந்திய தரகு முதலாளித்துவ அமெரிக்க ஏகபோக மூலதன கும்பல்களின் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதே அந்த நோக்கம்.

இந்துத்துவப் பாசிசம் குறித்த வர்க்க குணாம்சத்தை மார்க்சிய லெனினிய ஒளியில் வரையறுக்கவில்லை எனில் நாம் பெரும் தவறிழைப்போம். பாசிசத்தின் வேரான பொருளியல் அடிப்படை குறித்தும், அதன் வர்க்க குணாம்சம் குறித்தும் அறிய வேண்டியது அவசியமாகும். பாசிசம் என்பது ஆட்டோபௌவர் சொல்வதைப் போல இரு வர்க்கங்களுக்கும் அதாவது பாட்டாளி வர்க்கம் மற்றும் பூர்ஷ்வா வர்க்கம் ஆகிய இரு வர்க்கங்களுக்கும் அப்பால் தனித்து நிற்கும் அரசாங்க அதிகாரத்தின் வடிவமல்ல. பிரிட்டிஷ் சோஷலிஸ்ட் பிரெயில்ஸ் போர்டு பிரகடனப்படுத்துவதைப் போல “குட்டிப் பூர்ஷ்வா வர்க்கம் எழுச்சி பெற்று கலகம் செய்து அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றுவது அல்ல”. பாசிசம் என்பது வர்க்கங்களுக்கு அப்பால் உள்ள அரசு அல்ல; குட்டி பூர்ஷ்வா வர்க்கத்து அரசும் அல்ல. அல்லது நிதிமூலதனத்தின் மேல் நிற்கும் கழிசடைப் பாட்டாளிப் பகுதியின் அரசாங்கமும் அல்ல. எம்.என்.ராய் கூறியது போல் பாசிசம் என்பது ஆரிய வகைப்பட்டதல்ல. கிராம்சி கூறியதைப் போல பின் தங்கிய நிலவுடமை உற்பத்தியின் வெளிப்பாடுமல்ல. பிராய்டு கூறுவதைப் போல ‘உளவியல் கோளாறும் அல்ல’.

பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் ஆகப் படுமோசமான, படுபிற்போக்கான, ஆக அதிக இனவெறி கொண்ட ஏகாதிபத்திய நபர்களின் பகிரங்கமான பயங்கரத் தன்மை கொண்ட சர்வாதிகாரம் ஆகும்” என டிமிட்ரோவ் வரையறுக்கிறார்.

பாசிசம் பல்வேறு நாடுகளில் பல்வேறு வடிவங்கள் எடுக்கின்றது. மதம் தனிநபர் விவகாரமாக ஆக்கப்பட்டதால் அரசுக்கும் மதத்திற்கும் உள்ள உறவு துண்டிக்கப்பட்டதால் - ஜெர்மனியில் ஹிட்லரின் தலைமையில் இனவடிவம் பூண்டது. அது தன்னை ‘தேசியவாத சோஷலிசம்’ என்று வாய்கூசாமல் கூறிக்கொண்டது. இலங்கையில் சிங்கள புத்தமத பேரினவாதமாக பாசிசம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மதவடிவிலும், சாதி வடிவிலும், தேசிய இன ஒடுக்குமுறை வடிவிலும் பாசிசம் கட்டியமைக்கப்படுகிறது. அனைத்து வகை பாசிசத்தின் வர்க்க குணாம்சமும் ஒன்றே. அது ஏகபோக நிதி மூலதனத்தின் பிற்போக்கான சர்வாதிகாரம் ஆகும்.

இந்துத்துவ பாசிசம் குறித்து பெருமளவு விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்தாலும், பெரும்பாலும் அவை பாசிசத்தின் மேற்கட்டுமானம் பற்றியே பேசுவதாக உள்ளன. அதன் பொருளியல் அடித்தளம் பற்றிய விவாதம் நடைபெறுவதாக சான்றுகள் இல்லை. இனி அது நோக்கிய நகர்வை நாம் செய்தாக வேண்டும். இல்லையெனில் சரியானதொரு பாசிச எதிர்ப்பு முன்னணியை கட்டி பாசிசத்தை வீழ்த்த இயலாது. இந்துத்துவ பாசிசத்தை வெறும் மதவாதமாக மட்டுமே பார்க்கும் போக்கு உள்ளதால் மதச்சார்பின்மை எனும் பேரில் காங்கிரசுக்கு முட்டு கொடுப்பதும் இதை வெறும் பார்ப்பன பாசிசமாக குறுக்குவதன் மூலம் பார்ப்பனர் அல்லாத பாசிஸ்டுகளுக்கு துணை போவது என்பதும் இந்துத்துவ பாசிசத்தை நிச்சயமாக பலப்படுத்தும். அது மட்டுமல்ல ஏகபோக நிதிமூலதன கும்பலின் ஆதிக்கத்தை எதிர்த்த போராட்டத்தையும் பலவீனப்படுத்தும். ஏனெனில் இந்துத்துவப் பாசிச எதிர்ப்பும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதது ஆகும்.

இந்தியாவில் உள்ள சிவசேனா, வி.எச்.பி. ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ அமைப்புகளுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் நிதி உதவி செய்கிறது. இந்துமத வெறி அமைப்புகள் அமெரிக்காவில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கின்றது. பஜ்ரங்தள் அமைப்பிற்கு மட்டும் மதக் கலவரங்களில் ஈடுபடுவதாக கூறி நிதிக்கான வரிச் சலுகையை நிறுத்தியுள்ளது. குஜராத் கலவரத்திற்கு காரணமான மோடி மீது விதித்திருந்த விசா தடை, பிரதமரானதும் தானாக நீங்கியது. எனவே இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்த போராட்டமும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாகும். இங்கு நிலவும் பிரச்சினையே இவ்விரண்டையும் பிரித்து தனித்தனியாக அணுகுவதுதான்; பிரித்துப் பார்க்கும் பிழை மட்டுமல்ல, இந்துத்துவ பாசிசத்தை, வெறும் மதவாத பாசிசமாக, பார்ப்பனிய - பனியா பாசிசமாக குறுக்கப்படுகின்ற பிழையும் செய்யப்படுகின்றது. அதன் பொருளியல் அடிப்படை மூடி மறைக்கப்படுகின்றது. இது பாசிச எதிர்ப்பு முன்னணி கட்டவும், ஏகாதிபத்திய எதிர்ப்பை வலுப்படுத்தவும் தடையாக உள்ளது. வர்க்க போராட்ட இயக்கங்களை குலைத்து, பாசிசத்தை வலுப்படுத்துகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்கின்றது.

இந்துத்துவப் பாசிசம் என்பது இந்திய உழைக்கும் மக்கள் மீது கொடூரமாக, கோரமாக நடத்தப்படும் தாக்குதலாகும். அது மதவெறியும், சாதி வெறியும், தேசிய இன ஒடுக்குமுறையும் மிக்க, ஆதிக்க வெறி பிடித்த யுத்தமாகும். இது வெறிபிடித்த பிற்போக்குத் தனமும், எதிர்புரட்சியுமாகும். தொழிலாளி வர்க்கத்தின், சகல உழைக்கும் மக்களின் கொடிய விரோதியாகும். இது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் ஏகபோக நிதி மூலதனத்தை - புதிய காலனி ஆதிக்கத்தை - அதன் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் பிற்போக்கான வடிவம் ஆகும்.

எனவே இந்துத்துவப் பாசிசம் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏகபோக நிதிமூலதனத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் - இந்திய தரகு முதலாளித்துவ ஏகபோக நலன்களை நிலைநிறுத்தும் - மிகவும் பிற்போக்கான மிகவும் கொடூரமான - மிகவும் மதவெறியும், சாதிவெறியும், தேசிய இன ஒடுக்குமுறையும் கொண்டதுமான - சர்வாதிகாரம் ஆகும். இது இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்த போராட்டமும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க கூடாதது என்பதை ஆழமாக உணர்த்துகிறது. இதுவே பாசிச எதிர்ப்பு முன்னணியை கட்டி ஏகாதிபத்திய நிதிமூலதன நுகத்தடியிலிருந்து நாட்டை விடுவிக்க வல்லது ஆகும்.


அந்த வகையில் இச்சிறு நூல், இந்துமதத்தின் அடையாளம் பற்றியும், இந்துத்துவத்திற்கு இறுதி வடிவம் தருவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ராம்மோகன் ராயின் பிரம்மசமாஜம், தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜம், விவேகானந்தரின் இராமகிருஷ்ண மிஷன் வாயிலான இந்து மத அடையாளம் பற்றி வரலாற்று ரீதியாக எழுதப்பட்டுள்ளது. வங்கத்தில் தாகூரின் நண்பரான ராஜ்நாராயன பாசுவின் இந்துமத கருத்தியலையும், பக்கிங் சந்திராவின் - ‘ஆனந்த மடத்தில்’ - இஸ்லாமியர்கள் ‘அழுக்கான வேசிமகன்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் இந்நூல் குறிப்பிடுகிறது. திலகரின் சுயராஜ்ஜியம், விநாயகர் - சிவாஜி விழாக்கள் பற்றியும் அவரது பிரிட்டிஷ் எதிர்ப்பு பற்றியும், அவரைத் தொடர்ந்து அரவிந்தரும் பிரிட்டிஷ் எதிர்ப்பில் உறுதியாக இருந்ததையும் ஆசிரியர் சரியாக குறிப்பிடுகிறார். இவர்களைத் தொடர்ந்து சாவர்க்கர், ஹெட்கேவர், கோல்வால்கரின் நவீன இந்துத்துவாவின் உருவாக்கம் பற்றியும் பேசுகிறது. ஆர்.எஸ்.எஸ்.சிற்கு தத்துவார்த்த நிலைமையை சவார்க்கரும், அமைப்பு தலைமையை ஹெட்கேவரும் நிறுவினர். கோல்வால்கர் எல்லை தேசியத்திலிருந்து கலாச்சார தேசியமாக வளர்த்தெடுக்கிறார். முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை தகர்க்க வேண்டும் என்பதை கோல்வார்க்கரும், சவார்க்கர் துவக்கிவைத்துள்ளனர். இதை தொடர்ந்தே அத்வானியின் இரதயாத்திரை 1992-ல் பாபர் மசூதி இடிப்பும், 2002 குஜராத் கலவரங்களும் நிகழ்ந்தன என்பதை அறியமுடிகிறது. இந்து மத அடையாளத்தை, நவீன இந்துத்துவத்தை, விளக்கும் நூலாசிரியர், இந்த நவீன- இந்துத்துவ வாத்தின் ஏகாதிபத்திய ஆதரவையும், இந்துத்துவத்தின் பொருளியல் அடிப்படையையும், இந்துத்துவப் பாசிச எதிர்ப்புப் போராட்டம் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்துடன் பிரிக்க முடியாதது என்பதையும் கூறவில்லை என்பது விமர்சனத்திற்குரியதே ஆகும்.

பாரதி

No comments:

Post a Comment