Monday 30 January 2017

"பண்டைய இந்தியா" எதிர்நிலை கருத்துகளுக்கான மறுப்புகள்

"பண்டைய இந்தியா" எதிர்நிலை கருத்துகளுக்கான மறுப்புகள்

ஆர்.எஸ். சர்மா
விலை: 35/-
புதுமை பதிப்பகம்
7200260086

பண்டைய இந்தியா” எனும் வரலாற்று நூல் 1977ல் ஆர்.எஸ்.சர்மாவால் எழுதப்பட்டு, கல்வி ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சிலில் 11ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப் புத்தகமாக பதிப்பிக்கப்பட்டது.

இந்தப் பாடப்புத்தகத்தை எதிர்த்து ஆர்ய சமாஜ் எனும் இந்துத்துவ அடிப்படைவாத அமைப்பு, ராம் கோபால் ஷால்வாலே எனும் மதவெறியரின் தலைமையில் இந்தியில் இரண்டு துண்டறிக்கைகளை வெளியிட்டது. மேலும் இந்த நூலை, “விபரீத மனநிலைக் கொண்டவரால் எழுதப்பட்ட இந்தப் புத்தகமானது, முழுவதும் தீமைகளைக் கொண்டுள்ள ஒரு படைப்பு”, என்று அவதூறு விமர்சனத்தை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து தொல்லியல் ஆதாரங்களை தவறான புரிதலுடன் தவறாக கையாண்டுள்ளார் என்று ஆர்.எஸ்.சர்மாவை விமர்சிக்கிறார் எஸ்.பி.குப்தா.

இத்தகைய விமர்சனங்களின் உண்மையான உள்நோக்கம் என்ன என்பதை நாம் அறிந்துகொள்வதற்கு “பண்டைய இந்தியா” எனும் நூலை ஆர்.எஸ்.சர்மா எழுதியதன் வரலாற்றுப் பின்னணியையும் அதன் இன்றையப் பொருத்தப்பாடுகளையும் பற்றி இன்றைய அரசியல் சூழலுக்கேற்ப ஆராய்வது நமக்குப் பயனளிக்கும்.

இந்திய வரலாற்றை எழுதியவர்களின் காலத்தை பிரிக்க வேண்டும் என்றால் அதை 1956க்கு முன், பின் என்று பிரிக்க வேண்டும். 1920ஆம் ஆண்டுகளில் தான் இந்திய வரலாற்றின் தொட்டில் என அழைக்கப்படும் சிந்து சமவெளி நாகரீகம் மற்றும் ஹரப்பா நாகரீகம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வாய்வு மூலம் பல வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றதுதான் இந்திய வரலாற்றை அறிவதற்கான புத்தொளியை பாய்ச்சியது. இதன் பிறகு இந்திய வரலாற்றை பலர் இந்த தரவுகளின் அடிப்படையில் எழுதியிருந்தாலும் ஒரு சமூகத்தை விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்தும், அதற்கான அணுகுமுறையை முன்வைத்தும் 1956ல் டி.டி.கோசாம்பியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலான “இந்திய வரலாற்றுக்கு ஓர் அறிமுகம்” வெளியிடப்பட்டது. இது மார்க்சிய அடிப்படையில் எப்படி சமூகத்தை அணுகுவது என்ற தெளிவை வரலாற்று ஆய்வாளர்களுக்கு தந்தது.

இந்த வழிமுறையை அடிப்படையாகக் கொண்டு பண்டைய இந்திய வரலாற்றை மிக எளிமையாகவும் அதே சமயத்தில் விஞ்ஞானப் பூர்வமாகவும் ஆர்.எஸ்.சர்மா எழுதிய நூல்தான் “பண்டைய இந்தியா”.

பழமையைப் போற்றுபவர்களாலும், ஆரிய மேன்மையை பேசுபவர்களாலும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நிலைத்து நிற்க வேண்டும் என்று விரும்புகிற இந்து மத அடிப்படைவாதிகளாலும் இந்த புத்தகம் எதிர்க்கப்படுவது என்பது இயல்பானதே.

இந்த நிகழ்வு நடந்தது என்னவோ 1977ஆம் ஆண்டாக இருக்கலாம், இந்து மத அடிப்படைவாத தாக்குதல் உச்சமடைந்திருக்கும் இன்றைய காலத்திற்கும் இது பொருத்தமானதே. அதன் ஒரு கூறுதான் வரலாற்று ஆய்வுக்கான இந்திய கவுன்சில் எனும் அமைப்பில் இருந்த அறிவியல் பூர்வமான வரலாற்று ஆய்வாளர்களை நீக்கிவிட்டு காவி பயங்கரவாத கும்பலின் கூடாரமாக மாற்றிவிட்டது மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு.

இந்திய வரலாற்றில் பழமையைக் கட்டிக் காப்பதும், ஆரிய இனவாதத்தின் படி இந்தியாவில் வாழ்வதற்கு இந்துக்களுக்கு மட்டுமே தகுதியும், உரிமையும் உள்ளது என்று பேசி, பிற சிறுபான்மை மத மக்களை ஒடுக்குவதும், தனது சொந்த மதத்திற்குள்ளேயே வர்ணாசிரம முறையை கடைப்பிடிப்பதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதும்தான் இந்து மத பாசிச அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போன்ற கும்பல்களின் உண்மையான நோக்கமாகும்.

இந்து தேசியம் அதாவது இந்துக்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் என்பது கோல்வால்கரின் அசைக்க முடியாத கூற்று. அதிலிருந்துதான் உள்நாட்டு எதிரியாக வரையறுத்து சிறுபான்மை மத எதிர்ப்பு கட்டப்படுகிறது. ஆனால் ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று வரலாற்றியலாளர்கள் கூறுவது இதற்கு ஒத்துப் போகவில்லை. எனவே இதை மேற்கத்திய வல்லுநர்களின் ஐயத்துக்குரிய கூற்று என்று கோல்வால்கர் ஒதுக்குகிறார். ஆகவே வரலாற்றைத் திருத்த வேண்டிய கட்டாயம் இந்துத்துவவாதிகளுக்கு ஏற்படுகிறது. இவ்வேலையை கோல்வால்கர் துவங்கியும் வைத்திருக்கிறார். திலகர், ஆர்டிக் பிரதேசம் வேதங்களின் தாயகம் என்று சொன்னதை ஆதரித்தால், இந்தியா இந்துக்களின் தேசம் என்று சொல்ல முடியாது. அதே சமயம் திலகரை மறுக்கவும் முடியவில்லை. கடைசியில், ஆர்டிக் பிரதேசம் இந்தியாவின் பிகார், ஒரிசாவுடன் இருந்ததாகவும், பிறகு இந்துக்களை இந்தியாவில் விட்டு விட்டு, விலகி விலகி சென்று தற்போது இருக்கும் இடத்தில் இருப்பதாகவும் கோல்வால்கர் கட்டுக்கதைகளை எழுதுகிறார்.

ஏற்கனவே வாஜ்பாய் ஆட்சியின் போது, முரளி மனோகர் ஜோஷி, மனித வள மேம்பாட்டுத் துறையின் அமைச்சராகப் போடப்பட்டு, முக்கிய பொறுப்புகள் பலவற்றில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை பணியமர்த்தினார் என்பதை இங்கே நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். பாபர் மசூதி இடிப்புக்கு சாதகமாக ஆர்.எஸ்.எஸ். வரலாற்றியலாளர்கள் சாட்சியங்களை உருவாக்கியதும் ஓர் உதாரணம். தற்போது மோடி ஆட்சியில் இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சிலின் தலைவராக ஒய்.எஸ்.ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பாரதீய இதிகாச சமிதியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த சமிதி, இந்து தேசிய நோக்கில் இந்திய வரலாறு எழுதப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் அமைப்பு. கலியுகத்தின் துவக்கத்திலிருந்து வரலாறு எழுதப்பட வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, அதை உள்ளடக்கிய இந்து தேசியம் என்று கட்டமைக்கும் ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டத்தின் வலுவான பிரச்சாரகர்தான் ராவ்.

அதேபோல் தீனாநாத் பாத்ரா என்பவர் எழுதிய 7 புத்தகங்கள் அண்மையில் குஜராத் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்கு முன்னுரை எழுதியதன் மூலம், அதன் உள்ளடக்கத்துக்கும் சேர்த்து ஒப்புதல் வழங்கியிருக்கிறார் மோடி. மகாபாரத காலத்திலேயே ஸ்டெம் செல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கௌரவர்கள் உருவானது அந்த அடிப்படையில்தான் என்றும், வேதகாலத்தில் கார், விமானம் போன்றவை இருந்தது என்றும், பார்வையற்ற திருதராஷ்டிரருக்கு ஒரு ரிஷி, எங்கோ நடக்கும் பாரதப் போரை அரண்மனையில் உட்கார்ந்து கொண்டே, காட்சி காட்சியாக விவரித்த, ஞான திருஷ்டி தான் டிவியாக உருவானது என்றும் எழுதியிருக்கிறார். குழந்தை இல்லாதவர்கள், பசுக்களைப் பாதுகாத்தால் போதும், குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் பள்ளிப் பாடங்களாக்கப்பட்டுள்ளன.

இத்தகைய போக்கு வளரும் இளையதலைமுறையினரின் சிந்தனையை மலடாக்குவதோடு, தனது காவி பாசிசத்தை வரலாற்றுத் துறையில் காவி கும்பல் திணிக்கிறது. இத்தகைய பாசிச தாக்குதல்களை எதிர்த்து போராடுவது மாணவர்கள், இளைஞர்கள் அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும். வரலாற்றுத் துறையை காவிமயமாக்கிவருவதை எதிர்த்த போராட்டத்தின் ஒரு பகுதியே ஆர்.எஸ்.சர்மாவின் இச்சிறுநூல். இதை தமிழில் வெளியிடுவதில் புதுமை பதிப்பகம் பெருமைகொள்கிறது. இதன் நோக்கத்தினை ஆர்.எஸ்.சர்மா வார்த்தைகளில் கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்:

இனி கல்வியாளர்களும் வரலாற்றை நேசிப்பவர்களும் தங்களது ஆதரவு மூடப் பழக்கவழக்கத்திற்கா அல்லது பகுத்தறிவுக்கா; தங்களது ஆதரவு அறிவியல் பூர்வமான வரலாற்றுக்கா அல்லது குருட்டுத்தனமான குறுபுத்தி கொண்ட மதம் சார்ந்த பிரச்சாரத்திற்கா என முடிவு செய்ய வேண்டும்”

பிரதீப்

பதிப்பாளர்

No comments:

Post a Comment