Tuesday 25 April 2017

அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் உண்மை சொரூபம்

அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் உண்மை சொரூபம்
-பி.ஜே.ஜேம்ஸ்
விலை: 230/-
புதுமை பதிப்பகம்
7200260086

அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் உண்மையான செயல்பாடு என்பது உளுத்துப்போன சமூக அமைப்பை பாதுகாத்து, ஏகாதிபத்திய சுரண்டலை நியாயப்படுத்துவதாகும். இதன் உண்மைத் தன்மையை ஆய்வதற்கு அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் தத்துவம் மற்றும் அரசியல் செயல்பாடுகளை புரிந்துகொள்வதற்கு நாம் சர்வதேசிய சூழலிலிருந்து இப்பிரச்சினையை அணுகவேண்டும்.
முதலாளித்துவ சமூக அமைப்பு என்பது மிகு உற்பத்தி நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டது. இந்த சமூக அமைப்புக்குள்ளேயே இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அல்லது தீர்வு காண்பதற்கு சாத்தியமில்லை என்று சமூக விஞ்ஞான ரீதியான புரிதல் மட்டுமல்ல கடந்தகால வரலாறும் நமக்கு அதையே தான் நிரூபித்துள்ளது. ஆளும் வர்க்கங்கள் இந்நெருக்கடியை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதன் மூலம் தீர்வுகான முயல்கிறது. நெருக்கடியின் சுமைகளை தாங்கமுடியாமல் உழைக்கும் மக்களின் அவலக்குரல் கேட்டவண்ணம் உள்ளது. இந்த சுமைகளை எதிர்த்து போராடும் மக்களின் உண்மையான போராட்டங்களை திசைதிருப்பியும் அதன் வர்க்க சாராம்சத்தை மூடிமறைத்தும் ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் கோடாரி காம்புகளாக அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் செயல்படுகிறன.
அரசு சார அமைப்புகளின் வர்க்க குணாம்சத்தை பார்க்கும்போது இவர்கள் புதியதொரு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்றே கருதலாம். இவர்கள் பூர்வீக சொத்துடமை அல்லது அரசின் ஊதியத்தை சார்ந்து வாழ்பவர்கள் அல்ல. குறிப்பிட்ட சில முக்கியமான மக்கள் திரள் அமைப்புகளை கட்டுப்படுத்தும் தமது சொந்த ஆற்றலையும் ஏகாதிபத்தியத்திடம் பணம் வாங்குவதையும் சார்ந்து வாழ்பவர்கள். ஒரு புதிய வகைப்பட்ட தரகு கூட்டத்தினர்களே இவர்கள். சமுதாயத்திற்கு அவசியமான எந்த உற்பத்தியிலும் இவர்கள் ஈடுபடுவதில்லை. தமது சொந்த ஆதாயத்திற்காக உள்நாட்டு ஏழ்மையை வைத்து, நிதி உதவி அளிக்கும் எஜமானர்களுக்கு தொண்டூழியம் செய்து பணம் பார்ப்பவர்கள். மொத்தத்தில் ஏகாதிபத்திய தரகு அதிகார வர்க்க கூட்டம் தான் அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள்.
ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்து சவால்விடும் அளவுக்கு பரந்துபட்ட மக்கள் இயக்கங்களின் எழுச்சிகள் நடந்தபோதுதான் அரசு சாரா நிறுவனங்கள் பல்கி பெருகின. ஒரு நாட்டை அடிமைப்படுத்துவதற்கு ஏகாதிபத்தியங்கள் இரண்டு வழிமுறைகளை பின்பற்றுகிறது. ஒன்று, இராணுவ ரீதியாக போரிட்டு அடிமைப்படுத்துவது, இரண்டு, ஏகாதிபத்திய நிதி உதவி பெறும் அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் மூலம் வர்க்கப் போராட்டத்தை நீர்த்துப் போக செய்து தனக்கான பொம்மை ஆட்சியை நிறுவுவது. இவ்வாறு இந்த சுரண்டல் சமூக அமைப்பை கட்டிக் காப்பாற்றும் விதமாக அரசு சாரா தன்னார்வ அமைப்புகளை ஏகாதிபத்தியவாதிகள் ஊட்டி வளர்க்கின்றன.
குறிப்பாக இந்தியாவில் இத்தகைய தன்னார்வ அமைப்புகள் தங்களின் ஆக்டோபஸ் கரங்களை கடந்த 10 ஆண்டுகளாக பலப்படுத்தியுள்ளன. 400 இந்தியர்களுக்கு ஒரு என்.ஜி.. என்ற கணக்கில் 50,000 அரசு சாரா அமைப்புகள் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் 35 லட்சம் என்.ஜி..க்கள் இருக்கின்றனர். இதில் சராசரியாக இவர்களுக்கு ஓராண்டுக்கு ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து வரும் வெளிநாட்டு நிதி மட்டும் 1 லட்சம் கோடியாகும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் அதிக நன்கொடைகளை பெற்ற மாநிலங்களாக முறையே டில்லி ரூ.2,285.75 கோடி, தமிழ்நாடு ரூ.1,704.76 கோடி மற்றும் ஆந்திர பிரதேசம் ரூ. 1,258.52 கோடியாகும். அதிக நன்கொடை பெற்ற மாவட்டங்களிலே ரூ.889.99 கோடி பெற்று சென்னை முதலிடத்தில் உள்ளது. மும்பை ரூ.825.42 கோடியும், பெங்களூரு ரூ.818.48 கோடிகள் பெற்று இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது. பெரும் எண்ணிக்கையில் நிதி வழங்கும் நாடுகளில் முறையே அமெரிக்கா ரூ. 3,838.28 கோடி, இங்கிலாந்து ரூ. 1,219.02 கோடி, ஜெர்மனி ரூ.1,096.01 கோடி வழங்குகின்றன.
இவ்வாறு பெரிய தொகை ஏன் இவர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்றால் உலகமயமாக்கலுக்குப் பிறகு ஏகாதிபத்திய நிர்ப்பந்தத்தின் காரணமாக அரசு மக்களுக்கு செய்யவேண்டிய பல வேலைகளிலிருந்து பின்வாங்கிவிட்டது. கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற துறைகளில் நிதியை வெட்டிவிட்டன. இது மக்களின் அனைத்து வாழ்வுத் துறையிலும் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்த மக்களின் வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்பி அதை அடையாளப் போராட்டமாக மாற்றவும்தான் அரசு சாரா அமைப்புகளுக்கு ஏகாதிபத்தியவாதிகள் பல கோடிகளைக் கொட்டிக் குவிக்கின்றன. ஏகாதிபத்திய தாச கும்பலான அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் செயல்பாடு ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை திடப்படுத்துவதே.
இந்தியாவைப் பொருத்தவரை தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போன்ற அனைத்து வாழ்வுத் துறையிலும் மிகக் கடுமையான நெருக்கடிக்குள்ளான சூழலில், இதற்கான ஒரே தீர்வுதான் உள்ளது. அது என்னவென்றால்? இத்தகைய நெருக்கடிகளுக்கு காரணமான ஏகாதிபத்திய சுரண்டலுக்கு முடிவு கட்டி புதிய காலனிய ஆதிக்கத்தையும் பின்தங்கிய உற்பத்தி உறவுகளையும் மாற்றியமைத்து ஒரு புதிய சமூக மாற்றத்தை நிகழ்த்தும் போதுதான் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.

எனவே நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக அதன் தொங்கு சதையான  அரசு சாரா தன்னார்வ அமைப்புகளையும் எதிர்த்துப் போராடுவது நமது கடமையாகும். அவர்களின் உண்மையான முகத்தைக் காட்டவும் எதிர்த்துப் போராடவும் இந்நூல் ஒரு சரியான பாதையை வகுக்கத் துணைபுரியும்.

Sunday 26 March 2017

மத்திய கங்கைச் சமவெளியில் அரசு மற்றும் வருண உருவாக்கம்


மத்திய கங்கைச் சமவெளியில் அரசு மற்றும் வருண உருவாக்கம்

விலை: 85/-
புதுமை பதிப்பகம்
7200260086

இந்திய சமூக பொருளாதார படிவங்கள் பற்றி, முடிவெடுப்பதற்கான நோக்கத்திலிருந்து பண்டைய இந்திய சமூக பொருளாதார, அரசியல் ஆய்வுகளை புதுமை பதிப்பகம் வெளியிட்டு வருவதன் தொடர்ச்சியாக ஆர்.எஸ்.சர்மாவின் மத்திய கங்கைச் சமவெளியில் அரசு மற்றும் வருண உருவாக்கம்  என்ற இந்த நூலை கொண்டுவருகிறோம்.

இந்தியாவில் குறிப்பாக மத்திய கங்கைச் சமவெளியில் அரசு மற்றும் வருண அமைப்பு எவ்வாறு உருவாகியது என்பதை தொல்லியல் ஆதாரங்களுடன் அவைகள் உருவாவதற்கான உண்மையான பொருளியல் காரணிகளை ஆய்வு செய்யும் நூல் இது.

பண்டைய இந்திய சமூக அமைப்பில் எப்போது தனியார் சொத்துடைமை தோற்றம் பெற்றது என்றால், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் காரணமாக குறிப்பாக NBPW (Northern Black Polished Ware) இரண்டாம் கட்டத்தில் விவசாயத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டபோதுதான் தனிச்சொத்துடைமை தோற்றம் பெற்றது.

விவசாய உற்பத்தியில் இரும்பின் பயன்பாடு அதாவது இரும்பானது உற்பத்தியில் ஆற்றிய பாத்திரம் என்பது வேளாண்மயமாக்கலுக்கும், அதனைத் தொடர்ந்து கைவினைத் தொழில் வளர்ச்சிக்கும்; வர்த்தக நடவடிக்கைகளுக்கும், குடியேற்றப் பகுதிகளின் பரப்பளவு மிகவும் அபரிமிதமாக அதிகரிக்கவும் வழிவகுத்தது.

இதன் பின்னர் ஏற்பட்ட மிகைஉற்பத்திதான் தனிச்சொத்து டைமையை தோற்றுவித்தது. இந்த தனிச் சொத்துடைமை தான் சமனற்ற பங்கீட்டை சமூகத்தில் உருவாக்கியது. இவையே படிநிலையாக்கப்பட்ட வருண சமுதாயத்தின் உருவாக்கத்திற்கான அடிப்படையாகும். தனியார் சொத்துடமையின் தோற்றத்திற்குப் பிறகுதான் தொழில்களின் அடிப்படையில் வருணங்கள் உருவாயின. விவசாயம் மற்றும் தனிச்சொத்தின் அதிகரிப்பிற்கு பிறகு சத்திரிய வருணம் தோன்றிய பின்னர்தான் அரசு ஸ்தாபிக்கப்பட்டது. தனிச்சொத்தின் தோற்றத்தோடு வருணங்களின் உருவாக்கம் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது என ஆர்.எஸ்.சர்மா கூறுகிறார்.

இந்தியாவில் நிலவிவரும் வருணம், சாதிகளை  இந்துமதமும், பார்ப்பனியமும்தான் உருவாக்கின என்ற வாதத்தை இந்நூலின் ஆய்வுகள் ஆதாரபூர்வமாக மறுக்கிறது. வருணம் சாதி இவை அனைத்தும் நிலத்தில் ஏற்பட்ட தனிச்சொத்துடைமையின் அடிப்படையில் அமைந்த உழைப்புப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டவை என்பதை இந்நூல் விளக்குகிறது.

மேலும், இந்தியாவில் ஆசிய உற்பத்திமுறை நிலவியது என்றும் நிலத்தில் தனிஉடமை இல்லை என்றும் பிரிட்டிசார் வரும்வரை இந்திய சமூகம் மாறாநிலை சமூகமாக ஒரு தேங்கிய சமூகமாக இருந்தது என்ற நிலைபாடு தவறு என்பதையும் இந்நூல் தெளிவுபடுத்துகிறது.

மார்க்சிய ஆய்வுமுறையின் அடிப்படையில், தொல்லியல் தரவுகளை முன்வைத்து பண்டைய இந்திய சமூக அமைப்பு முறையை ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார் ஆர்.எஸ். சர்மா. இத்தகைய ஒரு தனிச் சிறப்பான, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நூலை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் புதுமைப் பதிப்பகம் மகிழ்ச்சியடைகிறது. இந்நூலை தமிழில் எளிய நடையில் மொழிபெயர்த்து உதவிய தோழர் வான்முகில் அவர்களுக்கு எமது நன்றி.

பிரதீப்
பதிப்பாளர்

‘திராவிட’ நீதிக் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

‘திராவிட’ நீதிக் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

விலை : 100/-
சமரன் வெளியீட்டகம்
9941611655
7200260086

‘திராவிட’ நீதிக் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் (1916-1946) (The Rise and Fall of the Dravidian Justice Party 1916-1946) எனும் நூலை அதன் ஆசிரியர் ஜே.பி.பி.மோரே அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளார். இச்சிறு நூல் நீதிக் கட்சியின் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய விசுவாசம் பற்றி பேசுவதாலும், நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த பொழுது, ஆந்திரம், கன்னடம், மலையாளம் போன்ற மொழி வழி மாநில கோரிக்கைகள் எழுந்த அளவிற்கு, தமிழ் மொழி வழி மாநில கோரிக்கைகள் எழாமல் போனதற்கு, திராவிடம் என்ற கருத்தியல் தடையாக இருந்தது என்ற சரியான விடயத்தை முன்வைப்பதாலும் இந்நூலை சமரன் பதிப்பகம் வெளியிடுகிறது.  நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழாவினை திராவிட கட்சிகள் கொண்டாடிகொண்டிருக்கும் இவ்வாண்டில், நீதி கட்சியின் உண்மை சொரூபத்தை ஆதாரப்பூர்வமாக நிறுவும் இந்நூலை வெளியிடுவது பொருத்தமானதாகும்.

இந்நூலில் ஆரியம், திராவிடம் என்ற கருத்தியல்கள் ஐரோப்பிய பாதிரிமார்களால் உருவாக்கப்பட்டது என்று சரியாக கூறும் ஆசிரியர், ஆரிய-திராவிட இனவியல் தத்துவத்தை வெறும் பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினையாக குறுக்குகிறார். இந்த நூலை எழுதுவதற்கான நோக்கமாக அவர் பின்வருமாறு கூறுகிறார்:
“மேலும் அறிஞர்கள்-அறிஞர்கள் அல்லாதவர்களிடையில் கி.பி. 1916இல் ஆரம்பிக்கப்பட்ட பிராமணர் அல்லாதார் இயக்கம் ஒரு முழுமையான திராவிட இயக்கம் என்கிற நோக்கம் நிலவி வருகிறது. இதனால் என்னுடைய இந்த நூலில் இந்தக் கூற்று எந்த அளவிற்கு உண்மை என ஆராய்ந்துள்ளேன். கி.பி. 1916 முதல் 1946 வரை செயல்பட்ட பிராமணர் அல்லாதார் இயக்கம், திராவிட இயக்கமாக செயல்பட்டதா செயல்படவில்லையா என்பது பற்றியும் விளக்கியுள்ளேன். அதே சமயத்தில் இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழ் உணர்வு ஏன் பலப்படவில்லை? தனித் தமிழ் மாநில கோரிக்கை ஏன் எழுப்பப்படவில்லை? என்பவை குறித்தும் ஆராய்ந்துள்ளேன். இதற்கு முன்னர் பிரிட்டிஷ் இந்தியாவில் உருவான ‘திராவிடர்’ மற்றும் ‘ஆரியர்’ என்ற சொற்களின் வரலாற்றுப் பின்னணியையும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட ஒரு சில சம்பவங்களையும் உற்றுநோக்குவோம்” என்று கூறுகிறார்.

ஆகவே, ஆசிரியரின் நோக்கம் ஏகாதிபத்திய காலனிய இனவியலைப் பற்றி பேசுவதல்ல. அது குறித்த ஆய்வையும் அவர் செய்யவில்லை. ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் ஆரிய-திராவிட இனவியல் கோட்பாடுகளை வெறும் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாத திராவிட இனச் சண்டையாக குறுக்குகிறார். அத்துடன் ‘ஆரியன்’, ‘திராவிடன்’ என்பதை வெறும் சொற்பிரயோகமாகவும், அவற்றின் சொற்பொருள் காரணங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார். “கல்கத்தா ஏசியாடிக் சொசைட்டியை சேர்ந்த, வில்லியம் ஜோன்ஸ் சமஸ்கிருதம் இலத்தீன், பாரசீகம் மற்றும் கிரேக்க மொழியின் ஆரம்ப வேர்கள் ஒன்றாகும் என்றும், இந்த நான்கு மொழிகளுக்கிடையே நிறைய உறவுகள் உண்டென்றும் அறிவித்தார். இம்மாதிரி மொழிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் முறையால் பிறந்ததுதான் இந்தோ-ஐரோப்பிய (அ) இந்தோ-ஆரிய மொழிகளின் குடும்பம்” என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

மேலும் கால்டுவெல்லைப் பற்றி கூறும்போது, “திராவிடா என்ற சொல்லை அனைத்து தென் இந்தியாவையும் (அ) அனைத்து தென்னிந்திய மொழிகளையும் குறிக்க உபயோகப்படுத்தியதன் மூலம் கால்டுவெல் தமிழ்நாட்டையும் தமிழையும் குறிக்க ‘தமிழ்’ என்ற சொல் பலப்படுவதற்கு வழிவகுத்தார்” என்று கூறுகிறார். இக்கூற்றுகளிலிருந்து நாம் அறிவது யாதெனில் ‘ஆரியன்’, ‘திராவிடன்’ என்று, சொல்லாராய்ச்சி மட்டும் செய்கிறாரே தவிர, இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம் எனவும், திராவிட மொழிக் குடும்பம் எனவும் வகைப்படுத்தி, அதை இனங்களுக்குப் பொருத்தி ஆரிய திராவிட இனவியல் கோட்பாடுகளை காலனி ஆதிக்கவாதிகள் உருவாக்கினர் எனும் கண்ணோட்டம் அவரிடம் இல்லை. ஆந்திர அறிஞர் மமடி வெங்கய்யா பற்றி கூறும்போது, அவர் தெலுங்கு மொழிவழி மாநிலத்திற்கு போராடினார் என்று கூறுகிறாரே தவிர, அவர் கால்டுவெல்லின் திராவிட மொழிக்குடும்பக் கொள்கையை மறுத்து, “தெலுங்கு மொழியின் வேர்ச் சொல்லும், தமிழின் வேர்ச் சொல்லும் வேறு வேறு. திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து தெலுங்கு வரவில்லை” என்று பேசியதை கவனத்தில் கொள்ளவில்லை. ஆகவே, மொழிக்குடும்பக் கொள்கை பற்றிய அவரது பார்வை குறுகலானதாகவும், அதை காலனிய இனவியல் கொள்கையிலிருந்து பிரித்துப் பார்க்கும் பார்வையுடையதாகவும் உள்ளது. அதனால்தான், ஏகாதிபத்திய காலனி ஆதிக்கக் கொள்கைகளாக ஆரிய-திராவிட இனவியல் கோட்பாடுகளைப் பார்க்காமல், வெறும் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாத திராவிட மோதலாக மட்டுமே பார்க்கும் கண்ணோட்டம் அவரிடம் தென்படுகிறது. இறுப்பினும் இந்த நூலை வெளியிடுவதற்கான காரணம் என்ன? நீதிக்கட்சியின் ஏகாதிபத்திய அடிமைத்தனம் பற்றிய ஆசிரியரின் கருத்து புறக்கணிக்கக் கூடியதல்ல. அதேசமயம், ஆரிய மேன்மைக் கோட்பாடு மற்றும் அதன் ஏகாதிபத்திய சார்பு அரசியல் இயக்கங்களைக் குறித்த அவரது மௌனம் விமர்சனத்திற்கு உரியதாகும். ஆகவே விமர்சனத்துடன் இந்த நூலை வெளியிடுகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் இந்த ஆரிய-திராவிட இனம் குறித்த விவாதத்தின் தேவை என்ன? பதில் எளிமையானது.

ஒரு புறம், இந்து ராஷ்டிரம்-இந்துத்துவப் பாசிசம் போன்ற மிகப் பிற்போக்கான அபாயகரமான ஜெர்மானிய வகைப்பட்ட ஆர்.எஸ்.எஸ். கும்பலின் ஆரிய இனவாதம் தீவிரம் பெற்றுவருகின்றது மறுபுறம், அதை எதிர்ப்பது என்ற பேரில் பிற்போக்கான திராவிட இனவாதம் முன்வைக்கப்படுகிறது. ஆரிய குத்தீட்டிக்கு எதிராக திராவிடத்தை முன்வைத்த கால்டுவெல்லை போர்வாளாக முன்வைப்பது என்ற போக்கு தலைதூக்குகிறது. ஆனால், இவ்விரண்டு இனவியல் கோட்பாடுகளுமே ஏகாதிபத்திய காலனி ஆதிக்கத்திற்கு சேவை செய்கின்றன; இவை ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் இந்துத்துவப் பாசிச எதிர்ப்பு முன்னணியைக் கட்ட தடையாக உள்ளன. எனவேதான் இந்த இனவியல் கோட்பாடுகளின் பொருளியல் அடிப்படையைப் புரிந்து கொண்டு விவாதிப்பதும், அம்பலப்படுத்தி அவற்றை முறியடிப்பதும் அவசியமானது. ஆகவே, ஏகாதிபத்திய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் இந்த ஆரிய-திராவிட மொழியியல்-இனவியல் கோட்பாடுகளின் தோற்றம் பற்றி வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் புரிந்து கொள்வது அவசியமாதலால் அது குறித்து சுருக்கமாக பார்ப்போம்.

காலனிய இனவியல் கோட்பாட்டுக்கான 
பொருளியல் அடிப்படை

15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ ஆட்சிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு ஜெர்மனி, பிரிட்டன். பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் டச்சு உள்ளிட்ட 15 நாடுகளில் முதலாளித்துவ ஆட்சிகள் உருவாயின. அந்த 15 நாடுகளிலும் தத்தமது தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட 15 தேசிய அரசுகள் உருவாயின. அந்நாடுகளில் கிழக்கிந்திய கம்பெனிகள் போன்ற முதலாளித்துவ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அத்தகைய நிறுவனங்கள் அனைத்தும் வணிக முதலாளித்துவ பிரிவுகள் ஆகும். அவை நாடு பிடிக்கும் போரில் இறங்கின. காலனிய நாடுகளுக்கு வந்தவுடன் அவர்கள் செய்த முதல் பணி புராதன மூலதனச் சேர்க்கையில் ஈடுபட்டதாகும். புராதன மூலதனச் சேர்க்கை என்பது முதலாளித்துவ வழியில் மூலதனம் சேர்ப்பது அல்ல. அதாவது முதலாளித்துவ முறையில் மூலதனம் போட்டு தொழிலாளர்களின் கூலி உழைப்பின் ஒரு பகுதியை மூலதனமாகச் சேர்ப்பது என்ற கோட்பாட்டிற்கு மாறான வழியில் இரு வர்க்கங்களை உருவாக்கினார்கள். ஒன்று கொள்ளையடிப்பதன் மூலம் மூலதனத்தைக் குவித்து முதலாளி வர்க்கத்தையும், அடிமை முறைகளை உருவாக்குவதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தையும் உருவாக்கினார்கள்.

முதலில் முதலாளிகளை உருவாக்குவது என்பதை, காலனிய நாடுகளின் செல்வங்களைக் கொள்ளையடித்து அதன்மூலம் முதலீடு செய்யும் வர்க்கமான முதலாளித்துவ வர்க்கங்களை உருவாக்கினர். இது ஆதி திரட்சி எனப்படும். அதாவது செல்வங்களைக் கொள்ளையடித்து மூலதனத்தைக் குவித்தனர். இரண்டாவதாக மனிதர்களைக் கொள்ளையடித்து அடிமைத் தொழிலாளர்களை உருவாக்கினர். இத்தகைய தொழிலாளர்களை உருவாக்குவதில் இரண்டு முறைகள் இருந்தன. ஒன்று, ஐரோப்பாவைப் பொறுத்த வரை நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து முதலாளித்துவ வர்க்கத்தை உருவாக்குவதன் வாயிலாக விவசாயிகளின் உடமைகளை நீக்கி தொழிலாளர்களை உருவாக்கினர். அது முற்போக்கானதும் புரட்சிகரமானதும் ஆகும். அது நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த ஜனநாயகப் புரட்சி எனும் அடிப்படையில் அமைந்ததாகும். ஆனால் இந்தியா உள்ளிட்ட காலனிய நாடுகளில் நுழையும்பொழுது தொழிலாளர்களை அடிமைப்படுத்துவதன் மூலம் அடிமைத் தொழிலாளி வர்க்கத்தை உருவாக்கும் வேலையைச் செய்தனர். அவர்களை சிறைப்பிடித்து கொட்டடியில் அடைத்து தமது நாடுகளுக்கும் பிற காலனிய நடுகளுக்கும் ஏற்றுமதி செய்தார்கள். இவ்வாறாக ஓர் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். இந்த அடிமை வியாபாரத்தை நியாயப்படுத்துவதற்கென்றே இங்கு இனவாதத்தை முன்வைத்தார்கள்.

இது குறித்து, கார்ல் மார்க்ஸ், தனது மூலதனத்தின் முதல் தொகுப்பில் 31-வது தலைப்பில் ப-1011-இல் புராதன மூலதனச் சேர்க்கை என்ற பகுதியில், விரிவாக எழுதியுள்ளார். அதில் காலனி ஆதிக்கத்தின் கீழ் அடிமை முறைகளை உருவாக்கியதற்கான பொருளியில் அடித்தளம் பற்றி விளக்குகிறார். கொள்ளையடிப்பதன் மூலம் மூலதனத்தை சேர்ப்பதையும், அடிமைப்படுத்துவதன் மூலம் கூலித்தொழிலாளர்களை உருவாக்குவதையும் விளக்குகிறார். தொழிலாளர்களை, அடிமை வியாபாரத்தின் மூலம் ஏற்றுமதி செய்யும் முறைகளைப் பற்றி மார்க்ஸ் கூறுகையில், நேரடியாக “கிறிஸ்துவ காலனியாதிக்கம்” என்ற வாக்கியத்தைப் பயன்படுத்துகிறார். கிறிஸ்துவ பாதிரியார்களின் வாதங்களையே மேற்கோள்காட்டி, “கிறிஸ்துவ காலனியம்” என்பதை விளக்குகிறார். திருச்சபைகளே அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டதை எடுத்துக்காட்டுகிறார். கிறிஸ்துவத்தையே தனது வாழ்வாகக் கொண்ட வில்லியம் ஹோவிட் எனும் பாதிரியார், கிறிஸ்துவ காலனியாதிக்கம் பற்றிக் கூறியதை பின்வருமாறு மேற்கோள் காட்டுகிறார் மார்க்ஸ்.

“கிறிஸ்துவ இனத்தார் எனப்படுவோர் உலகின் எல்லா மண்டலங்களிலும் தம்மால் அடிமைப்படுத்த முடிந்த எல்லா மக்கள் சமூகங்கள் மீதும் காட்டுமிராண்டிச் செயல்களையும், வெறித்தனமான அட்டூழியங்களையும் புரிந்துள்ளனர். வேறு எந்த இனத்தாரும், அவர்கள் எவ்வளவு தான் மூர்க்கமானவர்களாகவும், நெறி புகட்டப் பெறாதவர்களாகவும் இருந்தாலும், கருணை வெட்கம் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்களாக இருந்தாலும் சரி, உலக வரலாற்றின் எந்தக் காலத்திலும் இவற்றிற்கு இணையான அட்டூழியங்கள் புரிந்ததில்லை.”

இவ்வாறு தொழிலாளர்களைக் கைது செய்து, அவர்களை ஏற்றுமதி செய்து கிறிஸ்துவத் திருச்சபைகள் ஏலம் விடுவது எவ்வளவு கொடூரமானது என்பது வரலாற்றுரீதியாக விளக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்கு அனுப்பியது பற்றி வரலாற்றுரீதியாக எடுத்துரைக்கப்படுகிறது. இதை முதலில் போர்த்துகீசியர்கள் தான் பரங்கிப்பேட்டையில் ஆரம்பித்தனர் என கூறப்படுகிறது. காலனிய முறை என்பது எவ்வாறு இனவாதத்தால் உருவாக்கப்பட்டது என்பதும், இனவாதத்தின் மூலம் எப்படி அடிமைமுறைகள் உருவாக்கப்பட்டன என்பதும் விளக்கப்படுகிறது.

காலனிய இனவாதத்தை முன்வைக்கும் இவர்கள் யார்? அவர்கள் வணிக முதலாளித்துவவாதிகள், தொழில் முதலாளித்துவப் பிரிவினர் அல்லர். இவர்கள் எதற்காக இதைச் செய்தார்கள்? எதன் அடிப்படையில் செய்தார்கள்?

முதலாளித்துவ முறைக்கு விரைவாக மாறிச்செல்லும் பொருட்டு, அதாவது நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு மாறிச் செல்லும் நிகழ்வுப்போக்கை விரைவுபடுத்தும் பொருட்டே இத்தகைய காலனிய முறைகளைப் பயன்படுத்தினர். காலனிய இனவியலை விமர்சனம் செய்யும் பல ஆய்வாளர்களும் இனவியலின் இந்தப் பொருளியல் அடித்தளத்தை எடுத்துக் காட்டுவதில்லை. அதை வெறும் மத அடிப்படையில், மத ஒடுக்குமுறை வடிவமாக மட்டுமே இக்கொள்கைகள் செயல்படுத்தப்படுவதாக பார்க்கின்றனர்.

கிழக்கிந்திய கம்பெனிகள் போன்ற வணிக முதலாளித்துவப் பிரிவினர் இத்தகைய அடிமைமுறைகளை உருவாக்குவதற்கு இனவாதத்தை எத்தகைய முறைகளில் கட்டியமைத்தனர்? முதலாவதாக உடலியல் கூறுகளைக் கொண்டு அதாவது நிறம், முகத்தோற்றம், மூக்கின் நீளம் ஆகியவற்றைக் கொண்டு மக்களை ஆண்டான் அடிமைகள் என வகைப்படுத்தினர். இதன் மூலம் அடிமைமுறைகளைப் புகுத்தினர். இந்த அடிமைமுறைகளுக்கான அடிப்படை பழைய ஏற்பாட்டின் பைபிள் கதைகளிலேயே அடங்கியுள்ளது. நோவா பெருவெள்ளம், ஹாம் சந்ததியினர் மீதான சாபம், பேபல் கோபுரம் போன்ற பழைய ஏற்பாட்டின் பைபிள் கதைகளை காலனியாதிக்கக் கொள்கைகளாகப் பயன்படுத்தினர். பெருவெள்ளம் வடிந்த பிறகு, திராட்சை இரசம் அருந்தி ஆடையின்றிக் கிடந்த நோவாவைப் பார்த்து பரிகசித்துவிட்ட அவரது மகன் ஹாமும் அவரது சந்ததியும், மற்ற இரு மகன்களான ஷெம், ஜெப்பேது-வின் சந்ததியினருக்கு அடிமைகளாகக் கடவது என்பதே சாபம்.

ஹாம் சந்ததியினர் கருப்பு நிறத்தார், அழகற்ற உடலியல் கூறுகளைக் கொண்டவர்கள்; அவர்கள் வெள்ளைநிற, அழகான உடலியல் கூறுகளைக் கொண்ட அவரது சகோதரர்களின் வம்சத்திற்கு அடிமைகளாக சேவை செய்து தமது பாவத்தை போக்கிகொள்ள வேண்டும் என்று கூறினர். பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பித்த மோசேவின் இனவியல் தர்மம், மனுவின் வர்ண தர்மத்திற்கு நிகரானது.

இரண்டாவதாக, கிழக்கிந்திய கம்பெனி அரசுகள், மக்களை இனவாத வழியில் பிளவுபடுத்துவது, முரண்பாடுகளை உருவாக்கி அம்முரண்பாடுகளைப் பயன்படுத்துவது என்ற வழியில் தங்களது அரசு அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொண்டனர். மேற்கண்டவாறு நிறம் உள்ளிட்ட உடலியல் கோட்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்துதலைத் தொடர்ந்து மூலமொழி மற்றும் மொழிக் குடும்பம் போன்ற மொழியியலில் கோட்பாடுகளை முன்வைத்து இனங்களை வகைப்படுத்தினர்.
ஆரிய இனவாதம்

வில்லியம் ஜோன்ஸ் எனும் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதி Third Anniversery Discourse Asiatic Reasearches vol -1, 1788 page 415-431 எனும் நூலில் ஒரே வேர்ச்சொல், மூலச் சொற்கள் என்று ஆய்வு செய்து, ஒரே மூலச்சொற்களைக் கொண்டவைகளையெல்லாம் ஒரு மொழிக் குடும்பம் என்று வரையறுத்தார். அந்த வரையறையின்படி இந்தோ ஆரிய மொழிகள் ((Indo-Aryan Languages)) ஒரே மொழிக் குடும்பமாக வகைப்படுத்தினார். இந்த வகைப்படுத்துதலுக்கு அவர் “பேபல் கோபுரக் கதைகளையே” அடிப்படையாக கொண்டார். விவிலியத்தின் பேபல் கோபுரக் கதையின்படி, ஆண்டவருக்கு எதிராக பாபிலோனியர்கள் பேபல் கோபுரத்தை கட்டியதாகவும், அங்கு ஒரே மொழியை பேசியவர்கள் மத்தியில் பல மொழிகளை ஏற்படுத்தி குழப்பத்தை தோற்றுவித்து உலகம் முழுதும் பல பகுதிகளுக்குப் பிரிந்து செல்லுமாறு ஆண்டவர் செய்தார் என்பதே இந்த ஐதீகக் கதையின் சுருக்கமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே மூல மொழிக் கொள்கை மற்றும் மொழிக் குடும்பக் கொள்கையை உருவாக்கினார். ஆரிய மொழிக்குடும்பத்தின் மூலமொழி சமஸ்கிருதம் என்று கூறினார். இம்மொழிகளைப் பேசுவோர் ஒரே இனம்; இந்தோ ஆரிய இனம் என மேக்ஸ் முல்லர் தனது “The Languages of the seat of war in the east -London-william Norgate 1855” எனும் நூலில் வரையறுத்தார். இவ்வாறு இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்பது ஆரிய மொழிக் குடும்பமாக வகைப்படுத்தப்படுகிறது. வேர்ச் சொற்களின் ஒற்றுமை என்ற அடிப்படையில் ஆரிய மொழிக் குடும்பத்தை வரையறை செய்ததோடு மட்டுமின்றி, காலனியாதிக்கத்தை திணிப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் ஆரிய மேன்மை-ஆரிய மேலாதிக்கக் கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. அதாவது ஆரியர்கள்தான் உயர்ந்தவர்கள்; ஆளப்பிறந்தவர்கள்; அவர்கள்தான் உலகத்தில் நாகரீகத்தையும் பண்பாட்டையும் கொண்டுவந்தவர்கள் என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. இங்ஙனம் ஐரோப்பிய காலனிய மேலாதிக்கத்திற்கு ஆரிய மேன்மை என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஆரிய மொழிக் குடும்பத்தின் மூலமொழித் தேடலின்போது, சமஸ்கிருதமே மூலமொழி என்று கூறி இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தில் சமஸ்கிருதத்தையும் இணைத்துக்கொண்டு, இந்தியாவிலிருந்த ஆரியரையும் இணைத்துக் கொண்டு ஆரிய மேன்மை பேசினர்.

பின்பு காலனிய ஆதிக்கமும்-காலனிய ஆட்சியும் தோன்றிய பிறகு, இனத்தூய்மை பேசி ஜெர்மன் இனம்தான் உண்மையான ஆரிய இனம் என்று கூறி, இந்தியாவிலுள்ள ஆரியர்களை-அதாவது பார்ப்பனர்களை ஆரியர்களாகக் கருதவில்லை. இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம்-அதாவது பார்ப்பனர்களிடையே சாதிமுறையும், உருவ வழிபாடும் தோன்றி எல்லாவிதப் பிற்போக்கும் வந்து விட்டதால் இவர்களை ஆரியர்களாக ஏற்க முடியாது என்றனர்; அதாவது ஆரியத் தூய்மையை இழந்துவிட்டனர் என இவர்களை கீழ்நிலைக்குத் தள்ளி இவர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தத் துவங்கினர். ஜெர்மனியில்தான் ஆரியத் தூய்மை நிலவுகிறது; எனவே உலகத்தை ஆளப் பிறந்த இனம் ஜெர்மானிய இனம்தான் எனும் கோட்பாட்டை நிறுவினர். ஆரிய மொழி அல்லாத பிற மொழிகளையும், பிற மொழிக் குடும்பங்களையும், இந்தியாவைச் சார்ந்த பார்ப்பனர்களையும் ஆரியர்களுக்கு அடிமைகளாகவே பார்த்தனர். ஆனால் பார்ப்பனர்களோ தாங்களும் ஆரியர்கள்தான் என்று உரிமை கோரி பெருமை கொண்டாடுகிறார்கள். ஏகாதிபத்தியவாதிகள் இவர்களை எட்டி உதைத்தாலும் உதைத்த காலை நக்கிப் பிழைக்கிறார்கள்.
காலனியாதிக்கத்தின் நுகத்தடிக்குள் பார்ப்பனர்களைக்கொண்டு வந்து அடிமைப்படுத்தவேண்டும் என்பதால் அவர்களை ஆரியர்களாகக் கருதவில்லை. காலனியாதிக்கவாதிகள் இவர்களை கீழ்நிலைக்குத் தள்ளினாலும் தாங்களும் ஆரியர்கள்தான் என உரிமை கோருவது இவர்களிடம் உருவான தரகுசித்தாந்தத்தையே காட்டுகிறது. பார்ப்பனர்கள் உயர்மட்டத்தில் இருந்த நிலை என்பது போய் அவர்கள் ஆரியர்கள் இல்லை என அவர்கள் இழிவுபடுத்தினாலும் நாங்களும் ஆரியர்கள்தான் என இவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால் ஆரியர் என்றால் அது ஐரோப்பிய ஆரியர்களைத்தான் குறிக்கும். பார்ப்பனர்களை அல்ல.

இக்கோட்பாட்டிற்கு பலம் சேர்க்கும் விதமாக “தூய இனவாதத்தை” கோபினியு தனது “மனித இனங்களின் சமத்துவமின்மை குறித்த கட்டுரைகள் (1853-55)” எனும் நூலில் முன்வைத்தார். அவர் பின்வருமாறு கூறுகிறார்: “வெள்ளை இனம்தான் அனைத்து பண்டைய நாகரிகங்களுக்கும் ஆதாரமானது. வெள்ளை இனத்துடன் பிற இனங்கள் கலந்ததே அனைத்து நாகரிகங்களும் அழிவதற்குக் காரணம். இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மானிய இனம் மட்டுமே தூய்மையானது”. இந்தக் கோட்பாடே, நாஜிக் கட்சி உருவாவதற்கு காரணம் ஆனது. இதைக் கொண்டே கோல்வால்கர் இங்கு இனத்தூய்மையைப் பேண இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும் என இந்துத்துவ பாசிசம்-இந்து ராஷ்டிரத்தை முன்வைத்தார்.

இந்தியாவிற்கு வரும்பொழுது, ஆரிய மொழிக் குடும்பம்-சமஸ்கிருதம் அல்லாமல் பிற மொழிகள் பேசுவோரும்  வாழ்ந்து வந்தனர். அம்மொழிகள் ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை அல்ல. அவை ஆரிய மொழிக் குடும்பத்திற்கு கீழானவைகளாக கருதப்பட்டன. அதேபோன்று காலனியாதிக்கவாதிகள் பல நாடுகளுக்குச் சென்றனர்; ஆப்பிரிக்க கண்டத்திற்குச் சென்றனர். இந்த நாடுகளிலுள்ள மக்களை இந்த ஆய்வு அடிப்படையிலான இனவாதக்கோட்பாட்டின் அடிப்படையில்தான் அடிமைகளாக மாற்றினர். அத்துடன் ஆரிய மூலத்திற்கு பழைய ஏற்பாட்டின் மூன்று ஐதீகக் கதைகளைப் பயன்படுத்தினர். நோவா, ஊழிப்பெருவெள்ளம், பேபல் கோபுரம் போன்ற கதைகளின் அடிப்படையில் காலனியாதிக்கக் கோட்பாடுகளை உருவாக்கி காலனியாதிக்கத்தை-காலனிய அரசுகளை நிறுவினர்.

ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் உலகின் பல இடங்களில் காலனிகளை உருவாக்கிய பொழுது, அவர்களின் மிஷினரிகளும் வியாபாரிகளும் மேற்கின் பண்பாட்டிற்குத் தொடர்பற்ற வேறு விதமான கலாச்சாரங்களையும் மனித சமுதாயங்களையும் எதிர்கொண்டனர். நோவாவின் மூன்று மகன்கள் மற்றும் அவர்களுடைய சந்ததிகள் குறித்த ஐதீகக் கதைகளுக்குள் உலகின் பிற பண்பாட்டு சமுதாயங்களை அடைக்கும்படியான விவரணைகளை அவர்கள் உருவாக்கினார்கள். உதாரணமாக, இந்தியாவின் பூர்வகுடி ஆரியர்கள் ஹாமின் சந்ததிகள் எனவும், பெரு வெள்ளம் வடிந்த பிறகு அவர்கள் இந்தியாவிற்கு குடியேறினர் எனவும், பிரிட்டிஷ் காலனியாதிக்கம் என்பது அவர்களை மீண்டும் விவிலியத்திற்குள் மீட்கவே எனவும் கதைகளைப் புனைந்தனர். இராமனை ஹாமின் சந்ததியான ராஹ்மா-உடன் ஒப்பிட்டு, வெள்ளம் வடிந்த பிறகு இராமன் தலைமையில் இந்திய மக்கள் இங்கு குடியேறினர் எனவும், பேபல் கோபுரத்தைக் கட்டிய நிம்ரோத் மன்னனே விஷ்ணு அவதாரம் எனவும் கதைகள் எழுதினர்.

ஒவ்வொரு பண்பாடும் தம் தோற்றம் பற்றியும் தன்மைகள் பற்றியும் கொண்டிருந்த தொன்மங்களும் வழக்குகளும் மூடநம்பிக்கைகள் எனவும், முட்டாள்தனமான கதைகள் எனவும் தூக்கி எறியப்பட்டன. ஐரோப்பியர் அல்லாத ஒவ்வொரு பண்பாட்டிற்குமான உண்மையான வரலாற்றை உருவாக்கும் பொறுப்பும் தார்மீகக் கடமையும் ஐரோப்பியர்களின் வரலாற்றுக் கடமை என்று கருதப்பட்டது, இந்த கடமையை நிறைவேற்றும் பொழுது கருப்புத் தோல் கொண்ட மக்கள் அனைவரும் ஹாமின் சந்ததிகளாக வகைப்படுத்தப்பட்டு நாகரீகமற்ற, உயர் பண்பாடு அற்ற, ஒழுக்கத் தன்மையற்ற, அதே சமயத்தில் தந்திரபுத்தியும் வஞ்சகமும் கொண்ட அடிமைகளாக அடக்கி ஆளப்பட வேண்டியவர்களாகக் கருதப்பட்டனர்.

திராவிட இனவாதம்

இந்தியாவில் அதன்பிறகு ஒரு பிரச்சினை எழுகிறது. இந்தியாவைப் பொறுத்த அளவில் ஆரியர்கள் நுழையும் முன்பே சிந்துசமவெளி நாகரீகம் இருந்தது என 1924-இல் கண்டறியப்பட்டது. இங்கு பூர்வகுடிகளான தமிழர்கள், மங்கோலியர்கள் போன்ற இனங்கள் வசித்து வந்தன. இவர்களின் நாகரீகம் ஆரியரின் நாகரீகத்தை விட மேலானதொரு நாகரீகம் ஆகும். ஆரியர் வருகையில் இங்கு நாகரீகம் மேம்பாடு அடையவில்லை. வெள்ளையர் நாகரீகத்தால் இவர்கள் மேன்மையடையவில்லை. மாறாக அவர்களின் வருகையால் இவர்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். ஆகவே, ஆரிய மேன்மைக் கோட்பாடு அடித்து நொறுக்கப்பட்டது.

எல்லிஸ் எனும் காலனியாதிக்கவாதி “தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஒரே வேர்ச்சொல்லைக் கொண்டவை. அவை சமஸ்கிருதத்தில் இருந்து வேறுபட்டவை” என வகைப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதியும், சமய பரப்பாளருமான ராபர்ட் கால்டுவெல் என்பவர், தமிழ், தெலுங்கு, மலயாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளையும் உள்ளடக்கி “திராவிட மொழிக்குடும்பம்” என “தென்னிந்திய(அ) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலில் வகைப்படுத்தினார். இம்மொழிகளைப் பேசுவோர் திராவிட இனம் என சொன்னார். இந்த வாதத்தை ஆந்திராவைச் சேர்ந்த மமடி வெங்கையா எனும் அறிஞர் மறுக்கிறார். “திராவிட தமிழ் மொழியைச் சார்ந்தது அல்ல தெலுங்கு மொழி” என்கிறார் அவர். அதாவது தெலுங்கு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் வேர்ச் சொற்கள் வேறு வேறு; திராவிட மொழிகளிலிருந்து தெலுங்கு வந்ததல்ல; தனித்தனி மொழிகள்தான். ஒரு மொழிக் குடும்பம் என்ற கோட்பாட்டை அவர் ஏற்கவில்லை. ஆரியக் கோட்பாட்டில் ஜோன்ஸ் கும்பலால் என்ன முன்வைக்கப்பட்டதோ அதே கோட்பாட்டையே கால்டுவெல் பேசுகிறார். எனவே திராவிட மொழியியல்- இனவியல் கோட்பாடு ஆரிய மொழியியல்-இனவியல் கோட்பாட்டிற்கு மாறானது அல்ல. அந்த கோட்பாட்டின் அடிப்படையிலியே கால்டுவெல் இக்கோட்பாட்டை முன்வைக்கிறார். நாம் ஜோன்ஸ்-கால்டுவெல் கும்பலின் ஆரிய, திராவிட மொழியியல்-இனவியல் கோட்பாட்டை நிராகரிக்கிறோம்.ஒரே வேர்ச்சொல், இலக்கண ஒற்றுமை என்பதன் அடிப்படையில் ஒரே மொழிக்குடும்பம் (அ) மூல மொழிக்கொள்கை என வரையறுப்பது மார்க்சியத்திற்கு புறம்பானது என ஸ்டாலின் “மொழியியல் குறித்து மார்க்சியம்” ( J.V Stalin -Marxism on Linguistics- 1950 July 20 ) எனும் நூலில் கூறுகிறார்.

அதன் பிறகு, பார்ப்பனர்கள் அல்லது ஆரியர்கள் குறிப்பாகச் சொன்னால் ரிக் வேத கால ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்களா? இங்கேயே பிறந்தவர்களா? வெளியில் இருந்து வந்தவர்கள் எனில் படையெடுத்து வந்தார்களா? ஊடுருவினார்களா? ஆகிய கேள்விகள் எழுந்தன.

கால்டுவெல், ஜோன்ஸ், முல்லர் போன்ற காலனியாதிக்கவாதிகள் ஆரியர்கள் இங்கேயே இருந்தவர்கள் அல்ல என்றும், வெளியில் இருந்து படையெடுத்து வந்தவர்கள் என்ற நிலைபாட்டை முன்வைத்தனர். ஆரியர்கள் திராவிடர்கள் என இரண்டு இனங்களாக வரையறுத்து, இந்திய வரலாற்றையே ஆரிய-திராவிட வரலாறாக முன்வைத்தனர். இவர்கள்தான் மொழியியல் அடிப்படையில் இனத்தை வகைப்படுத்தியவர்கள் ஆவர். அதாவது ஆரிய மொழிகள் பேசுவோர் ஆரிய இனம், திராவிட மொழிகள் பேசுவோர் திராவிட இனம் என வகைப்படுத்தினர். இதனடிப்படையில்தான் பூலேவும், பெரியாரும் நிலை எடுத்தனர். அதாவது ஆரியர்கள் வந்தேறிகள்; படையெடுத்து வந்து இந்திய பூர்வகுடிகளை வென்று அடிமைப்படுத்தினார்கள்; ஆரிய திராவிடப் பகைமை தான் இந்திய வரலாறு என்ற காலனியாதிக்க கோட்பாட்டை ஏற்றனர். பெரியார் மற்றும் பூலேவின் வாதத்தை மறுத்து அம்பேத்கார் சரியான நிலையை எடுத்தார்.

காலனிய இனவாதத்தை மறுக்கும் அம்பேத்கார்

அம்பேத்கார் இது குறித்து “சூத்திரர் யார்?” என்ற நூலில் விரிவாக பின்வருமாறு கூறுகிறார்:
1) ஆரிய இனக் கோட்பாடு அதன் ஒவ்வொரு அம்சத்திலும் தோல்வியடைந்து வருகிறது. அது அறிவியல் கண்டுபிடிப்புகளின் வக்கிரம்.
2) ஆரிய இனம் போன்ற எத்தகைய இனத்தையும் வேதங்கள் அறிய மாட்டா.
3) ஆரிய இனம் இந்தியாவின் மீது படையெடுத்துவந்து இந்தியாவின் பூர்வகுடிகளான தாசர்கள் மற்றும் தஸ்யூக்களை வென்று கீழ்படுத்தினார்கள் என்பதற்கு வேதங்களில் எவ்விதச் சான்றுகளும் இல்லை.
4) ஆரியர்கள், தாசர்கள், தஸ்யூக்கள் இடையிலான வேறுபாடு இன வேறுபாடு என்பதற்கான சான்றுகள் இல்லை.
5) ஆரியர்கள் மேனி வண்ணத்தில் தாசர்கள் தஸ்யூக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் என்ற வாதத்தை வேதங்கள் ஏற்கவில்லை.
மேலும் “மொழிக் குடும்பம் என்ற அடிப்படையில் முன்வைக்கப்படும் இனக்கோட்பாடு தவறு. இவை அனைத்தும் புராணக் கதைகளின் அடிப்படையில் பேசுவது; அறிவியல் பூர்வமானதல்ல. இது இன வகைப்பட்டதல்ல” என்று இந்த நிலைப்பாட்டை எதிர்க்கிறார். மேலும் ரிஸ்லே என்பவர் “வர்ணம்-சாதியே இனம்” என்ற கோட்பாட்டை முன்வைத்தார் (பி பி ஸிவீsறீமீஹ் 1841, 259). அதையும் அம்பேத்கார் மறுக்கிறார். “சாதியே இனமாகாது; மாறாக சாதி சமூக வகைப்பட்டது” என்கிறார். “பஞ்சாபைச் சேர்ந்த பார்ப்பனருக்கும் மதராஸைச் சார்ந்த பார்ப்பனருக்கும் என்ன ஒற்றுமை இருக்க முடியும்? அதேபோல் மதராஸைச் சேர்ந்த பார்ப்பனரும் பறையரும் ஒரே மரபினம் தான்” என மறுக்கிறார். ஆனால் அம்பேத்காருடைய ஆய்வு முறையானது மதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. பொருளியல் அடிப்படையில் அவர் ஆய்வு செய்யவில்லை. இருப்பினும் அம்பேத்கார் சாதியை இன வகையாகப் பார்க்காமல் சமூக வகையாகவே பார்க்கிறார். இது ஒரு சரியான அம்சமாகும். ஆனால் அவரும் தன்னுடைய ஆய்வு முறையில் சமூக பொருளாதார ஆய்வு முறைகளை எடுத்துக்கொள்ளாமல் மதத்தையும், மத இலக்கியங்களையும் மட்டுமே எடுத்துக்கொண்டு ஆய்வு செய்யும் முறையை மேற்கொள்கிறார். அவர் எண்ணமுதல்வாத முறைகள் மூலமே ஆய்வு செய்கிறார். இருப்பினும் இனவாதக் கோட்பாட்டை மறுப்பதன் மூலம் ஒரு நேர்மறையான பாத்திரம் வகிக்கிறார்.

காலனிய இனவாதத்தின் விளைவே 
ஆரிய மாயை திராவிட மாயை 

1) ஆரிய மாயையால், காங்கிரஸில் திலகர் முதல் தியோசபிகல் சொசைட்டியின் அன்னிபெசன்ட் அம்மையார் வரை, பார்ப்பனர்களின் ஆதிக்கத்தையும், பிற்போக்கையும் நிலைநாட்டினார்கள்.

2) ஆரிய மேன்மை, தூய இனவாதத்தால் உருவான ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இந்துத்துவம், ஜெர்மன் பாசிசத்துடன் கூட்டு வைத்துக்கொண்டு இந்துத்துவ பாசிசமாக வடிவம் பெற்றது. இந்து என்பவன் யார்? என்ற பிரசுரத்தில் சாவர்க்கர் தரும் விளக்கம் வருமாறு:

“இந்து என்பவன் இந்தியாவை தந்தை நாடாகவும் (பித்ரு பூமி) புனித நாடாகவும் கருதவேண்டும். இந்திய முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் புனித பூமி அரேபியாவிலும், பாலஸ்தீனத்திலும் இருப்பதால், அவர்கள் பித்ரு பூமியை புண்ணிய பூமியாக கருத இயலாது. கம்யூனிஸ்டுகளுக்கு நாடென்பதே கிடையாது. ஆகவே இவர்களை வெளியேற்றவேண்டும்.”
அதன் பிறகு, 1930 களில், ஜெர்மன் மற்றும் இத்தாலிய பாசிச சக்திகளுடன் கூட்டு வைத்தது இந்த கும்பல். இனத்தூய்மை எனும் பெயரில் யூதர்களைக் கொன்றொழித்தது போலவே, இங்கு இஸ்லாமியர்களைக் கொன்றொழிக்கவேண்டும் என்று கோல்வால்கர் கூறுகிறார். இதை “நாம் அல்லது நமது தேசியத்தை வரையறுத்தல்” எனும் நூலில் அடால்ப் ஹிட்லர் பாணியில் அவர் விளக்குகிறார்:

“இன்று எல்லோரும் ஜெர்மனியின் தேசிய கர்வத்தைப் பற்றி பேசுகிறார்கள். தன் தேசிய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையைத் தக்கவைத்துக்கொள்ள, ஜெர்மனி செமிட்டிக் இனங்களை (யூதர்களை) அழித்து உலகத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அங்கே மிக உயர்ந்த அளவில் தேசிய கர்வம் காணப்படுகிறது. அடிப்படையில் வேறுபாட்டை கொண்டுள்ள இனங்களும் கலாச்சாரங்களும் ஒற்றுமையுள்ள ஒரே அமைப்பாக சேர்ந்து வாழ்வது அநேகமாக முடியாது என்பதையே ஜெர்மனி எடுத்துக் காட்டுகிறது. இந்துஸ்தானில் இருக்கும் நமக்கு கற்கவும் லாபம் அடையவும் அது ஒரு நல்ல பாடம்.”

இந்த பிற்போக்கான தத்துவத்தைக் கொண்டே இசுலாமியர்களைக் கொன்றொழித்து வருகிறது இந்தக் கும்பல்.

3) திராவிட மாயை மற்றும் திராவிட இனவாதத்தின் விளைவாக தமிழ் தேசிய இனத்திற்கும், அதன் சுயநிர்ணய உரிமைக்கும் பெருங்கேடு ஏற்பட்டது. பெரியார், காங்கிரசில் இருந்தபொழுது தேசியவாதியாக இருந்தார். அக்கட்சியில் இருந்த பிற்போக்குத்தனம் மற்றும் பார்ப்பனிய ஆதிக்கத்தால் வெளியேறி சுயமரியாதை இயக்கம் துவங்கினார். வர்ணாசிரம எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சுயமரியாதை போன்ற அவரது நடவடிக்கைகள் சரியான ஒன்றே ஆகும். பிறகு சிங்காரவேலர் மற்றும் ஜீவாவின் நட்பால் சோஷலிச சமதர்ம கருத்துக்கள் பேசத்துவங்கினார். ரசிய பயணத்திற்குப் பிறகு அது தீவிரமடைந்து, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு சென்றார். இதுவும் அவரின் சரியான அம்சமே ஆகும். சீர்திருத்தவாதியாக இருந்தவரை அவரை அனுமதித்த பிரிட்டிஷ் அரசு, அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்துகளை அனுமதிக்கவில்லை. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அரசின் அச்சுறுத்தலுக்குப் பயந்து, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோஷலிசக் கருத்துகளை அவர் கைவிட்டார். பிறகு நீதிக்கட்சியில் இணைந்து ஏகாதிபத்திய தாசராக மாறினார். சமதர்மப் பாதையைக் கைவிட்டதற்கான காரணம் குறித்து பெரியார் இவ்வாறு கூறுகிறார்:

“சர்க்கார் வலிமையானது. அது நம்மை அடக்கி ஒடுக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டதால் இனி புத்தியுடன் செயல்படவேண்டியுள்ளது. ....ஆகவே சுயமரியாதை இயக்கமே இன்றைய தேவை. ....இது ஜீவா மற்றும் சிங்காரவேலருக்கு பிடிக்காது. என்ன செய்வது? வேறு வழி இல்லை”
என தனது சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்தினார். இவ்வகையில் காவுத்ஸ்கி, பிரசந்தா, பெரியார் மூவரும் ஒன்றே. தனது ஏகாதிபத்திய அடிமைத்தனத்திற்கு பின்வருமாறு விளக்கம் தந்து, தனது சுயமரியாதையின் வர்க்கப் பண்பை வெளிப்படுத்துகிறார்:

“வெள்ளைக்காரன் காலை நக்கியவர்கள் என்று நீங்கள் எங்களை கேவலமாகச் சொல்லலாம். பார்ப்பான் காலை விட வெள்ளைக்காரன் கால் சுத்தமானது. அது சாக்ஸ் போட்ட கால்-சுத்தமாக இருக்கும். இதை நக்குவதைவிட அதை நக்குவது என்பது நல்லது என்று பெரியார் தனக்கே உரிய பாணியில் ஓங்கி அடித்து பதில் சொன்னார்.” (வீரமணி, மொழியால் தமிழர், இனத்தால் திராவிடர். தி.மு.க வெளியீடு.பக்கம் 65) ஆம்! கொள்கையைத் துறப்பதற்கும் துணிவு வேண்டும் அல்லவா?
ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பகத்சிங்கும் அவரது தோழர்களும் இரத்தச் சரித்திரம் எழுதிக் கொண்டிருந்தபொழுது, நீதிக்கட்சி இங்கு எச்சில் சரித்திரம் எழுதிக் கொண்டிருந்தது .

இங்கு ஏற்கனவே நிலவிவந்த பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் பூசல், கால்டுவெல் வருகைக்கு பின்பே ஆரிய-திராவிட இனவாத வடிவம் பெற்றது. இரண்டுமே காலனி ஆதிக்க அடிமைத் தத்துவங்களே. கற்பனையான பழைய பிற்போக்கு பைபிள் கதைகளை அடிப்படையாகக் கொண்டு காலனி ஆதிக்கவாதிகள் உருவாக்கிய இந்த ஆரிய-திராவிட இனவாதத் தத்துவங்களை நீதிக்கட்சியும், பெரியாரும், அண்ணாதுரையும் வரித்துக் கொண்டனர்.

இந்த திராவிட இனவாதம்தான், இந்தியாவை மூன்றாகப் பிரிக்கும் இந்துஸ்தான், திராவிடஸ்தான், பாகிஸ்தான் எனும் இனவெறிக் கோட்பாடுகளுக்கு இட்டுச்சென்றது. பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரம் மாற்றப்பட்ட பிறகு, மொழிவழி மாநிலம் அமைந்தது. பொது மொழியும் பிரதேசமும் அற்ற திராவிட தேசியம் காலாவதியான பிறகு அண்ணாதுரையால் திராவிட இனவாதம் பின்வருமாறு மறுவரையறை செய்யப்பட்டது: “வர்ணாசிரமத்தை ஏற்பவர்கள் ஆரியர்கள். ஏற்காதவர்கள் திராவிடர்கள்” என முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு, காலனியாதிக்க ஆதரவு திராவிட மரபினவாதம், தமிழ் தேசிய இன சுயநிர்ணய உரிமைக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் பெருங்கேடு ஏற்படுத்தியது. இந்தி மொழி எதிர்ப்பு எனும் பெயரில் பிவீஸீபீவீ ழிமீஸ்மீக்ஷீ ணிஸீரீறீவீsலீ ணிஸ்மீக்ஷீ என்று ஆங்கில மொழி அடிமைத்தனத்திற்கும், ஆங்கில மொழியை நிலையான ஆட்சி மொழியாக்கும் நிலைக்கும் இட்டுச் சென்றது. மேலும் செம்மொழி எனும் கூப்பாடு தமிழுக்கு இவர்கள் செய்த துரோகத்தை மூடிமறைப்பதேயாகும். திராவிடக் கட்சிகள் இந்துத்துவப் பாசிச கும்பலுடன் கைகோர்த்து மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என காலனி ஆதிக்கத்திற்கு சேவை செய்கின்றன.

ஆகவே, ஆரிய-திராவிட மாயை இரண்டுமே அன்றும் இன்றும் என்றும் காலனிய இனவியலுக்கு சேவை செய்பவையே ஆகும். அன்று பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு சேவை செய்தன; இன்று அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் சேவை செய்கின்றன. வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்கின்றன. ஆரியம் திராவிடம் இரண்டும் ஏகாதிபத்தியம் கள்ளத்தனமாக ஈன்றெடுத்த இரட்டைக் குழந்தைகள் ஆகும். ஒன்று வெள்ளைக் குழந்தை; இன்னொன்று கருப்புக் குழந்தை. ஒன்று காவி மடம்; இன்னொன்று கருப்பு மடம். இவையிரண்டையும் முறியடிப்பதன் மூலம் மட்டுமே மொழிவழி தேசியத்தை கட்டியமைக்க முடியும்; கட்டியமைக்க வேண்டும். இதை ஆழமாக மனதில் நிறுத்தியே, மூரேவின் இந்த நூலை வாசிக்க வேண்டும்.


சமரன்

மாபெரும் விவாதம்

மாபெரும் விவாதம்


விலை: 650/-
புதுமை பதிப்பகம்
7200260086


இந்தியாவில் கம்யூனிச இயக்கங்களின் நிலையைப் பற்றி கூறவேண்டும் என்றால் நமக்கு 1908 ஆம் ஆண்டின் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைதான் நினைவுக்கு வருகிறது.

1908 ஆம் ஆண்டு முதல் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேக்க நிலையின் பிரதானக் காரணம் கலைப்புவாதமே என்று லெனின் வரையறை செய்தார். கலைப்புவாதத்தை முறியடித்த பிறகுதான் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சி அடுத்த கட்டத்திற்குச் சென்று மாபெரும் நவம்பர் புரட்சியை நடத்தி முடித்தது.

இன்றைக்கு இந்தியாவில் கம்யூனிச இயக்கங்கள் பலவீனப்பட்டு கிடப்பதற்கு மிக முக்கியமான காரணம் கலைப்புவாதமே. இந்தக் கலைப்புவாதத்தை முறியடிக்காமல் கம்யூனிச இயக்கங்களின் வளர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.

கலைப்புவாதம் என்றால் கம்யூனிஸ்ட் கட்சியை அனைத்துத் துறையிலும் மார்க்சிய லெனினியத்திற்கு எதிரான சித்தாந்தங்களை முன்வைத்துக் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழித்துக் கட்டுவதுதான் கலைப்புவாதத்தின் சாரம். அதாவது தத்துவத் துறையில் இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திற்குப் பதிலாக எண்ணமுதல்வாதத்தை முன்வைப்பது, அரசியல் துறையில் ஏகாதிபத்தியம் பாட்டளிவர்க்க புரட்சிகர சகாப்தம் பற்றிய லெனினியக் கோட்பாடுகள் பொருந்தாது என்று கூறி அதீத ஏகாதிபத்தியம் என்ற காவுத்ஸ்கி நிலைபாட்டை முன்வைப்பது மற்றும் அமைப்புத் துறையில் கம்யூனிஸ்டுக் கட்சியை ஒரு வெளிப்படையான முதலாளித்துவக் கட்சியாக மாற்றிவிடுதல் ஆகியவையே. இந்தக் கலைப்புவாதத்திற்கு சேவை செய்வதுதான் நவீன திருத்தல்வாதம்.

நவீன திருத்தல்வாதத்தின் ஆணி வேர் எங்கு உள்ளது? ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரசில் குருசேவ்வால் முன்வைக்கப்பட்ட அறிக்கைதான் நவீன திருத்தல்வாதத்தின் அடிப்படையாகும்.
குருச்சேவ் தலைமையிலான 20வது காங்கிரஸ் அறிக்கையில், உலக நிலைமைகளில் “புரட்சிகர மாற்றங்கள்” ஏற்பட்டுள்ளன என்ற சாக்குப்போக்கின் அடிப்படையில், குருச்சேவ் “சமாதான வழியில் மாற்றம்” என்ற கோட்பாட்டை முன்வைத்து, “பாராளுமன்றப் பாதையின் மூலம்” முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்வது சாத்தியமாகியுள்ளது என்று கூறினார்.

சாராம்சத்தில் இந்தத் தவறான கோட்பாடு, அரசு மற்றும் புரட்சி பற்றிய மார்க்சிய லெனினிய போதனைகளின் தெளிவான திரிபு ஆகும். இதன் தொடர்ச்சியாக ஏகாதிபத்தியம், போர், அமைதி பற்றிய லெனினிய போதனைகளைக் கேள்விக்குள்ளாக்கி “அமெரிக்க அரசாங்கமும்; அதன் தலைமையும் யுத்தத்தை எதிர்க்கும் சக்திகளேயன்றி, அவை யுத்தத்தை உருவாக்கும் ஏகாதிபத்தியச் சக்திகளின் பிரதிநிதிகள் அல்ல” என்று கூறித் தனது ஏகாதிபத்தியத் தாசத் தன்மையை வெளிப்படுத்தினார் குருச்சேவ்.
குருச்சேவ்வின் நவீன திருத்தல்வாதத்திற்கு இரையாகி உலக முழுவதிலும் உள்ள கம்யூனிச இயக்கங்கள் பெரும் பின்னடைவும், பிளவும் சந்தித்தன. இதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கல்ல.

மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேசப் போக்கைக் குறித்து ஒரு சரியான திசை வழியை முன்வைத்து, ஸ்டாலின் எதிர்ப்பு என்ற பெயரால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு, மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளை திருத்தியதன் மூலம் தனது ஏகாதிபத்திய ஆதரவை வெளிப்படுத்திய குருச்சேவ்வின் நவீன திருத்தல்வாதத்தை முறியடித்து மார்க்சிய லெனினியத்தை உயர்த்திப் பிடித்து முன்வைக்கப்பட்ட மாபெரும் கருத்தாயுதம்தான் இந்த “மாபெரும் விவாதம்” நூல்.

இந்நூல் 1988 ஆம் ஆண்டு கேடயம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டது. இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் புரையோடிப் போயுள்ள, நவீன திருத்தல்வாதத்தை எதிர்த்த போராட்டத்தின் தேவையைக் கருதி இந்நூல் புதுமைப் பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. இந்நூலினைத் தட்டச்சு, மெய்ப்பு, வடிவமைப்பு மற்றும் அட்டைப்பட வடிவமைப்பு ஆகியவை செய்து உதவிய அனைத்துத் தோழர்களுக்கும், கேடயம் வெளியீட்டகத்திற்கும் எமது நன்றி.

பிரதீப்
பதிப்பாளர்

Tuesday 31 January 2017

தொழிற்சங்கம் பற்றி...

தொழிற்சங்கம் பற்றி...


விலை: 75/-
புதுமை பதிப்பகம்
7200260086

ஏகாதிபத்தியங்களின் பன்னாட்டு கம்பெனிகளும் மற்றும் அவற்றின் தரகு கூட்டாளிகளும் தமது லாபத்தை பெருக்குவதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் மீது, மிக கொடூரமாக தாக்குதல் தொடுத்துவருகின்றனர். குறிப்பாக 1990-களுக்குப் பிறகு, இந்திய அரசு புதிய பொருளாதார கொள்கையை செயல்படுத்த தொடங்கியவுடன் தொழிலாளர்களின் வாழ்நிலை மிகவும் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியங்கள் தங்களுடைய நெருக்கடிகளை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டு உழைக்கும் மக்கள் மீது சுமத்தியும், இங்குள்ள அனைத்து வளங்கள்,  மலிவான உழைப்பு, மூலாதாரங்கள் மீதும் பெரும் ஏகபோகத்தை செலுத்தி வருகின்றன. இதற்கு சேவை செய்யக் கூடிய அடிவருடி கூட்டங்கள் தான் ஆட்சியாளர்களான இந்த தரகு முதலாளித்துவ  நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள்.

உலகில் உள்ள பின்தங்கிய நாடுகளின் மீதான சர்வதேச நிதி மூலதனத்தின் கொடூரமான தாக்குதலை குறிப்பதற்கான ஒரு வார்த்தைதான் உலகமயமாக்கல் என்பது. உலகமயமாக்கல் என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்தியப் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகள் மீது மட்டுமல்லாது நாட்டின் அனைத்து சமூக அரசியல் வாழ்வின் மீதும் தனது ஆக்டோபஸ் போன்ற பிடிப்பை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை முக்கியமானதொரு கூறாகக் கொண்டுள்ள ஏகாதிபத்திய உலகமய கொள்கையின் செயலாக்கம் தொடங்கி 25 ஆண்டுகளாகியுள்ளன. ஏற்கனவே இருந்த அரசுக் கட்டுப்பாடு ஏதும் இப்போது கிட்டத்தட்ட இல்லை. அதாவது நிரந்தரத் தன்மையுடைய வேலைக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை பயன்படுத்துவது அல்லது ஆட்குறைப்பு செய்வது, தொழிற்சாலைகளை மூடுவது போன்றவைகளே நடைமுறை உண்மையாக இருக்கிறது. நிரந்தரத் தொழிலாளர்களின் கூலியில் ஒரு அற்பமான அளவையே கூலியாகப் பெறுகின்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்களுக்குப் பதிலாக அமர்த்தப்படுவது வேகமாக அதிகரிக்கிறது. இது எதில் வெளிப்படுகிறது? உற்பத்திச் செலவுகளில் கூலிகளின் பங்கு குறைவதிலும் மொத்த வேலைகளில் ஒப்பந்த வேலைகளின் பங்கு அதிகரிப்பதிலும் இது வெளிப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மேற்கொண்ட ஆய்வு பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறது. இந்திய கம்பெனிகளுடைய மொத்த செலவுகளில் கூலிகளின் பங்கு 1991-92 நிதியாண்டில் 6.1 சதவீதமாக இருந்தது; 2002-03 நிதியாண்டில் 4.4 சதவீதமாக குறைந்தது.

உலகமயமாக்கல் காலகட்டத்தில் பணியமர்வுத் தரத்தை நிர்ணயிக்கும் எளிமையான அளவுகோளின் ஒரு முனையில் நிரந்தர வேலைமுறை என்பதும் மறுமுனையில் அமர்த்து - துரத்து (hire and fire) ஒப்பந்த வேலைமுறையும் இருக்கிறது. அளவுகோளின் கீழ்முனையான அமர்த்து-துரத்து வேலைமுறை என்ற இடத்திற்கு அனைத்துத் தொழிலாளர்களையும் தள்ளுவதே உலகமயமாக்கலின் நோக்கமாகும்.

1975-க்குப் பிறகு பெரும் தொழிற்சாலைகளின் ஒவ்வொரு பிரிவும் துணைத் தொழில் (Ancillary unit) என்ற போர்வையில் சிறுசிறு தொழில்களாயின. இத்துணைத் தொழில்களில் பணிப்புரியும் தொழிலாளர்களின் ஊதியமானது பெரும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் சக ஊழியரின் ஊதியத்தைவிடக் குறைவாக ஆகிப்போனது.

1970-களின் இறுதியில் சூடுபிடிக்க ஆரம்பித்த காஷ¨வல்மயம் (Casual Labour) போக்கனாது சீர்திருத்தம் ஆரம்பிக்கும்போது உச்சக்கட்டத்தை எட்டியது. காஷ¨வல்மயம் என்பது அசுர வேகத்தில் பயணம் செய்ய “அவுட்சோர்ஸ்” என்ற புதிய உத்தி உலகமயமாக்கல் காலத்தில் பயன்படுத்தப்பட்டது. பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் மனிதர்களின் தலையை வெட்டுவதற்கு ஆட்கள் போதாமல் கில்லட்டின் இயந்திரம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டதோ அதே போன்று நிரந்தர வேலைவாய்ப்பை ஒழித்துக்கட்டுவதற்கு அவுட்சோர்ஸ் உத்தி முதலாளிய வர்க்கத்தால் பயன்படுத்தபட்டு வருகிறது. 

அவுட்சோர்ஸிங் என்பது தொழிலின் கருவான நடவடிக்கைகளை மட்டும் நிறுவனத்தின் நேரடி செயல்பாட்டில் வைத்துக் கொண்டு மற்றவற்றை நிறுவனத்திற்கு வெளியே உள்ளவர்களை வைத்துச் செய்வது. தற்போது அந்தக் கருவான நடவடிக்கைகள் கூட அவுட்சோர்சிங் செய்யப்படுகிறது. அவுட்சோர்சிங் கொள்கை மூலமாக வெளியே செல்லும் நிர்வாக வேலையில் உற்பத்தி (production) மட்டுமே நிறுவனத்திற்கு வெளியே செல்வதில்லை. இதனுடன் சேர்ந்து நிதி நிர்வாகம் (Finance), கொள்முதல் நிர்வாகம் (Purchase), கணக்கு வழக்கு (Accounts and Administration) நிர்வாகம் மற்றும் பொருள்கையிருப்பு நிர்வாகம் (inventory) ஆகியவையும் சென்று இருக்கின்றன. இப்பணிகளில் மட்டும் அல்லாமல் அவுட்சோர்ஸ் ஆர்டர் பெறுபவரால் பணியமர்த்தப்படுபவரின் பணித் தரமானது காஷ¨வல் முறையை விடக் கேவலமாக உள்ளது.

மொத்தத்தில் அவுட்சோர்சிங்கானது தொழிலாளியைப் பொருத்துவரை நிரந்தரத் தொழிலாளி என்ற பணியமர்வுத் தரத்திலிருந்து ஒப்பந்தத் தொழிலாளி என்ற பணியமர்வுத் தரத்திற்கு மாற்றிவிட்டது.

இதன் நோக்கம் தொழிலாளி ஒரு வர்க்கமாக அணிதிரள்வதை தடுப்பது என்பதே அடிப்படையாக உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக அரசின் அறிக்கையில் கூறுவதாவது நாட்டில் 45.9 கோடி தொழிலாளர்களின் (விவசாய தொழிலாளிகள் உட்பட) 43.3 கோடி பேர் அமைப்பாக்கப்படாமல் உள்ளனர். அதாவது 94.33 சதவீதம் அமைக்காப்படாமல் உள்ளனர்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கலின் விளைவாக உற்பத்தித் துறையில் மட்டுமல்லாமல் சேவைத்துறையிலும் தொழிலாளர் வர்க்கத்திற்கு மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து, மருத்துவம், கல்வி, அஞ்சல், தொலைத்தொடர்புத், தகவல் தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறைகளிலும் பணிப்புரியும் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

போக்குவரத்துத் துறையில் ஊழியர்களை ஒப்பந்தத் தொழிலாளி மயமாக்கும் போக்கு உச்சக் கட்டத்திற்கு சென்று தற்போது இது டிரிப்ரேட் (Trip Rate) என்று மாறிவருகிறது. இது காஷ¨வல் முறையைவிட மோசமானது.

கல்வித்துறை மிகவும் மட்டமான பணியமர்வுத் தரமுடைய ஊழியர்களைக் கொண்ட தொழிலாக மாற்றப்பட்டுள்ளது. கல்வியைத் தனியார்மயமாக்கியதும் ஆசியர்களின் பணிதரம் தாழ்ந்துபோனதும் ஒரே நேரத்தில் நடந்த நிகழ்ச்சிப் போக்குகள். தனியார் கல்வி நிறுவனங்களின் நூறுசதவீத காஷ¨வல் ஆசிரியர் மூலமாக வெற்றிகரமாக வியாபரம் நடத்திவரும் தொழிலாக விளங்குகிறது. 

தகவல் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை இங்கு தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் அமலாவதில்லை. இதில் 8 மணி நேர வேலை என்பது கிடையாது. சராசரியாக 9 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை உழைக்கிறார்கள் என்று நிறுவனங்களின் மனிதவளத் துறைகள் கூறினாலும், அது திட்ட ஒப்பந்தங்கள் (project) இல்லாத நாட்களில் வேலைப் பளு குறைவாக இருப்பதை குறிப்பதாகும். எனினும் திட்ட ஒப்பந்தங்கள் இருக்கும் நாட்களில் 14லிருந்து 16 மணி வரை வேலை நேரம் நீட்டிக்கப்படுகிறது. இத்தொழிலில் 35 வயதைக் கடந்தவர்களுக்கு இடமில்லை. 35 வயதைக் கடந்தவர்களுக்கு உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டுமே பணியாற்ற முடியும் என்பதால் தற்போது பணியிலிருக்கும் அனைவரும் அடுத்த பத்தாண்டுகளில் வேலையில்லாதவர்களாகி விடுவார்கள். அவர்கள் அனைவரும் வேறு வேலைக்கும் செல்ல முடியாது. ஆகவே தொழிலாளர் உரிமை, நலன் மற்றும் பணிப்பாதுகாப்பு அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ள சைபர் கூலிகள் (cyber cooli) தான் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள்.

1948-ம் ஆண்டு இயற்றப்பட்ட தொழிற்சாலைகள் சட்டப்படி, மின்சாரத்தைப் பயன்படுத்தி உற்பத்தியில் ஈடுபடும் ஒரு நிறுவனம் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால்கூட ஒரு ஆலையாகக் கருதப்படும். அதே பிரிவு உற்பத்திக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் 20 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக்கொண்டால்தான் ஆலையாகக் கருதப்படும். இப்போது கொண்டுவரப்படும் ‘தொழிற்சாலைகள் சட்ட (திருத்த) மசோதா-2014’ தொழிலாளர் எண்ணிக்கையை 20-லிருந்து 40 ஆக உயர்த்துகிறது.

தொழில் உறவுகள் மசோதா-2015-க்கான வரைவு வாசகங்கள் தொழிற்சங்கங்களைப் பதிவு செய்வதற்குக் கடுமையான நிபந்தனைகளையும், தொழிலாளர்களை வேலையிலிருந்து அகற்ற எளிமையான வழிமுறைகளையும் கொண்டுள்ளது. 300 தொழிலாளர்கள் வரையில் வைத்து வேலைவாங்கும் தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் துறை அதிகாரிகளின் அனுமதியின்றி எந்த ஒரு தொழிலாளியையும் பணிவிலக்கு செய்யப் புதிய மசோதா வகை செய்கிறது.

அரசியல் சட்டத்தின்படி தொழிலாளர்கள், சங்கம் அமைத்துக் கொள்வதற்கான உரிமையைப் புதிய தாராளக் கொள்கைகள் செயல்படுத்தப்படுவதால் இப்போது தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஒப்பந்தத் தொழிலாளர் முறை எல்லா இடங்களிலும் திணிக்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை நிருபித்துள்ளது மோடி அரசு.

புதியதாராளக் கொள்கைகள் அமல்படுத்தப்படுவதன் விளைவாகத் தொழிலாளர்கள் அமைப்பாக ஒன்று சேரும் சுதந்திரமும், கூட்டுபேர உரிமையும் பறிக்கப்படுகிறது. இவ்வாறு தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்படுவது என்ற உத்திரவாதத்தின் மீதுதான் பன்னாட்டு முதலாளிகளுக்கும் அரசுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

இந்திய அரசு கடைபிடித்துவரும் புதிய தாராளக்கொள்கையின் தொழிலாளர் விரோதப் போக்கின் பிரதான அம்சங்கள் 12 மணி நேர வேலை நாள், ஒப்பந்தக் கூலிமுறை, குறைந்தகூலி தொழிலாளர்களை நிரந்தரமாக்க மறுத்தல், சங்கமாகச் சேரும் உரிமையையும், கூட்டுப்பேர உரிமையையும் மறுத்தல் உள்ளிட்ட இன்னும் பல அம்சங்களைக் கொண்டதாகும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொழிலாளர்களின் கொத்தடிமைக் கூடாரங்களாக உள்ளன. இங்கு தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. எட்டு மணிநேர வேலை, தொழிற்சங்க உரிமை, வேலை நிறுத்த உரிமை, உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மலிவான கூலி உழைப்பின் மூலம் ஏகாதிபத்தியவாதிகள் அதீத லாபம் (super profit) பெறுவதற்கு சிறப்புப் பொருளாதர மண்டலங்கள் வழிவகுக்கின்றன.

இந்தியாவின் கனிமவளங்களும், மனித உழைப்பும் ஏகாதிபத்திய வாதிகளால் கேள்விக்கேட்பாரின்றி கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆகவே தொழிலாளி வர்க்கம் ஒரு சங்கமாக ஒன்று சேர்ந்து இத்தகைய தாக்குதலை எதிர்த்து போராட வேண்டியது உடனடி பணியாகியுள்ளது.

முதலாளிய வர்க்கத்தால் பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் பெறுகுவதற்கு தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு போர்குணமிக்க தொழிற்சங்க அமைப்பு தேவையாகியுள்ளது. அத்தகைய தொழிற்சங்கம் எவ்வாறு கட்டியமைக்கப்பட வேண்டும்? அதன் கடமைகள் என்ன? என்பதற்கு மார்க்சிய லெனினிய அடிப்படையில் ஒரு தெளிவான வரையறை வேண்டும்.
நம் நாட்டில் நிலவுகின்ற அரசியல் சமூக அமைப்புமுறை முழுவதற்கும் தொழிலாளர் நலன்களுக்குமிடையே உள்ள இணக்கம் காணமுடியாத பகைமையை தொழிற்சங்கங்கள் எடுத்துக் காட்டவேண்டும்.

மூலதனத்திற்கு உழைப்பு அடிமைப்பட்டிருக்கிறது என்பதை தொழிலாளர்களுக்கு எடுத்துக்காட்டுவதும் இந்த அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை தொழிலாளர்களுக்கு ஊட்டுவது
தான் இன்றைய முதன்மையான கடமை.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காக மட்டுமின்றி சொத்துடமையற்றவர்கள் தங்களை முதலாளிக்கு விற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்ற இச்சமுதாய அமைப்பு முறையை ஒழிப்பதற்கு போராடுதல் வேண்டும். தொழிற்சங்கங்கள் கூலி முறையைத் ஒழிப்பதற்கும் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் பொருளாதார இழிவு கூலி உயர்வாக இருப்பதாலோ குறைவாக இருப்பதிலோ இல்லை. தன் உழைப்பிற்குத் தன் உழைப்பின் உற்பத்திப் பொருள் முழுவதையும் பெறுவதற்குப் பதிலாகத், தன் சொந்த உற்பத்திப் பொருளின் கூலி எனப்படும் பகுதியை மட்டும் பெறுவதோடு தொழிலாளி வர்க்கம் திருப்திப்பட வேண்டியிருப்பதுதான் அதன் மாபெரும் இழிவாகும் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

ஆனால் தொழிற்சங்கவாதிகளும் திருத்தல்வாதிகளும் உழைக்கும் மக்கள் நடத்தும் அன்றாட நலன்களுக்கான போராட்டங்கள் வர்க்கப் போராட்டங்கள் என்ற தவறான கருத்தை மக்களுக்கிடையில் பரப்புக¤ன¢றன. ஆனால¢ வர்க்கப் போராட்டம் குறித்து மார்க்சியவாதிகளின் கண்ணோட்டத்தைப் பற்றியும் மிதவாதிகள் கண்ணோட்டத்தைப் பற்றியும் வேறுபடுத்தி பின்வருமாறு லெனின் கூறுகிறார்.

“ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஒரு அரசியல் போராட்டமாகும்” மிதவாத கருத்துக்களுக்கு அடிமைப்பட்டுள்ள சந்தர்ப்பவாதிகள் மார்க்சின் தெட்டத் தெளிவான இவ்வார்த்தைகளை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றை ஒரு வக்கிரமான முறையில் வியாக்கியானம் செய்கிறார்கள். சந்தர்ப்பவாதிகள் என்போர், “பொருளாதாரவாதிகளும்”, அவர்களுடைய அண்ணன்மார்களான “கலைப்புவாதிகளும்” உள்ளிட்டோர் ஆவர்.

வர்க்கங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற எல்லா மோதல்களும் ஒரு வர்க்கப் போராட்டம் என்று கருதுகிறார்கள். ஆகையால், அவர்கள் மிக உயர்ந்த, மேலும் வளர்ச்சிப் பெற்ற நாடு தழுவிய வர்க்கப் போராட்டத்தை அரசியலாக கருதாமல் ஒவ்வொரு ரூபிளுக்கும் அதிகமாக 5 கோபெக்குகளுக்காக (ஒவ்வொரு ரூபாய்க்கும் அதிகமாக 5 காசுகளுக்காக உதாரணம் கூறலாம்) நடத்துகின்ற போராட்டத்தை “ஒரு வர்க்கப் போராட்டம்” என அங்கீகரிக்கிறார்கள். இவ்வாறு பொருளாதாரவாதிகள் ஆரம்ப நிலையிலுள்ள வர்க்கப் போராட்டத்தைத்தான் அங்கீகரிக்கிறார்கள். அதனுடைய வளர்ச்சி பெற்ற வடிவத்திலுள்ள போராட்டத்தை அங்கீகரிப்பதில்லை. வேறு வார்த்தைகளில் கூறினால் மிதவாத முதலாளிகளின் கண்ணோட்டத்திலிருந்து எவ்வகையான போராட்டம் அவர்களால் மிகவும் சகித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றதோ அத்தகைய போராட்டங்களை மட்டுமே வர்க்கப் போராட்டம் என பொருளாதாரவாதிகள் அங்கீகரிக்கிறார்கள். மிதவாதிகளால் ஏற்க முடியாத உயர்நிலையிலுள்ள வர்க்கப் போராட்டங்களை ஏற்க மறுக்கிறார்கள். இவ்வாறு பொருளாதாரவாதிகள் தொழிலாளர் அரசியல் வாதிகளாக ஆகிவிடுகிறார்கள். அவர்கள் இம்முறையில் வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய புரட்சிகரமான கண்ணோட்டத்தை நிராகரிக்கிறார்கள்.

மேலும் வர்க்கப் போராட்டமானது அரசியல் துறையைத் தழுவினால் மாத்திரமே அது உண்மையான நிலையான வளர்ச்சி பெற்றதாக ஆகிவிடுகிறது என்று சொன்னால் மட்டுமே போதாது. அரசியலிலும் கூட ஒருவர் தன்னை அற்ப விவகாரங்களுடன் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். அல்லது ஒருவர் இன்னும் ஆழமாகவும், அதனுடைய சாரத்தை அடையும் வரை செல்லலாம். வர்க்கப் போராட்டம் அரசியலை தழுவிக் கொள்வதோடு மட்டும் நிற்காமல், அத்துடன் அரசியலில் மிக சாராம்சமாக உள்ள அரசு அதிகாரத்தின் கட்டமைப்புப் பற்றிய பிரச்சினையை தன் பிடிக்குள் கொண்டு வரும்போதுதான் அதை முழுமையான வளர்ச்சி பெற்ற ‘நாடு தழுவிய’ வர்க்கப் போராட்டமாக மார்க்சியம் அங்கீகரிக்கிறது. 

அதற்கு மாறாக, மிதவாதமானது தொழிலாளர் இயக்கம் ஓர் அளவு பலம் அடைந்துவிட்டபோது வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிக்கிறது. ஆனால் அது வர்க்கப் போராடத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை குறுக்கி, கட்டுப்படுத்தி, காயடிக்க முயல்கிறது; மிதவாதமானது அரசியல் துறையிலும் வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிக்க தயாராக இருக்கிறது. ஆனால் அரசியல் துறையில் அரசு அதிகாரத்தின் கட்டமைப்புப் பற்றிய பிரச்சினை சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில்தான் அது அங்கீகரிக்க தயாராக இருக்கிறது. வர்க்கப் போராட்டத்தைப் பற்றி இவ்வகையாக மிதவாதம் திரித்துக் கூறுவது முதலாளிகளின் எவ்வகையான வர்க்க நலன்கள் இடமளிக்கிறது என்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல”. (லெனின் தொகுப்பு நூல் 19 பக்கங்கள் 121-122)

அரசியல் போராட்டமும் பொருளாதாரப் போராட்டமும்

அரசியல் போராட்டத்திற்கும் பொருளாதாரப் போராட்டத்திற்கும் உள்ள உறவு நிலையை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் போராட்டம் பொருளாதாரப் போராட்டம் ஆகிய இரு அம்சங்களைக் கொண்டதுதான் வர்க்கப் போராட்டம்.

ஒரு புரட்சிகரமான சூழிந¤லையில் வர்க்கப் போராட்டத்தின் பிரதான அம்சமாக அரசியல் போராட்டம் இருக்கிறது; இரண்டாம் நிலையான அம்சமாக பொருளாதாரப் போராட்டம் இருக்கிறது. 

பொருளாதார போராட்டமும் அரசியல் போராட்டமும் ஒன்றுக்கொன்று ஆதரவாக அமைந்து ஒன்று மற்றொன்றின் சக்திக்கு மூலாதாரமாக அமைகிறது. இவ்விரண்டு போராட்ட வடிவங்களும் இணைக்கப்பட்டால்தான் ஒரு சக்திவாய்ந்த வெகுஜன இயக்கத்தை தோற்றுவிக்க முடியும்.

அரசியல் போராட்டம் பற்றி நமக்கு ஒரு தெளிவான வரையறை வேண்டும். அதாவது தொழிலாளி வர்க்கம் தனது நலனுக்காக மட்டுமல்லாமல் பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலன்களுக்காகவும் அவர்களுக்கு தலைமைதாங்கி நடத்தும் போராட்டம்தான் அரசியல் போராட்டம். 

தொழிற்சங்கப் போராட்டம் ஏன் மக்களிடையே 
அங்கீகாரத்தையோ அல்லது ஆதரவையோ பெறுவதில்லை?

தொழிற்சங்கவாதிகள் தொழிலாளர் போராட்டத்தை பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலன்களுக்காகவும், இவ்வர்க்கங்களுக்கு தலைமைத் தாங்கும் வர்க்கப் போராட்டமாகவும் அரசியல் போராட்டங்களை நடத்துவது இல்லை. உண்மையில் பொருளாதார நலன்களுக்கான தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபடுவதை எதிர்த்து தொடுக்கப்படும் ஒடுக்கு முறையை விட பிற வாழ்வுத் துறைகளில் குறிப்பாக சாதி, மத, மொழி, இன ஒடுக்குமுறைகள் குறைவானதல்ல.

எனவே, அரசியல் வகையில் பிற வர்க்கங்களின் மீது தொடுக்கப்படும் அரசின் ஒடுக்குமுறையை எதிர்த்து ஒடுக்குப்படுபவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் ஈடுபடும்போதுதான், அவர்கள் குறுகிய சுயநல உணர்விலிருந்தும் பின் தங்கிய தொழிற்சங்க உணர்விலிருந்தும் விடுபட்டு, வர்க்க அரசியல் உணர்வைப் பெறுவது மட்டுமல்லாமல் அனைத்து மக்களின் ஆதரவைப் பெறுவதும் சாத்தியம்.

புதிய காலனிய சமூக அமைப்பில் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்ட ஒரு சமூக அமைப்பில் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெறுவது மட்டுமல்லாமல் கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமெனில் அனைத்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களையும் ஒன்று திரட்டி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதுதான் ஒரே வழி. அதற்கு இந்நூல் ஒரு கையேடு ஆகும்.

பிரதிப்
பதிப்பாளர்

தேசிய இனப் பிரச்சினை பற்றி...


தேசிய இனப் பிரச்சினை பற்றி...

விலை: 120/-
புதுமை பதிப்பகம்
7200260086

பாட்டாளி வர்க்கத்தின் தேசியக் கொள்கை

தேசமும் தேசிய இனமும்

தேசம் என்பது என்ன? “ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும்” என்று ஸ்டாலின் மிகச் சரியாக வரையறுத்துக் கூறியுள்ளார். இத்தகைய தேசம் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தின் மீது வெற்றி கொள்ளும் காலகட்டத்திலேயே அமைகிறது. ஆனால் தேசிய இனம் என்பது இதற்கு முந்தியதாகும்.

பழங்குடி (Tribes) மக்கள் சமூக அமைப்பிலிருந்து முதலாவது வர்க்க சமுதாயம் தோன்றியபோது தேசிய இனங்கள் அமைந்தன. அதாவது மக்கள் முதல் முதலாக ஒரு பொது மொழியுடன் ஒரு பிரதேச அடிப்படையிலான மக்கள் சமூகங்களாக அமைந்தபோது அவர்கள் தேசிய இன சமூகங்களாயினர். எனவே தேசிய இனம் என்பது ஒரு பொதுமொழி கொண்ட ஒரு பிரதேச அடிப்படையில் வாழ்கின்ற நிலையான மக்கள் சமூகமாகும். முதலாவது தேசிய இனம் அடிமை பிரபுக்களைக் கொண்டது. அதற்கடுத்த நிலவுடமை சமூக தேசிய இனங்கள் மத்திய காலத்தில் அமைந்தன. பழங்குடி அமைப்புகளிலேயே பொதுமொழி ஒன்று உருவாகி இருக்கும் என்றும் பிரதேச அடிப்படையிலான ஒரு சமூகமாக உருவாவது வர்க்க சமுதாயத்தின் தோற்றத்துடன்தான் என்பதால் முதலாவது புரதான தேசிய இனத்தின் தோற்றம் புராதன அடிமை சமுதாயத்துடன் இணைந்துள்ளது.

தேசிய இனத்திற்கும் தேசத்திற்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு பொதுமொழி, பொது பிராந்தியம் என்பதுடன் ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு என்ற அம்சமும் இணைவதாகும். இது நிலப்பிரபுத்துவத்தின் மீது முதலாளித்துவம் வெற்றி கொள்ளும்போது ஏற்படுகிறது அதற்கு முன்னதாக அல்ல.

தொல்குல சமூக அமைப்பின் அழிவில், அடிமை உடமை சமூக அமைப்பும்; அடிமை உடைமை சமுதாய அமைப்பின் அழிவில், நிலவுடைமைச் சமுதாய அமைப்பும் தோன்றிய காலகட்டத்தின் வரலாற்று வகையினம் தேசிய இனம் என்றால், நிலப்பிரபுத்துவத்தின் அழிவின் மேல் முதலாளித்துவம் வெற்றிகொள்ளும் கால கட்டத்தின் வரலாற்று வகையினமே தேசம் ஆகும். தேசத்தின் தோற்றம் இதுவரை துண்டு துண்டாக சிதறிக் கிடந்த மக்களின் பொருளாதார வாழ்க்கையை ஒரு பொது மொழிப் பிரதேசத்திற்குள் ஒருங்கிணைந்ததாக, அதிகபட்ச வேலைப் பிரிவினையுடனும், சுதந்திரமான, வர்க்கப் பகுப்புடனும் ஒரு நவீன தேசத்திற்கான ஒரு பொதுவான பொருளாதார வாழ்வாக உருமாறுகிறது.

இவ்விதம் அமையும் தேசத்தில் இருவகைக் கூறுகள் உள்ளடங்கியுள்ளன. முதலாவது - இனக்கூறு; இரண்டாவது - சமுதாயக்கூறு; பொதுமொழியும், பிரதேசமும் இனக்கூறாகும். இதில் மொழியே பிரதானமானது. நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தினை வெற்றி கொள்ளும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பே சமுதாயக் கூறு ஆகும். இது முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளுற்பத்தி உறவுகளை - வர்க்க உறவுகளைக் குறிப்பிடுகிறது.

ஒரு தேசம் என்பது ஒரு பொதுமொழி இன்றி இருக்க முடியாது. அதே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பொதுமொழிகள் கொண்டதாகவும் இருக்க முடியாது. காரணம் வெவ்வேறு பொதுமொழிகள், வெவ்வேறு தேசிய இனங்களைக் குறிப்பவையாகும். அதே போல தேசம் என்பது ஒரு பொதுமொழியுடன் ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார வாழ்வைக் கொண்ட ஒரு பிரதேசம் இன்றி இருக்க முடியாது; அதே நேரத்தில் வெவ்வேறு தனித்தனியான பொருளாதார வாழ்வைக் கொண்ட தனித்தனியான பிரதேசங்கள் ஒரே மொழியின் காரணமாக ஒரே தேசமாக கருதப்படவும் முடியாது.

தேசிய இயக்கமும், தேசிய அரசும்:

“தேசிய இயக்கம் என்பது சாராம்சத்தில் முதலாளித்துவ இயக்கம் ஆகும்” என்றார் ஸ்டாலின். “உலகம் முழுவதும் முதலாளித்துவமானது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது” என்றார் லெனின். உண்மையில் நிலப்பிரபுத்துவத்தின் மீதான முதலாளித்துவத்தின் வெற்றியும், தேசங்கள் உருவாக்கமும் தேசிய இயக்கங்களுடன் இணைந்ததாகும்.

தேசிய இயக்கம் என்பது என்ன? அது அடிப்படையில் நான்கு பண்புகளைக் கொண்டிருக்கிறது. முதலாவதாக ஒரு தேசிய இயக்கம் என்பது மொழி, கலை, இலக்கிய, கலாச்சார இயக்கமாகும். இரண்டாவதாக அது ஒரு விவசாயிகள் இயக்கமாகும்; மூன்றாவதாக அது ஒரு ஜனநாயக இயக்கமாகும். நான்காவதாக அது ஒரு தேசிய அரசை நிறுவுவதற்கான இயக்கமாகும். இவ்வாறு தேசிய இயக்கம் என்பது நான்கு பண்புக் கூறுகளைக் கொண்டிருக்கிறது.

நிலப்பிரபுத்துவத்தின் மீதான முதலாளித்துவத்தின் வெற்றி என்பது மூலதனத்தின் வெற்றியே. இதற்கு முதலாளிகள் விரிவான சந்தையைக் கைப்பற்ற வேண்டும். அதற்கு ஒரேமொழி பேசும் மக்களைக் கொண்ட, இணைந்த பிரதேசங்கள் அனைத்தையும் ஒரே அரசின் எல்லைக்குள் கொண்டு வர வேண்டும். அது மட்டுமின்றி சந்தை விரிவாக்கத்திற்கு மக்களிடையே - வாங்குவோருக்கும், விற்போருக்கும் இடையே, வேலை தருவோருக்கும், வேலை பெறுவோருக்கும் இடையே உற்பத்தியாளனுக்கும் நுகர்வோருக்கும் இடையே - நெருக்கமான தொடர்பும் சுதந்திரமான, விரிவான வர்க்கப் பகுப்புகளும் உருவாக மொழியின், அதன் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும். எனவேதான் லெனின் கூறினார் “மக்கள் தேசிய இன ரீதியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெருக்கமாக ஒருமுகப்பட்டிருப்பது முதலாளித்துவத்தின் நவீனத் தேவைகளில் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை; ஏனெனில் உள்நாட்டுச் சந்தையை முழுமையாகக் கைப்பற்றுவதற்கும் பொருளாதார தொடர்புகளை முழுச்சுதந்திரமாக அனுபவிப்பதற்கும் முக்கியமாகத் தேவைப்படுவது தேசிய இனமும், மொழிவழிப் பகுப்பும் ஆகும்.” எனவே நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான முதலாளித்துவ இயக்கம் என்பது முதலாவதாக மொழி, கலை, இலக்கிய கலாச்சார மறுமலர்ச்சிக்கான இயக்கமாக இருக்கிறது என்பது தெளிவு.

நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான முதலாளித்துவத்தின் போராட்டம் தேசிய இன ஒருமைப்பாடு, விரிந்த, சுதந்திரமான வர்க்கப் பகுப்பு, மொழி இலக்கிய மறுமலர்ச்சி ஆகியவற்றுக்கு காரணமாய் இருப்பது மட்டுமன்றி அது இறுதியில் நிலப்பிரபுத்துவ அரசியல், பொருளாதார அமைப்புகள் அனைத்தையும் வீழ்த்துகிறது. இப்போராட்டத்தின் பரந்துபட்ட, மிகப் பின்தங்கிய மக்கள் பகுதியினர் உட்பட சகல பகுதி மக்களும் தமது அரசியல் உரிமைக்கான - தேசிய இன உரிமைக்கான போராட்டத்தில் ஈர்க்கப்பட்டு அரசியல் அரங்கிற்கு வருகின்றனர். வரலாறு காணாத அளவுக்கு இயக்கங்களில் பங்கேற்கின்றனர். அச்சு இலக்கியங்கள் பெருமளவுக்கு வெளியிடப்படுகின்றன. மக்கள் அமைப்புகளும், மக்கள் பிரதிநித்துவத்துவ சபைகளும் தோன்றுகின்றன. அரசியல் அமைப்புக்குட்பட்ட ஆட்சிமுறை தோன்றுகிறது. இவ்வாறு நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான முதலாளித்துவத்தின் போராட்டம் ஒரு முதலாளித்துவ ஜனநாயகத்துக்கான இயக்கமாகவும் இருக்கிறது.

மேலும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான முதலாளித்துவ இயக்கம் சாராம்சத்தில் விவசாயிகள் இயக்கமேயாகும். விவசாயிகள் பங்கேற்பின்றி முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றி கொள்ள முடியாது. ஸ்டாலின் கூறினார்: “தேசிய பிரச்சினையின் அடிப்படையும், சாரமும் விவசாயிகள் பிரச்சினையே என்பதில் ஐயமில்லை. இதிலிருந்து தேசிய இயக்கத்தின் முக்கியப் படை விவசாயிகளே என்பதும், விவசாயிகள் படையின்றி உண்மையான தேசிய இயக்கம் இருக்க முடியாது என்பதும் தெளிவு” தேசிய பிரச்சினை என்பது விவசாயிகள் பிரச்சினையுடன் தேசிய கலாச்சாரம், தேசிய அரசு போன்ற பிரச்சினைகளையும் உள்ளடக்கியது என்பது அவர் கூற்று. எனவே தேசிய இயக்கம் என்பது ஒரு விவசாயிகள் இயக்கமும் ஆகும் என்பதும் தெளிவு.

முதலாளித்துவத்தின் மிக மிக சுதந்திரமான, விரிவான வேகமான வளர்ச்சிக்கு வழிசெய்யும் கடமைப் பணிகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றவல்லது தேசிய அரசேயாகும். எனவேதான் “ஒவ்வொரு தேசிய இயக்கத்தின் போக்கும் நவீன முதலாளித்துவத்தின் தேவைகள் மிக நன்றாகப் பூர்த்தி செய்யப்பட வாய்ப்புள்ள தேசிய அரசுகள் அமைப்பதற்கான வழியிலானது. மிக மிக தீர்க்கமான பொருளாதாரக் காரணங்கள் இந்த இலக்கை நோக்கி இட்டுச்செல்கின்றன” என்றார் லெனின்.

உலகம் முழுவதும் முதன் முதலாக ஐரோப்பாவில், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான தேசிய இயக்கங்கள் வெடித்து பிரிட்டன், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தேசிய அரசுகள் அமைந்தன.

இத்தகைய தேசிய அரசுகள் அமைவது மேற்கு ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல முதலாளித்துவக் காலகட்டத்தின் உலகம் முழுவதற்கும் பொதுவானதாகும் என்று லெனின் வலியுறுத்தினார். முற்றிலும் நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்படாத எல்லா நாடுகளும் தேசிய அரசுகளை அமைப்பதை நோக்கிய தேசிய இயக்கங்களைக் கடந்தே சென்றாக வேண்டும் என்பது வரலாற்றின் விதியாகும். “மேற்கு ஐரோப்பியா முழுவதற்கும் ஏன் நாகரிக உலகம் முழுவதற்கும் தேசிய அரசு என்பது முதலாளித்துவக் காலகட்டத்தில் மாதிரிப் படிவமானது, வழக்கமானது” என்றார் லெனின். மேற்கு ஐரோப்பிய நாடுகளை மட்டுமின்றி ஆசியாவில் ஜப்பானையும், பால்கன் நாடுகளின் உதாரணங்களையும் எடுத்துக்காட்டி “சுதந்திரமான தேசிய அரசில் மட்டுமே பண்ட உற்பத்தியின் மிகவும் முழுமையான வளர்ச்சிக்கும், மிகச்சுதந்திரமான, விரிவான வேகமான முதலாளித்துவ வளர்ச்சிக்கும் தேவையான நிலைமைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன” என்றார். “முற்போக்கான நாகரிகமுற்ற மனித சமுதாயம் முழுவதன் உதாரணமும், பால்கன் நாடுகள், ஆசியா ஆகியவற்றின் உதாரணமும் தேசிய அரசு என்பது முதலாளித்துவத்தின் விதியும் பொதுவழக்கும் ஆகும்” என்பதைக் காட்டுகின்றன என்று மீண்டும் வலியுறுத்தினார். மேலும் ஆசியாவில் கூட முதலாளித்துவம் தேசிய இயக்கங்களைத் தோற்றுவித்திருக்கின்றன என்றும் “இவ்வியக்கங்களின் போக்கு ஆசியாவில் தேசிய அரசுகள் உருவாவதற்கு வழிசெய்வதற்கான பாதையை நோக்கிச் செல்லும் போக்கு” என்றும் அவர் கூறினார். 

நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் மேற்கு ஐரோப்பாவில் தேசிய ஒருமை கொண்ட தேசிய அரசுகளை நிறுவின. அவை அந்நாடுகளில் தங்கு தடையற்ற விரிவான முதலாளித்துவ வளர்ச்சிக்கு வகை செய்தன. ஆனால் உலகம் முழுவதும் நிகழ்ச்சிகள் இம்முறையில் நடந்தேறவில்லை. முதலாளித்துவத்தின் முழு வளர்ச்சிக்கு முன்னதாகவே சில பெரிய தேசிய இனங்களும், ஏகாதிபத்தியங்களும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய, நிலப்பிரபுத்துவம் இன்னும் ஒழிக்கப்படாத முதலாளித்துவம் இன்னும் பலவீனமாக உள்ள, பொருளாதாரம் ஒருங்கிணைந்த இன்னும் தேசங்களாக உருவாகாத பலவீனமான தேசிய இனங்களைப் பலாத்காரமாக வென்று பின்தங்கிய பல்தேசிய அரசுகளையும், காலனிய அரசுகளையும் உருவாக்கின.

இவ்வாறு பலாத்காரமாக உருவாக்கப்பட்ட பல்தேசிய அரசுகளில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தேசிய இயக்கங்கள் தமது சொந்த நிலப்பிரபுத்துவ சக்திகளை மட்டும் இன்றி வல்லாதிக்கம் செலுத்தும் ஒடுக்கும் தேசிய இன ஆளும் வர்க்கங்களையும் எதிர்க்க வேண்டியிருந்தது. ஏகாதிபத்தியங்களால் காலனியாக்கப்பட்ட நாடுகளில் தேசிய இயக்கங்கள் ஏகாதிபத்தியத்துக்கும் நிலப்பிரபுத்துவத்துக்கும் எதிராக இருந்தன.

எனினும் எல்லாவித தேசிய இயக்கங்களின் நோக்கமும் சுதந்திரமான, விரிவான முதலாளித்துவ வளர்ச்சிக்கு வகை செய்யும் தேசிய அரசு ஒன்றை நிறுவுவதேயாகும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. எனவேதான், “உலக வரலாற்றில் தேசிய அரசு என்பது ஒரு பொதுவழியாக இருக்கிறது” என்றும், “தேசங்கள் என்பவை சமுதாய வளர்ச்சியின் முதலாளித்துவ சகாப்தத்தில் தவிர்க்க முடியாதபடி உண்டாகிற ஒரு படைப்பு வடிவம்” என்றும், “எல்லா முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகளிலும் சுயேச்சையான தேசிய அரசு அமைக்கப்படும் போக்கு காணப்படுகிறது” என்றும் லெனின் கூறினார்.

காலனி நாடுகளிலும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களிலும் எழுச்சியுறும் தேசிய இயக்கங்களின் நோக்கமும் தேசிய அரசை அமைப்பதுதான் என்பதும் அது ஒரு தேசிய விடுதலை யுத்தத்தின்மூலம் சாதிக்கப்பட முடியும் என்பதும் அதன் சிறப்புப் பண்புக்கூறு ஆகும்.

சோசலிசத்திற்கான போராட்டத்தில் 
பாட்டாளி வர்க்கத்தின் தேசிய திட்டம்

“தேசிய இனம் என்ற கோட்பாடு முதலாளித்துவ சமுதாயத்தில் வரலாற்று ரீதியில் தவிர்க்க முடியாதது என்பதையும் இந்த சமுதாயத்தை கணக்கில் கொண்டு தேசிய இயக்கங்கள் வரலாற்று ரீதியில் முறையானவை என்பதையும் மார்க்சியவாதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள்” சமுதாய வரலாற்றில் முதலாளித்துவ சகாப்தத்தில் தவிர்க்க முடியாத விதியாகிவிட்ட தேசிய இயக்கமும், தேசிய அரசும் வரலாற்று ரீதியில் ஆற்றும் முற்போக்கான, அவசியமான பாத்திரத்தையும் மார்க்சியவாதிகள் மறுக்கவில்லை. ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் நோக்கம் அதனினும் உயர்ந்ததாகும். அது சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் இலட்சியமாய்க் கொண்டிருக்கிறது. இந்த இலட்சியத்தை அடைவதற்கான வழி வர்க்கப் போராட்டமே. எனவே முதலாளி வர்க்கம் ஒவ்வொரு தேசிய இயக்கத்தையும் தேசிய அரசையும் முதலாளித்துவ நோக்கங்களுக்கான சாதனங்களாகக் கொள்ளும் அதே வேளையில், பாட்டாளி வர்க்கம் அவற்றை வர்க்கப் போராட்டத்திற்குச் சிறந்த நிலைமைகளை உருவாக்குவது என்ற கண்ணோட்டத்தில் அணுகுகிறது.

“நவீன தேசிய இனம் ஒவ்வொன்றும் இரண்டு தேசிய இனங்களைக் கொண்டிருக்கின்றன” ஒன்று முதலாளி வர்க்க தேசிய இனம்; மற்றொன்று பாட்டாளி வர்க்க தேசிய இனம். முதலாளி வர்க்கம் தனது தேசத்திற்குள் பாட்டாளிகளைச் சுரண்டுவதற்கான முழுப்பாதுகாப்பு, பிற தேசங்களின் மீதான மேலாதிக்கம் சர்வதேசிய ரீதியில் மூலதனத்தின் சுரண்டலும், ஆதிக்கமும் என்பவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. நிலப்பிரபுக்களும் பிற பிற்போக்காளரும் அதன் கூட்டாளிகளாக இருக்கிறார்கள். ஆனால் பாட்டாளி வர்க்கம் தனது தேசத்தில் மத்திய கால மிச்ச மீதங்களை மட்டுமின்றி முதலாளித்துவச் சுரண்டலையும் ஒழித்து சோசலிசத்தை நிறுவுவதையும் பிற தேசங்களுடன் சமத்துவ உறவுகளைப் பேணுவதையும் சர்வதேச பாட்டாளிகளின் ஒற்றுமையைச் சாதித்து சர்வதேச மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தின் மூலம் உலகு தழுவிய சோசலிச இலட்சியங்களை அடைவதையும் தனது நோக்கமாகக் கொண்டிருக்கிறது. உழைத்து உழலுகின்ற, சுரண்டப்படுகின்ற மக்கள் அனைவரும் அதனுடன் இருக்கின்றனர். “அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகள் தவிர்க்க முடியாத வகையில் ஜனநாயகம், சோசலிசம் என்பவற்றின் சித்தாந்தங்களைத் தோற்றுவிக்கின்றன”. இவ்வாறு ஒரே தேசிய இனத்தில் இருக்கும் “முதலாளி வர்க்க தேசியம்” ஏகாதிபத்திய நோக்கங்களையும், ‘பாட்டாளி வர்க்க தேசியம்’ சோசலிச நோக்கங்களையும் கொண்டிருகின்றன.

எனவேதான் லெனின் முதலாளித்துவ தேசியவாத நோக்கங்களுக்கு எதிராக “அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை, தேசங்களுக்கிடையே சம உரிமை, அனைத்து தேசிய இன பாட்டாளிகளுக்கு இடையிலும் ஐக்கியம், இதுதான் மார்க்சியமும், அகில உலக அனுபவமும், இரசிய அனுபவமும் தொழிலாளர்களுக்குப் போதிக்கும் தேசியத் திட்டம்” என்று பிரகடனப்படுத்தினார்.

இக்கொள்கை தேசிய இனங்களுக்கிடையிலான தேசியப் பூசல்களை அகற்றுவது; ஒவ்வொரு தேசிய இனத்திலும் அதன் பாட்டாளி வர்க்கம் தனது சொந்த நாட்டு மூலதனத்துக்கு எதிராகவும், சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்துடன் ஒன்றிணைந்து சர்வதேச மூலதனத்துக்கு எதிராகவும் தாக்குதல் தொடுப்பது வர்க்கப் போராட்டத்திற்குரிய சாதகமான நிலைமைகளை உருவாக்குவது என்ற நோக்கைக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு.

எனினும் ஒரு நாட்டின் பாட்டாளி வர்க்கம் தனது சொந்த தேசியத் திட்டத்தை வகுத்துக் கொள்ளும்போது இரண்டு விசயங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் லெனின்.

முதலாவதாக: தேசிய இயக்கங்களைப் பொருத்தவரை ஒன்றுக்கொன்று தீவிரமாக மாறுபடுகின்ற முதலாளித்துவத்தின் இரு காலகட்டங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவது கட்டம் முதலாளித்துவச் சமுதாயமும் முதலாளித்துவ அரசும் அமைப்பதற்கான முதலாளித்துவ ஜனநாயக - தேசிய இயக்கங்களின் காலகட்டம். அதாவது மத்திய காலத்தை முழுமையாகத் துடைத்தொழித்து முதலாளித்துவ ஜனநாயகத்தை முழுவதுமாக நிறுவுவதற்கான கால கட்டம். இரண்டாவது கட்டம் முதலாளித்துவ அரசு முழுவதுமாய் உருபெற்றுவிட்ட, முதலாளித்துவ வீழ்ச்சித் தருவாய் என்று கூறக்கூடிய, பொதுமக்களின் முதலாளித்துவ ஜனநாயக இயக்கங்கள் பெருகிவிட்ட கால கட்டம். அதாவது முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகத்திற்கு செல்லும் காலகட்டம். இவ்விரு காலகட்டங்களில் ஒரு நாடு எந்தக் காலகட்டத்தில் இருக்கிறது பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிக் காலகட்டத்திலா அல்லது அது முடிவுற்றுவிட்ட காலகட்டத்திலா என்பதை பாட்டாளி வர்க்கம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இதில் எல்லா நாடுகளும் ஒரே மாதிரியாக ஒரே காலகட்டத்தில் இருப்பதில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி முற்றுப் பெற்றிருந்தபோது கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், கீழ்த்திசை நாடுகளிலும் அது முற்றுப் பெறாதிருந்ததை லெனின் சுட்டிக்காட்டினார். இத்தகைய நாடுகளில் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தைப் புறக்கணித்துவிட்டு பாட்டாளி வர்க்கம் முன்னேறிவிட முடியாது. ஏனெனில் “ஜனநாயகத்தின் மூலமாக அன்றி பாட்டாளி வர்க்கம் வெற்றிபெற முடியாது” அவ்வாறு பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தை புறக்கணித்துவிட்டு முன்னேற முயன்றால் “நாங்கள் முதலாளி வர்க்க பின்லாந்து தேசம் எதையும் அங்கீகரிக்கப் போவதில்லை - தொழிலாளி வர்க்க பின்லாந்து தேசம் எதையும் அங்கீகரிப்பதைத் தவறு என பிரகடனப்படுத்தினால் - அதைப் போன்ற முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது. உண்மையில் நிலவுவதை நாம் அங்கீகரிக்க மறுத்தால் அது நம்மை அங்கீகரிக்கும்படி நிர்பந்திக்கும்” என்றும், “தேசிய ஒடுக்குமுறை இருக்கும் ஒரு நிலையில் தேசிய விடுதலைப் பணியைப் புறக்கணிப்பது சோசலிஸ்டுகளின் கண்ணோட்டத்தில் தவறானது” என்றும் லெனின் எச்சரித்தார்.

இரண்டாவதாக: தனது சொந்த நாட்டின் தேசிய இனங்களின் வளர்ச்சி வேகம், தேசிய இன அமைப்பு, மக்கள்தொகை பங்கீடு போன்ற பல்வேறு பிரச்சினைகளிலும் அவற்றின் சிறப்புக்கூறுகளையும், பிற நாடுகளிலிருந்து அவை வேறுபட்டிருக்கும் முறைகளையும் பருண்மையாக வேறுபடுத்திக் காண வேண்டும்.

இவ்விரண்டு விசயங்களையும் பருண்மையாக ஆய்வுசெய்து கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் “பொதுவான வரலாற்று ரீதியிலான நிலைமைகளையும் அரசு நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எந்த நாட்டைச் சேர்ந்த மார்க்சியவாதிகளும் தமது தேசியத் திட்டத்தை வகுக்கும் பேச்சுக்கே இடமில்லை”.

மேலும் தேசிய இயக்கம் என்பது சார்பற்ற ஒரு முழுமையல்ல. தொழிலாளி வர்க்கத்தின் வெற்றி மட்டுமே எல்லா வறிய தேசிய இனங்களுக்கும் முழுமையான விடுதலையைத் தரமுடியும். இந்நிலையில் ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்க விடுதலை இயக்கங்களுக்கும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பூர்சுவா விடுதலை இயக்கங்களுக்கும் இடையிலான உறவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால் “இதில் என்னென்னவிதமான உறவுகள் சாத்தியம் என்பதை முன்கூட்டியே மதிப்பிட்டுக் கூறமுடியாது” அது பருண்மையான நிலைமைகளால் மட்டுமே மதிப்பிடக்கூடியதாகும். எனவே ஒரு நாட்டின் மார்க்சியவாதிகளின் தேசியத்திட்டம் இவ்வுறவுகள் குறித்த பருண்மையான ஆய்வுகளின் அடிப்படையிலும் அமைந்திருப்பது அவசியமாகும்.

இது ஏகாதிபத்திய சகாப்தம், “ஒரு சில மாபெரும் வல்லரசுகள்” உலகம் முழுவதும் உள்ள தேசங்களை ஒடுக்குவது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற சகாப்தமே ஏகாதிபத்தியம் என்றும் “மற்ற தேசிய இனங்களை ஒடுக்குகின்ற தேசிய இனங்கள் இந்த ஒடுக்குமுறையை விரிவுபடுத்தவும் பெருக்கவும் காலனிகளை மறுபடியும் தமக்கிடையே மறுபங்கீடு செய்து கொள்ளவும் செய்கின்ற முயற்சிகள் ஏகாதிபத்தியம்” என்றும் கூறினார் லெனின். எனவே எந்த ஒரு தேசிய இயக்கத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. இது பாட்டாளி வர்க்கம் தனது “சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட்டத்தை தேசியப் பிரச்சினைப் பற்றிய ஒரு புரட்சிகரத் திட்டத்துடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும்” என்பதை வலியுறுத்துகிறது.

சுயநிர்ணய உரிமையும், தேசிய விடுதலையும் 
(வரலாற்றுச் சான்றுகளிலிருந்து)

சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய இனமும் தனித்து தேசிய அரசு அமைத்துக் கொள்வதற்கான உரிமையாகும். சுயநிர்ணயம் என்பது தனித்து தேசிய அரசு அமைத்துக் கொள்வது அல்லது அந்த உரிமையுடன் பிற தேசிய இனங்களுடன் சேர்ந்து ஒரு அரசின் கீழ் வாழ்வது என்பதாகும். தேசிய விடுதலை என்பது ஒடுக்கும் தேசிய இனத்திடமிருந்து அல்லது ஏகாதிபத்தியத்தின் காலனியத் தளையிலிருந்து பிரிந்து தனி தேசிய அரசை நிறுவிக் கொள்வதாகும்.

பாட்டாளி வர்க்கம் பூர்ஷ்வா தேசிய அரசின் வரலாற்றுப் பாத்திரத்தை அங்கீகரிக்கும் அதே வேளையில் “தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்மறைக் கோரிக்கையுடன் மட்டும் தன்னை நிறுத்திக் கொள்கிறது” என்றார் லெனின். ஒடுக்கும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு பல்தேசிய அரசு சமூகத்தில் ஒடுக்கும் தேசிய இனத்திற்கு மட்டுமேயுரிய தனிச்சலுகையாகவே சுயநிர்ணய உரிமை இருக்கிறது. இரசியாவில் பெரிய இரசிய தேசிய இனத்திற்கு மட்டுமே இச்சலுகை இருந்ததை லெனின் சுட்டிக்காட்டினார். எனவே இங்கு அங்கீகரிக்கப்பட வேண்டியிருப்பது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் ஒவ்வொரு தேசிய கோரிக்கை விசயத்திலும், தேசிய விடுதலை - பிரிவினை கோரிக்கை விசயத்திலும் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற நிலையை பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ளக்கூடாது என்பது அல்ல. மாறாக பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்ட நலன் என்ற கண்ணோட்டத்தில் அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும் அதே நேரத்தில் குறிப்பான ஒவ்வொரு தேசியக் கோரிக்கை - பிரிவினை - விடுதலை விசயத்திலும் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதேயாகும். எனவேதான் பாட்டாளி வர்க்கம் “எந்த ஒரு தேசிய கோரிக்கையையும் ஒவ்வொரு தேசியப் பிரிவினையையும் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டம் என்ற கோணத்திலேயே மதிப்பிடுகிறது” என்றும் “எல்லா தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகிற உரிமை அளிப்பது’ பிரிந்து போகிற பிரச்சினை எழுகிறபோது எல்லா ஏற்ற தாழ்வுகளையும் எல்லா தனித்துவப் போக்குகளையும் நீக்கும் நோக்கத்துடன் அதை அணுகி சீர்தூக்கிப் பார்ப்பது - கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்ததும்; செயல்பூர்வமானதும்; ஜனநாயகம், சுதந்திரம், பாட்டாளி வர்க்க ஐக்கியம் - ஆகியவற்றை உண்மையில் பேணுகிறதுமான கொள்கை இதுதான்” என்றும் கூறினார் லெனின்.

ஆனால் இது எந்தக் காரணத்தாலும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கே மறுப்பாக முடியாது. ஏனெனில் அது தேசிய ஒடுக்குமுறைக்கும், தேசிய சமத்துவமின்மைக்கும், அதன் காரணமாக ஒடுக்கும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களைச் சேர்ந்த பாட்டாளிகளிடையேயான தேசியக் கசப்புணர்வுகளுக்கும் ஒற்றுமை இன்மைக்கும் அதன் காரணமாக வர்க்கப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளி தேசியப் பூசல்களை முதன்மைப் படுத்துவதற்கும், இதன் மூலம் சோசலிச இலட்சியங்களைப் பின்னுக்குத் தள்ளுவதற்கும் ஆதரவளிப்பதாகவே இருக்கும். “சுயநிர்ணய உரிமையை அல்லது பிரிந்து போகும் உரிமையை மறுப்பதானது மேலோங்கி ஆட்சிபுரியும் தேசிய இனத்தின் விசேச உரிமைகளை நடைமுறையில் ஆதரிப்பதாகவே முடியும்” என்றார் லெனின். எனவே பாட்டாளி வர்க்கம் எக்காரணம் கொண்டும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிராக இருக்க முடியாது.

இக்காரணத்தாலேயே இரசியாவில் ரோசாலுக்சம்பர்க் போலந்து தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது அதை கடுமையாகச் சாடினார் லெனின். “போலந்தின் தேசியவாத பூர்ஷ்வாக்களுக்கும் ‘உதவிடக்கூடாதே’ என்ற கவலையில் ரோசாலுக்சம்பர்க் இரசிய மார்க்சியவாதிகளின் செயல்திட்டத்தில் காணப்படும் பிரிந்து போகும் உரிமையை நிராகரிக்கிறார். அப்படிச் செய்கையில் பெரிய இரசிய கறுப்பு நூற்றவர்க்கு அவர் உண்மையில் உதவுகிறார்” என்றும் “போலந்தில் தேசியவாதத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தின் ஆர்வத்தால் உந்தப்பட்டு ரோசா லுக்சம்பர்க் பெரிய - இரசியர்களின் தேசியவாதத்தை மறந்துவிட்டார்” என்றும் கூறினார்.

அதே நேரத்தில் போலந்து - சோசலிஸ்டுக் கட்சியினரின் தேசிய விடுதலை என்ற கோரிக்கையையும் அவர் ஆதரிக்கவில்லை. அது “பூர்ஷ்வா தேசியவாதம்” என்றும் “குட்டி பூர்ஷ்வா தீவிர தேசியவாதம்” என்றும் அவர் சாடினார். 1840-1870களில் மார்க்ஸ் (இரசியாவிலிருந்து) போலந்து பிரிவினையையும் (பிரிட்டனிலிருந்து) அயர்லாந்து பிரிவினையையும் ஆதரித்ததை மேற்கோள்காட்டி போலந்து பிரிவினையை வலியுறுத்தியவர்களுக்கு மார்க்ஸ் அயர்லாந்து பிரிவினையை ஆதரித்ததற்கும், போல்ஷ்விக் கட்சி போலந்து பிரிவினையை ஆதரிக்காததற்கும் கொள்கை அடிப்படை ஒன்றே என்பதை நிறுவினார்.

இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிவது “சாத்தியமற்றது” என்று முதலில் கருதிய மார்க்ஸ் அது “தவிர்க்க முடியாதது” என்று பின்னர் வலியுறுத்தினார். ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கத்தின் கை ஓங்கி அது புரட்சியை முன் நடத்துமானால் அயர்லாந்து விடுதலை சாத்தியம் என முதலில் அவர் கருதினார். ஆனால் ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்கம் கணிசமான காலம் மிதவாதிகளுடைய செல்வாக்கின் கீழிருந்து அவர்களுக்கு வால்பிடித்து அவர்களுடைய கொள்கையையே கடைப் பிடித்ததன் மூலம் புரட்சிகரத் தலைமையற்று நின்றுவிட்டது. அதே நேரத்தில் அயர்லாந்து பூர்ஷ்வா விடுதலை இயக்கம் வலுப்பெற்று புரட்சிகர வடிவங்களை எடுத்தது. அப்போது அயர்லாந்து விடுதலையை ஆதரித்த மார்க்ஸ் “அயர்லாந்தை இங்கிலாந்து அடிமைப்படுத்தியதால் இங்கிலாந்தில் பிற்போக்கு வலுப்பெற்று ஊட்டம் பெற்றுவிட்டது” என்றும் “அயர்லாந்து இங்கிலாந்தின் தளையிலிருந்து விடுபடும்வரை ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் சுதந்திரம் பெற்றிருக்க முடியாது” என்றும், “அயர்லாந்தை விட்டுத் தொலைக்கும்வரை ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் எதையும் சாதிக்க முடியாது. இங்கிலாந்தில் ஆங்கிலேயப் பிற்போக்குவாதத்துக்கு மூல காரணம் அயர்லாந்தை அடிமைப் படுத்தியதுதான்” என்றும் கூறினார்.

ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் பிற்போக்கில் ஊட்டம் பெற்றிருந்தபோது அயர்லாந்து பூர்ஷ்வா விடுதலை இயக்கம் புரட்சிகர வடிவங்களை எடுத்திருந்தது. இந்த நிலையில்தான் மார்க்ஸ் அயர்லாந்து விடுதலையை ஆதரித்தார். “அயர்லாந்து, பிரிட்டிஷ் தொழிலாளர்கள் மார்க்சின் கொள்கையை ஏற்று அயர்லாந்து விடுதலையை தமது முழக்கமாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால் அது படுமோசமான சந்தர்ப்பவாதமாக இருந்திருக்கும். ஜனநாயகவாதிகள், சோசலிஸ்டுகள் என்ற முறையில் தங்கள் கடமைகளைக் கைவிட்டதாக இருந்திருக்கும் ஆங்கிலேயப் பிற்போக்குக்கும், ஆங்கிலேயப் பூர்ஷ்வாக்களுக்கும் விட்டுக் கொடுப்பதாக இருந்திருக்கும்” என்றார் லெனின்.

1840-1860களில் இரசியாவிலும் பெரும்பாலான ஸ்லாவிய நாடுகளிலும் பொதுமக்கள் உணர்ச்சியற்ற உறக்க நிலையில் இருந்தபோது, அங்கு சுயேச்சையான பொதுமக்களின் ஜனநாயக இயக்கங்கள் இல்லாதபோது, போலந்தில் நடைபெற்ற சிறு நிலப்பிரபுக்களின் விடுதலை இயக்கம் இரசிய ஜனநாயகத்தின் கண்ணோட்டத்திலிருந்து மட்டுமின்றி, ஸ்லாவிய மற்றும் ஐரோப்பிய ஜனநாயகத்தின் கண்ணோட்டத்திலிருந்தும் பிரதானமான, பிரமாண்டமான முக்கியத்துவத்தைப் பெற்றதாய் இருந்தது. “அப்போது போலந்து முழுவதுமே - விவசாயிகள் மட்டுமல்ல மேன்மக்களின் பெரும்பகுதியினரும் கூட - புரட்சிகரமாக இருந்தது. தேசிய விடுதலைப் போராட்டத்தின் மரபுகள் மிகவும் பலமானவையாக, ஆழமாக வேரூன்றியவையாக இருந்தன”. இந்த நிலைமையில்தான் மார்க்ஸ் போலந்தின் விடுதலையை ஆதரித்தார்.

ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலைமை வேறுமாதிரியாகிவிட்டது. “பீட்டர்ஸ்பர்க், வார்சாவைக் காட்டிலும் மிக அதிகமான அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகரமான மையமாகிவிட்டது. இரசியாவின் புரட்சிகர இயக்கம் போலந்து இயக்கத்தைக் காட்டிலும் மாபெரும் சர்வதேச முக்கியத்துவத்தை அடைந்துவிட்டது”.

இந்த நிலையில்தான் போலந்து தொழிலாளர்களுக்கு தேசியப் பிரச்சினை இரண்டாம்தர முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிய போலந்து சமூக ஜனநாயகக் கட்சி இரசிய தொழிலாளர்களுடனான நெருங்கிய வர்க்கப் போராட்ட ஒற்றுமையை வற்புறுத்தியது. லெனின் போலந்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் தீர்மானத்தை வலியுறுத்திய அதே வேளையில் அது பிரிந்து செல்வது பற்றிய கோரிக்கையை ஆதரிக்கவில்லை.

எனினும் “போலந்தின் உள்நாட்டு, வெளிநாட்டு நிலைமைகளில் மாறுதல் ஏற்பட்டு மீண்டும் அது தனியாகப் பிரிந்து போவதுதான் சரியானது என்கிற நிலை வராது என்று கூறமுடியாது” என்பதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

1905ல் ஸ்வீடனில் புரட்சிகர எழுச்சி எதுவும் இல்லாத நிலையில் நார்வே தானாகவே தீர்மானித்து ஸ்வீடனிலிருந்து பிரிந்தது. தொடர்ந்து நார்வேயின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து வந்த ஸ்வீடன் பாட்டாளி வர்க்கம் இந்தப் பிரிவினையை அங்கீகரித்தது. நார்வே மீது படையெடுக்க வேண்டும் என்று ஸ்வீடன் நிலப்பிரபுக்கள் கூறியபோது அதை ஸ்வீடன் தொழிலாளி வர்க்கம் எதிர்த்தது. ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்ததை லெனினும் ஆதரித்தார். “ஐரோப்பிய மன்னர்களாலும், ஸ்வீடன் உயர் குடியினராலும் நார்வே மீது திணிக்கப்பட்ட உறவுகள் கலைந்ததால், நார்வே - ஸ்வீடன் தொழிலாளிகளின் உறவுகள் வலுவடைந்தன” என்றார் லெனின்.

மேலும் நார்வே பிரிவினையின்போது நார்வே தேசிய இன மக்களில் பெரும்பான்மையினர் முடியாட்சியையே விரும்பினர். ஆனால் பாட்டாளி வர்க்கம் குடியரசை விரும்பியது. எனவே “நிலைமை சாதகமாக இருந்தால் புரட்சி அல்லது பெரும்பான்மையின் விருப்பத்துக்கு இணங்கி நின்று தொடர்ந்து பிரச்சாரமும் கிளர்ச்சியும் என்பதுதான் நார்வே பாட்டாளி வர்க்கத்தின் நிலை” என்பதையும் லெனின் விளக்கினார்.

அயர்லாந்து, போலந்து, நார்வே ஆகிய மூன்றின் உதாரணங்கள் காட்டுவது என்ன?

முதலாவதாக: ஒடுக்கும் தேசிய இனத்தின் ஜனநாயக இயக்கங்களோ பாட்டாளி வர்க்க இயக்கங்களோ இன்றி அது பிற்போக்கில் மூழ்கி இருக்கும்போது ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தை உறுதியாக தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்பதை அயர்லாந்து போலந்து பிரச்சினைகளில் மார்க்சின் அணுகுமுறை தெளிவுபடுத்துகிறது.

இரண்டாவதாக: ஒடுக்கும் தேசிய இனத்தில் ஜனநாயக இயக்கங்களும், பாட்டாளி வர்க்க இயக்கங்களும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தைவிட முன்னணியில் இருக்கும்போது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அவை அங்கீகரிப்பதுடன் இரு தேசிய இன பாட்டாளி வர்க்கமும் ஒன்றுபட்டு போராட வேண்டும்; ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பிரிவினைக் கோரிக்கையை ஆதரிக்கக்கூடாது என்பதை போலந்து விவகாரத்தில் போல்ஷ்விக் கட்சியின் அணுகுமுறை உணர்த்துகிறது.

மூன்றாவதாக: ஒடுக்கும் தேசிய இனத்தில் பாட்டாளி வர்க்க இயக்கம் இருந்து அதைவிட ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தேசிய விடுதலை இயக்கம் முன்னணியில் இருக்குமாயின் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுடன் பிரிவினையையும் அங்கீகரிக்க வேண்டும். அதே நேரத்தில் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் சாத்தியமானால் ஒரு புரட்சிக்குத் தயாராய் இருக்க வேண்டும் என்பதை ஸ்வீடன், நார்வே கட்சிகளின் அணுகுமுறையும் லெனின் அணுகுமுறையும் உணர்த்துகின்றன.

தொகுப்பாகக் கூறின் இம்மூன்று உதாரணங்களும் உணர்த்தும் உண்மை என்னவெனில் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்க தேசியத்திட்டம் தேசிய விடுதலையை முன்வைப்பதா அல்லது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்துடன் ஒன்றிணைந்து வர்க்கப் போராட்டத்தை முன்வைப்பதா என்பது முற்றிலும் ஒடுக்கும் தேசிய இனப்பாட்டாளி வர்க்கத்தின் பலம் மற்றும் நடத்தையை பொருத்தே தீர்மானிக்கப்படுகிறது என்பதேயாகும்.

எனினும் இன்னொருவகைப்பட்ட தேசிய விடுதலைக் கோரிக்கையையும் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியாது. போலந்து, அயர்லாந்து விடுதலையை ஆதரித்தது போலவே மார்க்ஸ் 1840-1850ம் ஆண்டுகளில் ஹங்கேரியர்களின் விடுதலை இயக்கத்தையும் ஆதரித்தார். அதே சமயத்தில் செக் மக்கள், தெற்கு ஸ்லாவ் மக்கள் என்கிற இரு தேசிய இனங்களின் விடுதலை இயக்கங்களையும் எதிர்த்தார். ஏனெனில் செக்குகளும், தெற்கு ஸ்லாவியர்களும் பிற்போக்கு தேசிய இனங்களாக இருந்தனர். ஐரோப்பாவில் இரசியா எதேச்சதிகார ஆட்சிக்கு உதவி செய்யும் ‘காவல் நிலையங்களாக’ இருந்தனர். ஹங்கேரியங்களும் போலந்துக்காரர்களும் எதேச்சதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தபோது செக்குகளும், தெற்கு ஸ்லாவியர்களும் ஜாரியத்திற்கு ஆதரவாக இருந்தனர். ஜாரியம் ஐரோப்பியப் புரட்சி இயக்கத்திற்கே விரோதியாக இருந்ததால் அதற்கு ஆதரவளித்த செக், தெற்கு ஸ்லாவ் தேசிய இனங்களின் தேசிய விடுதலையினை மார்க்ஸ் ஆதரிக்கவில்லை.

ஸ்வீடன் - நார்வே பிரச்சினையில் நார்வேயின் சுயநிர்ணய உரிமையை ஸ்வீடன் தொழிலாளர்கள் ஆதரிப்பது அவர்களுடைய கடமையாக இருந்தது (அப்படி நிபந்தனை அற்ற முறையில் ஆதரிக்காத ஸ்வீடன் தொழிலாளி ஒரு சமூக ஜனநாயகவாதியாக இருக்கமுடியாது என்றார் லெனின்) என்பதைச் சுட்டிக்காட்டிய லெனின் அதே நேரத்தில் பிரிவினையை ஆதரிப்பது நார்வே தொழிலாளர்களுக்கு ஒரு கடமையாக இருக்கவில்லை என்பதையும் சில சமயங்களில் (பிரிவினையால் பிரிட்டிஷ் - ஜெர்மன் யுத்த சாத்தியப்பாடு நிச்சயம், அல்லது சாத்தியம் என்ற நிலை ஏற்படுமானால்) பிரிவினையை எதிர்க்கவும் செய்யலாம். அதுவே அவர்கள் தமது சர்வதேசக் கடமையினை அப்போது நிறைவேற்றுவதாக அமையும் என்று எடுத்துரைத்தார். 

மார்க்ஸ், செக், தெற்கு ஸ்லாவ் விடுதலையை எதிர்த்ததற்கும், நார்வே தொழிலாளர்கள் தமது தேசிய இனப் பிரிவினையை எதிர்ப்பதற்கு வாய்ப்புள்ள காரணம் என லெனின் கூறுவதற்கும் அடிப்படை ஒன்றே; அதாவது ஒரு தேசிய இனத்தின் விடுதலை, ஒட்டுமொத்த சர்வதேசப் புரட்சி இயக்கத்தின் நலன்களின் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட வேண்டும். சர்வதேசப் புரட்சியின் நலனுக்கு விரோதமாக சர்வதேச எதிரிகளுக்கு ஆதரவாக விளங்குமாயின் அல்லது உலக அரங்கில் மிகப் பெரிய யுத்தங்களுக்கும் அழிவுகளுக்கும் அது காரணமாய் விளங்குமாயின் அத்தகைய தேசிய விடுதலைக் கோரிக்கைகள் எதிர்க்கப்பட வேண்டும், ஆதரிக்கப்படக்கூடாது என்பதே அது. ஐரோப்பாவின் ஒட்டுமொத்தப் புரட்சி நலனுக்கு விரோதமாக இருந்ததால் செக், தெற்கு ஸ்லாவ் தேசிய விடுதலைக் கோரிக்கையை மார்க்ஸ் எதிர்த்தார்; ஜெர்மனி, பிரிட்டிஷ் இடையிலான அழிவு யுத்த சாத்தியப்பாட்டிற்கு காரணமாக அமைந்துவிடுமெனில் நார்வே பிரிவினையை தொழிலாளர்கள் எதிர்ப்பார்கள் என்றார் லெனின்.

தேசியப் பிரச்சினையில் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையும் 
வர்க்கப் போராட்ட நலன்களும்

அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை, தேசங்களுக்கிடையே சமத்துவம், அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களிடையே ஒற்றுமை என்ற “பாட்டாளி வர்க்கத்தின் இக்கொள்கையின் அடிப்படையிலேயே ஒவ்வொரு தேசியக் கோரிக்கையையும் பிரிவினைக் கோரிக்கையையும் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டம் என்ற கோணத்தில் மதிப்பீடு செய்து அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை அங்கீகரிப்பதுடன் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பிரிவினைக் கோரிக்கையை - தேசிய விடுதலைக் கோரிக்கையை - ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டையும் மார்க்சிஸ்டுகள் மேற்கொள்கிறார்கள்”.

அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை, தேசங்களுக்கிடையே சமத்துவம் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதும், அத்துடன் குறிப்பான பிரச்சினைகளில் தேசிய விடுதலையை - பிரிவினையை - ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டை மேற்கொள்வதும் எவ்வகையில் பாட்டாளிவர்க்க ஒற்றுமைக்கும் வர்க்கப் போராட்ட நலன்களுக்கும் உகந்ததாக அமைகிறது?

சுயநிர்ணய உரிமையையும், சமத்துவத்தையும் மறுப்பது தேசிய ஒடுக்குமுறையே. இது இரு தேசிய இனங்களுக்கிடையே ஒடுக்கும் தேசிய இனம் - ஒடுக்கப்படும் தேசிய இனம், சலுகை பெற்ற தேசிய இனம் - உரிமை மறுக்கப்பட்ட தேசிய இனம் என்ற பிளவையும் ஏற்படுத்துகிறது. இது இரு தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்திடையேயான பிளவுக்குக் காரணமாகிறது என்பதுடன் தேசியப் பூசல்களுக்கும் காரணமாகிறது. தேசியப் பூசல்கள் ஒவ்வொரு தேசிய இனத்திலும் மூலதனத்துக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தைப் பின்னுக்குத் தள்ளுவதுடன் மூலதனத்துக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையையும் சிதறடிக்கிறது. இதற்கு மாறாக சுயநிர்ணய உரிமையையும் சமத்துவத்தையும் அங்கீகரிப்பது (இதை அங்கீகரிக்க வேண்டியவர்கள் முதன்மையாக ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளிகள்தாம்) ஒடுக்கப்படும் தேசிய இனப்பாட்டாளிகளுக்கு ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளிகள் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் என்பதுடன் அது தேசியப் பூசல்களை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளிவிடும். ஒவ்வொரு தேசிய இனப் பாட்டாளி வர்க்கமும் தனது சொந்த மூலதனத்தை எதிர்த்துப் போராடுவதையும் சர்வதேசிய மூலதனத்துக்கு எதிராக ஒன்றுபடுவதையும் இது சாத்தியமாக்கும். இவ்வாறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் தேசங்களிடையிலான சமத்துவத்தையும் அங்கீகரிப்பது வர்க்கப் போராட்டத்துக்கும் வர்க்க ஒற்றுமைக்கும் அவசியமான நிபந்தனைகளாகின்றன. எனவேதான் “பாட்டாளிகளின் ஐக்கியம் பற்றிய நலன்களும், அவர்களது வர்க்க ஒற்றுமையின் நலன்களும் தேசிய இனங்களின் பிரியும் உரிமையை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனக் கோருகின்றன” என்று பிளக்கானவ் எழுதியதை ஆதரித்து எழுதினார் லெனின்.

எனினும் ஒடுக்கப்படும் தேசிய இனம் பிரிவினைக் கோரிக்கையை, விடுதலைக் கோரிக்கையை எழுப்பும் குறிப்பான காலங்களில் ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் தேசிய சமத்துவத்தையும் அங்கீகரிப்பதாகக் கூறுவது மட்டும் பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கும், வர்க்கப் போராட்ட நலன்களுக்கும் போதுமானதல்ல. அவற்றை அங்கீகரிப்பதுடன் கூடவே தேசிய விடுதலைக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற குறிப்பான நிலைப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும். ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் ஆதரவு - சாத்தியமானால் தலைமை ஏற்பது - அல்லது எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இம்முடிவுகள் ஒவ்வொரு பிரச்சினையிலும் பருண்மையான நிலைமைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பருண்மையான முடிவுகளாகும். இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் மட்டுமே பாட்டாளிவர்க்க ஒருமைப்பாடும், வர்க்கப் போராட்ட நலன்களும் பாதுகாக்கப்படுகின்றன.

தேசிய இனங்களின் சுயநிர்ணயம் சம்பந்தமாக மூன்றுவித நாடுகளைக் குறிப்பிட்ட லெனின் அவற்றில் ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியக் கடமையை - பாட்டாளிவர்க்க ஒற்றுமை, வர்க்கப் போராட்ட நலன் என்பதற்கு அதுவே முதல் நிபந்தனை - தெளிவுபடுத்தினார். பூர்ஷ்வா முற்போக்கு தேசிய இயக்கங்கள் வெகு நாட்களுக்கு முன்பே முடிந்து, பின்பு ஏகாதிபத்தியங்களாக மாறிவிட்ட மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் அவற்றால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் காலனி நாடுகளின் உடனடிச் சுதந்திரத்திற்காக போராட வேண்டும் என்றார். பூர்ஷ்வா தேசிய இயக்கங்கள் முடிவடையாத - நிகழ்காலத்திற்குரியதாக உள்ள ஒடுக்கும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களைக் கொண்ட பல தேசிய அரசு சமூகங்களில் உள்ள ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவதுடன் ஐக்கியப்படவும் வேண்டும் என்றார். பூர்சுவா தேசிய இயக்கங்கள் தொடக்க நிலையில் உள்ள காலனி, அரைக்காலனி நாடுகளில் உள்ள தேசிய விடுதலை இயக்கங்களுக்கு - புரட்சிகர சக்திகளுக்கு ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கம் உறுதியான ஆதரவு தர வேண்டும் என்றார்.

பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தைப் பாதுகாப்பதில் ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளையே லெனின் எப்போதும் முதன்மையாக வலியுறுத்தி வந்தார். “ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை சர்வதேசிய உணர்வில் பயிற்றும்போது ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு பிரிந்துபோகும் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை ஆதரித்து அதற்காகப் போராட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாவிட்டால் சர்வதேசியம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக ஜனநாயகவாதிகள் அத்தகையப் பிரச்சாரத்தை செய்யத் தவறினால் அவ்வாறு தவறிய ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும், கயவர் என்றும் கருதுவது நமது உரிமையும் கடமையும் ஆகும்” என்றும் “சுயநிர்ணய உரிமைப் பிரச்சினை ஒடுக்கும் தேசியங்களைச் சேர்ந்த சோசலிஸ்டுகளின் நடத்தையை ஆதாரமாக கொண்டு திகழ்கிறது” என்றும் அவர் கூறினார்.

ஆனால் ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் பிற்போக்கில் ஊட்டம் பெற்றிருக்கும்போது ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் விடுதலையை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு மார்க்ஸ் அயர்லாந்து விடுதலையை ஆதரித்தது உதாரணமாகும். இந்த விடுதலையினால் ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்தின் பிற்போக்கு ஊட்டம் வற்றி அது ‘ஏதும் செய்ய முடியாது’ என்ற நிலைக்கு முடிவு கட்டப்படும் என்று மார்க்ஸ் கருதினார். மேலும் இத்தேசிய விடுதலையினால் ஒடுக்கும் தேசிய இனத்திலும் தேசியப் பிரச்சினை இரண்டாம்பட்சமாகி வர்க்கப் போராட்டம் முதன்மையானதாகும். இவ்வாறு இவ்விசயத்தில் வர்க்கப் போராட்டமும் அதனால் வர்க்க ஒற்றுமையும் (ஒடுக்கும் தேசிய இனத்தின் பிற்போக்கு ஊட்டம் வற்றும்போது அது ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்துடன் வர்க்கப் போராட்டத்தில் ஒன்றுபடுவதும் சாத்தியமாகும்) பயன்பெறுகிறது.

மற்றொரு உதாரணமாக ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் பலவீனமாக இருக்கும்போது தனது சொந்த ஆளும் வர்க்கத்தை தூக்கி எறியும் போராட்டத்தில் உடனடியாகத் தலைமை ஏற்காத நிலையில் இருக்கும்போது (உதாரணம் ஸ்வீடன் பாட்டாளி வர்க்கம்) அது ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுடன் அது பிரிந்து போகும்போது முழு ஆதரவும் தருவது (ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்து சென்றபோது அதை ஸ்வீடன் பாட்டாளி வர்க்கம் அங்கீகரித்தது) பாட்டாளி வர்க்க ஒற்றுமையைப் பிளவுபடுத்துவதாகும் என்று வாதாடியவர்களுக்கு எதிராக “ நார்வே, ஸ்வீடன் மக்களின் பொது நலன்களும் அவர்களின் நெருங்கிய உறவும்தான் ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்ததால் பயன்பெற்றன” என்றும் “ஸ்வீடன், நார்வே ஆகிய இரு பூர்ஷ்வாக்களுக்கு எதிரான போராட்டத்தில் இரு தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களின் சம அந்தஸ்தையும், வர்க்க ஒருமைப்பாட்டையும் தங்களால் பேணிப் பாதுகாக்க முடியும் என்பதை ஸ்வீடன் தொழிலாளர்கள் நிரூபித்துவிட்டார்கள்” என்றும் லெனின் கூறினார். ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்ததன் மூலம் தேசிய பூசல் பின்னுக்குத் தள்ளப்பட்டு தமது சொந்த முதலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தை இரு தேசிய இன பாட்டாளி வர்க்கமும் முதன்மைப் படுத்த முடிந்ததையே இங்கு லெனின் குறிப்பிடுகிறார். இதன் மூலம் பாட்டாளி வர்க்க ஒருமைப்பாடும் வர்க்கப் போராட்ட நலனும் இலாபம் அடைந்தது.

அடுத்து ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் பலமானதாக இருந்து அது ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமானால் அதன் மூலம் ஒடுக்கப்படும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்துடன் அது ஐக்கியப்பட முடியும். இத்தகைய நிலைமைகளில் ஒடுக்கப்படும் தேசிய இனத்திலிருந்து பிரிவினைக் கோரிக்கை எழுமானால் அது பிற்போக்கானது; தமது சொந்த பூர்ஷ்வா தேசியவாத நலன்களைக் காப்பதை நோக்கமாகக் கொண்டது என்பது மட்டுமின்றி ஒன்றுசேர்ந்து பொது எதிரியை - ஒடுக்கும் தேசிய இன ஆளும் வர்க்கத்தை - எதிர்த்துப் போராடி வீழ்த்துவதற்கான வாய்ப்பை நிராகரிப்பதன் மூலம் தனது சொந்த பூர்ஷ்வா தேசியவாத நலன்களுக்கு மறைமுகமாக துணை செய்வதும் ஆகும். எனவேதான் இரசிய பெருந்தேசிய இனத்தில் பாட்டாளி வர்க்க இயக்கம் பலமாகவும் அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகப் போராடுவதாகவும் கட்சியின் முக்கிய சக்தியாகவும் இருந்தபோது அதனுடன் ஒன்றுபட்டு போராடுவதற்கு பதிலாக - போலந்தில் ஒரு பிரிவினர் பிரிந்துபோக வேண்டும் என கோரியதை லெனின் எதிர்த்தார். இத்தகைய நிலைமைகளில் ஒடுக்கும் - ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பாட்டாளிகளுக்கிடையேயான ஒற்றுமையை நிராகரித்து ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பிரிவினையைக் கோருவது தேசியப் பூசல்களை இரண்டாம்பட்ச நிலைக்குத் தள்ளுவதற்கான வாய்ப்பை நிராகரித்து வர்க்க போராட்ட நலன்களுக்கும் வர்க்க ஒற்றுமை நலன்களுக்கும் ஊறு செய்வதாகும். இத்தகைய நிலைமைகளில் அதாவது ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை - பிரிந்து போகும் உரிமையை அங்கீகரித்து பிரச்சாரம் செய்யும்போது ஒடுக்கப்படும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் அதை ஏற்று “ஐக்கியப்படும் உரிமைக்காக” தனது தேசிய இனத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும். இவ்வாறு “தேசிய குறுகிய மனப்பான்மை, தனித்திருத்தல், ஒதுங்கி வாழ்தல் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும்” என்றார் லெனின்.

அதே போல் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக் கோரிக்கை உலகப் புரட்சியின் எதிரிக்கும் பிற்போக்குவாத சக்திகளுக்கும் சாதகமாக அமையுமெனில், அத்தகைய நிலைமைகளில் பேரழிவு கொண்ட யுத்தங்களுக்கு காரணமாகிவிடக்கூடும் எனில் அத்தகைய நிலைமைகளிலும் அத்தேசிய இன பாட்டாளி வர்க்கமே அவ்விடுதலைக் கோரிக்கையை எதிர்க்க வேண்டும். இது உலகப் பாட்டாளி வர்க்க நலன்களுக்குப் பொதுவாக மட்டுமின்றி ஒடுக்கப்படும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்தின் குறிப்பான நலன்களுக்கும் கூட அவசியமானது. இது “முழுமையையும் பொதுவையும் ஏற்றுக் கொள்வதற்கான, பொதுவின் நலன்களுக்கு பகுதியின் நலன்கள் கீழ்ப்பட்டவை” என்பதற்கான போராட்டமாகும். இப்போராட்டம் ஒடுக்கப்படும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்துடன் ஒற்றுமையைப் பேணுவதற்கும் தேசிய, சர்வதேசிய வர்க்கப் போராட்ட நலன்களுக்கும் அவசியமானதாகும்.
பல்தேசிய இன அரசு சமூகத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சி

ஒடுக்கும், ஒடுக்கப்படும் தேசிய நலன்களைக் கொண்ட ஒரு பல்தேசிய இன அரசு சமூகத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி அமைய வேண்டும்? ஒரு அரசின் கீழ் ஒரு கட்சி என்ற கோட்பாட்டின்படியா, ஒரு தேசிய இனத்திற்கு ஒரு கட்சி என்ற கோட்பாட்டின்படியா?

பாட்டாளி வர்க்கக் கட்சி ஒவ்வொன்றும் ஒரு வேலைத்திட்டத்தைக் கொண்டதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வேலைத்திட்டங்களுடன் ஒரு கட்சி இயங்க முடியாது. அவ்வாறான நோக்கில் ஒரு பல்தேசிய இன அரசு சமூகத்தில் ஒடுக்கும் தேசிய இனம் மட்டுமே சலுகையாக சுயநிர்ணய உரிமை பெற்றதாக இருக்கிறது. மற்ற ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு அவ்வுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் தனது சொந்த ஆளும் வர்க்கங்களை எதிர்த்த வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கொள்ளும் அதே வேளையில் ஒடுக்கப்படும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் உடனடியாக தேசிய விடுதலை மூலம் தேசிய அரசு அமைத்தல் என்ற கடமையினை எதிர்கொள்கிறது. எனவே இரு தேசிய இன பாட்டாளிகளுக்கும் வேலைத்திட்டம் ஒன்றாக இல்லை. இந்நிலையில், அவை எதிர்க்கொள்ளும் வேறுபட்ட கடமைகளின் காரணமாக அவை தனித்தனி கட்சிகளாக அமைவதே தர்க்கப் பொருத்தமாகும்.

ஆனால் ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் பலமாகவும், புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் நிலையிலும் இருக்குமாயின் (இரசியா, சீனா போல) இரு தேசிய இன பாட்டாளிகளும் ஒரே வேலைத்திட்டத்தின் கீழ் ஒரே கட்சியில் இணைவதும் சாத்தியமே. அதாவது ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து ஆதரித்து அதற்காகப் போராடுமாயின் ஒடுக்கப்படும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் தேசிய விடுதலை என்ற தனது கோரிக்கையை தானும் சுயநிர்ணய உரிமை என்பதாக மாற்றிக் கொண்டு அத்துடன் ஒரே கட்சியில் ஒன்றிணைய முடியும் என்பது சாத்தியம் என்பது மட்டுமல்ல. இத்தகைய நிலைமையில் இதுவே பாட்டாளி வர்க்க சர்வதேசியமும் ஆகும்.

எனவே ஒரு பல்தேசிய இன அரசு சமூகத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சி, அரசு எல்லையின் அடிப்படையில் அமைவதா? தேசிய இன பிராந்திய எல்லை அடிப்படையில் அமைவதா? என்பது முற்றிலும் ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தின் பலத்தையும், நடத்தையையும் சார்ந்தே இருக்கிறது.

இவ்வாறு கூறும்போது இது பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கு எதிரானது என்றும் பிளவுபடுத்துவது என்றும், ஒருமைப்படுத்தப்பட்ட பெரிய அரசை பிளவுபடுத்தி அதன் மூலம் பொருளுற்பத்தி வளர்ச்சிக்கும் வர்க்கப் போராட்ட நலன்களுக்கும் உள்ள கூடுதலான, சாதகமான நிலைமைகளைக் கெடுக்கும் பிற்போக்கு நடவடிக்கை என்றும், ஏற்கெனவே ஒரு அரசுக்குள் ஒன்றுபட்டுள்ள பல்தேசிய இன மக்களை தேசிய இன ரீதியில் பிளவுபடுத்துவது என்றும், வர்க்கப் போராட்டத்தை கைவிடுவது தேசிய வாதத்துக்குப் பலியாவது என்றும் கூறப்படும் விமர்சனங்களை நாம் அறிவோம் (இதுவரை இத்தகைய விமர்சனங்களைச் சார்ந்தே தவறான நிலைப்பாடுகளை நாமும் கொண்டிருந்தோம்) ஆனால் இவை அனைத்தும் மார்க்சிய - லெனினியத்துக்கு உட்படாத தவறான விமர்சனங்களே. உண்மையில் இந்த விமர்சனங்கள் எந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் வைக்கப்படுகின்றனவோ அந்தக் கோட்பாடுகளே இந்த விமர்சனங்களுக்குரியனவாகும்.

ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் பிற்போக்கு ஊட்டம் பெற்றிருக்கும்போது அல்லது பலவீனமாயிருக்கும்போது ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்து செல்வதால் பாட்டாளி வர்க்க ஒற்றுமையும், வர்க்கப் போராட்ட நலனும் பலம் பெறும் விசயத்தை அயர்லாந்து, நார்வே பிரச்சினைகள் மூலம் லெனின் தெளிவுப்படுத்தியதை ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். எனவே ஒரு தேசிய இனம் பிரிந்து சென்று தனி தேசிய அரசு அமைக்கிறது என்றாலே அது பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கு எதிரானது என்ற வாதம் தவறானதும் உண்மைக்குப் புறம்பானதும் ஆகும். பல சமயங்களில் பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கும் வர்க்கப் போராட்ட நலனுக்கும் பிரிவினை அவசியமாகிறது என்பதே உண்மை.

எனவே பருண்மையான நிலைமைகள் குறித்த ஆய்வின்றி ஒரு அரசின் எல்லைக்குள் ஒரு கட்சி என்ற கோட்பாடு முன் வைக்கப்படுமானால் அதில் ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதம் மட்டும் எஞ்சியிருக்கும்.

பாட்டாளி வர்க்கம் இரண்டு வகையில் அமைந்த அரசு எல்லைகளை மட்டுமே ஜனநாயகப் பூர்வமானதாக ஏற்றுக் கொள்கிறது. முதலாவது: தேசிய இன அடிப்படையில் - மொழி உணர்வு அடிப்படையில் அமைந்த தேசிய அரசு எல்லைகள் இத்தகைய எல்லைகளை இயற்கையானது என்று எங்கெல்சும் “ஜனநாயக முறையிலானது’” என்று லெனினும் அழைத்தார்கள். மற்றொன்று ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் தாமாக விரும்பி பிரிந்துபோகும் உரிமையுடன் இணைந்து அமைத்துக் கொண்ட அரசு எல்லைகள். இதை ‘ஜனநாயக ரீதியான மையப்பாடு’ என்று லெனின் அழைத்தார்.

இவ்விரு ஜனநாயக ரீதியிலமைந்த அரசு எல்லைகளைத் தவிர்த்து வல்லாதிக்கத்தின் மூலம் அமைந்த அரசு எல்லைகளை “ஜனநாயக முறையில்” மக்கள் உணர்வுகளைக் கவனித்து மீண்டும் திருத்தி வரையும் சோசலிஸ்டுகளின் கடமை குறித்தே லெனின் வலியுறுத்தினார்.

அவர் எப்போதுமே வல்லாதிக்கத்தின் மூலம் வரையப்பட்ட அரசு எல்லைகளைப் பொருட்படுத்தவில்லை. மாறாக “குறிப்பிட்ட அரசின் வரலாற்றில் எம்மாறுதல்கள் நிகழ்ந்தாலும், பூர்ஷ்வாக்களால் தனி அரசுகளின் எல்லைகள் எவ்வாறு மாற்றப்பட்டாலும் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை நீடிப்பது பற்றி மட்டுமே அவர் கவலைப்பட்டார். சுயநிர்ணய உரிமையின் காரணமாக இரசியா தனித்தனி குடியரசுகளாகச் சிதறிவிடும் என்றவர்களுக்குப் பதில் சொல்லும்போது “இதற்காக நாம் அஞ்சவில்லை, சுதந்திரக் குடியரசுகளின் எண்ணிக்கை எத்தனையானாலும் நாம் அஞ்சவில்லை. அரசு எல்லைகள் எப்படி வரையப்பட்டிருக்கின்றன என்பது நமக்கு முக்கியமானதல்ல. ஆனால் எல்லா தேசியங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்கள் முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தில் தேசிய இன வேறுபாடின்றி தொடர்ந்து கூட்டாக இருப்பதுதான் நமக்கு முக்கியமானது” என்றார்.

“அரசியல் ரீதியில் பிரிந்துபோகும் சுதந்திரம்-இது அரசின் எல்லைக் கோடுகளை வரைவதைக் குறிக்கிறதா” என்ற லெனின், இரசியாவில் “எந்தக் குறிப்பிட்ட தேசிய வளர்ச்சிப் பாதையைப் பற்றியும் உத்திரவாதம் அளிக்க முடியாது” என்றும் “உதாரணமாக உக்ரேய்ன் ஒரு சுதந்திர அரசாக அமையுமா என்பது முன்கூட்டியே அறியமுடியாத ஆயிரம் காரணங்களால் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று” என்றும் கூறினார். பின்னர் பின்லாந்து, போலந்து தேசிய இனங்கள் தனித்தனி நாடுகளாகப் பிரிந்து சென்றதை லெனின் அங்கீகரித்தார்.

இவை எல்லாம் பாட்டாளி வர்க்க ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காக மீண்டும் அரசு எல்லைகளை ஜனநாயக ரீதியில் வரைவது பற்றிதான் மார்க்சிஸ்டுகள் கவலைப் படுகிறார்களே தவிர பலாத்காரமாக வல்லாதிக்கமாக உருவாக்கப்பட்ட அரசு எல்லைகளைப் பாதுகாப்பது பற்றியல்ல என்பதைத் தெளிவுபடுத்தப் போதுமான சான்றுகளாகும்.

“முதலாளித்துவ உற்பத்திச் சக்திகளின் விரிவான, துரிதமான வளர்ச்சிக்கு பரந்த அரசியல் ரீதியில் நெருக்கமான ஒன்றிணைந்த ஐக்கியப்பட்ட பிரதேசங்கள்தான் தேவை” என்றும், “மத்திய கால ஒற்றுமையிலிருந்து எதிர்கால அனைத்துலக சோசலிச ஐக்கியத்துக்கான பாதையில் இந்தப் பெரிய அதிகார மையப்பாடு பெற்ற அரசானது வரலாற்று ரீதியில் பிரமாண்டமான முன்னேற்றம், முதலாளித்துவத்துடன் பிரிக்க முடியாதபடி இணைந்த அத்தகையதொரு அரசின் வழியாகத்தான் எந்த ஒரு பாதையும் சோசலிசத்தை நோக்கிச் செல்ல முடியும்” என்றும், “பாட்டாளி வர்க்கம் எவ்வளவு பெரிதாக முடியுமோ அவ்வளவு பெரிதான ஓர் அரசை உருவாக்கவே முயல்கிறது. காரணம் இது உழைக்கும் மக்களுக்குச் சாதகமானது. இது தேசங்களை ஒன்றுக்கொன்று மேலும் நெருக்கமாக இணையச் செய்கிறது. அவை வருங்காலத்தில் முற்றிலும் இணையும்படி செய்கிறது” என்றும் லெனின் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டி, வல்லாதிக்க முறையில் அமைந்த பெரிய பல்தேசிய இன அரசுகளின் எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வாதிடுகின்றவர்களின் கூற்றை, அதாவது, பல்தேசிய இன அரசு என்பது பின்தங்கிய நிலையைக் குறிக்கிறது அல்லது அது ஒரு விதிவிலக்கு என்கிற காவுத்ஸ்கியின் வாதத்தை ஆதரித்தபோதும், “ஆயினும் மையப்பாட்டை ஆதரிக்கும்போது நாம் ஜனநாயக மையப்பாட்டையே ஆதரிக்கிறோம் என்பதை மறந்துவிடுவது மன்னிக்க முடியாதது” என்று கூறியபோதும், சிறிய நாடுகளைவிட பெரிய நாடுகளை இயல்பாக மார்க்சியவாதிகள் விரும்புவதற்கு முதல் நிபந்தனையாக “மற்ற எல்லா நிலைமைகளும் சரிசமமாக இருக்க வேண்டும்” என்பதை வலியுறுத்தியபோதும், “ஆனால் இந்த நோக்கங்களை வன்முறை மூலம் அடைவதற்கு விரும்பவில்லை; மாறாக அனைத்து தேசங்களின் தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் சுதந்திரமான சகோதர ஒற்றுமை மூலம் மட்டுமே அடைய விரும்புகிறது” என்ற இந்தக் கூற்றை லெனினே மறுத்துவிடுகிறார்.

பல்தேசிய இன அரசின் கீழ், அது வல்லாதிக்கத்தால் ஏற்பட்டதுதான் என்றாலும்கூட பொருளாதார ரீதியிலான இணைப்பும், குவிவும் ஏற்பட்டு விட்டதை சுட்டிக் காட்டி இந்நிலையில் பிரிவினை என்பது பிற்போக்கானதும், சாத்தியமற்றதுமாகும் என்று வாதிட்டவர்களுக்கு எதிராக இது “ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதம்” என்று லெனின் பதில் அளித்தார். மக்களின் மொழி, உணர்வுகள் அடிப்படையில், தேசிய இன அடிப்படையில் அவர்களுடைய உணர்வுகளையும் சித்தத்தையும், மதித்து அரசு எல்லைகளை மறுவரைவு செய்யாமல் ஏகாதிபத்தியங்கள் ஏற்கெனவே இராணுவ ரீதியில் கைப்பற்றி பொருளாதார ரீதியில் இணைத்துவிட்டதை முற்போக்கானது என்றும், அதைப் பிரிப்பது பொருளுற்பத்தி வளர்ச்சிக்குத் தடை என்றும் போலந்து நண்பர்கள் வாதிட்டார்கள். இதை “ஏகாதிபத்தியப் பொருளாதார வாதமே” என்று லெனின் அடையாளம் காட்டினார்.

மேலும் இங்கிலாந்துடன் அயர்லாந்து கொண்டிருந்த நெருக்கமான பொருளாதாரப் பிணைப்பும், சார்பும் மார்க்ஸ் அயர்லாந்து விடுதலைக்கு ஆதரவு தருவதைத் தடுக்கவில்லை என்பதையும், ஏகாதிபத்தியத்தின் கீழ் பொருளாதாரச் சார்பு கொண்டவையாக மாறிவிட்ட காலனிகளின் விடுதலைகூட இந்த ஏகாதிபத்திய பொருளாதாரவாதிகளின் கருத்தோட்டத்தில் பிற்போக்கானதாக சாத்தியமற்றதாக மாறிவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்து ஒரே அரசு எல்லைக்குள் இணைந்து இருக்கும் பல்தேசிய இன மக்களை பிளவுபடுத்துவது என்ற அவர்களுடைய மறுப்பும் கூட ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதமே. தேசிய ஒடுக்குமுறையின் கீழ் மக்கள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்ற கருத்தே பொய்யானதாகும். எனவே அவர்களை பிளவுபடுத்துவது என்ற பிரச்சினைக்கே அங்கு இடம் இல்லை. மார்க்சிஸ்டுகள் எல்லா விசயங்களையும் போலவே தேசம், தேசிய இனம் என்பவற்றையும் வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையிலேயே அணுகுகின்றனர். அவை நிரந்தரமானவை என்றோ இறுதியானது என்றோ பாதுகாக்கப்பட வேண்டியது என்றோ அவர்கள் கருதவில்லை. ஆனால் வரலாற்றிலிருந்து அவற்றை நீக்குவதற்கு முன்னால் அவற்றின் வரலாற்றுப் பாத்திரத்தை அங்கீகரித்து அவற்றுக்கு முழுச் சுதந்திரமும் ஜனநாயகமும் தரப்பட வேண்டும் என்றும் அவற்றின் முழு வளர்ச்சிப் போக்கிலேயே தேசிய இனங்கள் ஒன்றோடொன்று ஜனநாயக ரீதியில் கலந்து இறுதியில் மறையும் என்றும் கருதுகிறார்கள். ஆனால் முதலாளித்துவவாதிகள் மக்களின் இந்த உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை, மாறாக ஒடுக்குகிறார்கள். எல்லைகளை தமது பொருளாதாரத் தேவைகளாக மட்டுமே கருதி விரிவுபடுத்தி வல்லாதிக்கங்களை நிறுவுகிறார்கள். இது முற்றிலும் ஜனநாயக விரோதமானது; மக்களிடையே தேசியப் பூசல்களை உருவாக்கக் கூடியதும் பிற்போக்கானதும் ஆகும். “தேசிய இனங்களை ஒடுக்குகின்ற கொள்கை என்பது தேசங்களைப் பிரிக்கின்ற கொள்கை” என்றும் “மக்களுடைய மனங்களைத் திட்டமிட்ட வகையில் கெடுக்கின்ற கொள்கை” என்றும் லெனின் சொன்னார். பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றுபடுவது, இரண்டற கலப்பது என்பது தேசிய இன ஒடுக்குமுறை வல்லாதிக்கங்கள் மூலமாக அல்ல. மாறாக தேசிய இனங்கள் அனைத்தும் தேசிய விடுதலை என்ற இடைக் கட்டத்தைக் கடந்த பின்பே அது சாத்தியமாகும் எனப் பாட்டாளி வர்க்கம் அறைந்து கூறுகிறது. லெனின் கூறினார் “எவ்வாறு ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் காலத்திற்குப் பிறகுதான் வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ அதே போல ஒடுக்கப்படும் எல்லா தேசிய இனங்களுக்கும் முழு விடுதலை என்ற அதாவது பிரிந்து போவது என்றால் அதற்குத் தடையேதும் இல்லை சுதந்திரம் உண்டு என்கிற இடைநிலைக் காலத்திற்குப் பிறகுதான் தேசிய இனங்கள் தவிர்க்க முடியாத வகையில் ஒன்றுபடுவது, இரண்டறக் கலப்பது என்ற நிலையை அடைய முடியும்” .

தேசியப் போராட்டத்திற்கு பாட்டாளி வர்க்கம் தலைமையேற்பது தேசியவாதம் என்றும், வர்க்கப் போராட்டத்தைக் கைவிடுவதாகும் என்றும் கூறப்படும் வாதங்களும் தவறானவையே; “தேசியத் தன்மை கொண்ட ஒரு போராட்டத்தில் தேசியப் போராட்டம் என்னும் வடிவத்தை வர்க்கப் போராட்டம் பெறுகிறது” என்றார் மாவோ. “பாட்டாளி வர்க்கம் தன்னையும் தேசத்தினுள் ஒரு பகுதியாக்கிக் கொள்ளாமல், தானும் தேசியத்தன்மை பெறாமல் (இச்சொல் முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல) அது பலம் பெற முடியவில்லை, பக்குவம் பெறமுடியவில்லை, உருவாக முடியவில்லை” என்றார் லெனின். “உழைக்கும் மக்களுக்கு ஒரு தேசமும் இல்லை” என்று கூறிய மார்க்சும் எங்கெல்சும் தேசிய அரசுகள் உருவாகும்போது பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம் ஓரளவுக்கு விசேசமானது என்று கூறினார்கள். தேசிய யுத்தங்களுக்கும் அறைகூவல் விடுத்தார்கள். “கம்யூனிஸ்டுகள் எவ்வித பூர்ஷ்வா தேசியவாதத்துக்கும் எதிராக நிற்கும் அதே நேரத்தில் தம் மக்கள் பற்றிய கவலையேபடாத தேசிய சூனியவாதிகளின் ஆதரவாளர்களும் அல்லர்” என கம்யூனிஸ்டு அகிலத்தின் ஏழாவது காங்கிரஸ் அறிக்கையும் கூறுகிறது. எனவே பாட்டாளி வர்க்கம் தேசிய இயக்கத்திற்கு தலைமை ஏற்பது என்பது பூர்ஷ்வா தேசியவாதமோ வர்க்கப் போராட்டத்தைக் கைவிடுவதோ அல்ல என்பது தெளிவு. ஆனால் தேசிய இயக்கத்திற்கு பாட்டாளி வர்க்கம் தலைமை ஏற்க மறுப்பது தேசிய ஒடுக்குமுறைக்கு ஆதரவாக நிற்கும் ஏகாதிபத்தியவாதமாகவே (காலனிய அடிமைவாதமாகவே) இருக்கும். உண்மையில் தேசிய இயக்கத்திற்குத் தலைமை ஏற்பது என்பது பூர்சுவா ஜனநாயகப் புரட்சியை பூர்சுவா தேசியவாதத்திலிருந்து மீட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஒரு அங்கமாக நடத்தி முடிப்பதேயாகும்.

  - பகலவன்