Monday 30 January 2017

அமெரிக்க ஏகாதிபத்தியம் மதங்களைக் கருவியாகக் கையாளும் பாசிசச் செயல்தந்திரம்

அமெரிக்க ஏகாதிபத்தியம்மதங்களைக் கருவியாகக் கையாளும் பாசிசச் செயல்தந்திரம்

நஸ்ரின் ஜேஸயேரி

விலை: 45/-
புதுமை பதிப்பகம்
7200260086

இஸ்லாம் மதத்தின் தத்துவம் மற்றும் அரசியலை, இன்றைய சர்வதேச சூழல்களில் அதன் பாத்திரத்தையும் மார்க்சிய-லெனினிய ஒளியில் சரியான ஆய்வை ஈரான் மார்க்சிய-லெனினிய கட்சியின் ஆதாரவாளரான தோழர் நஸ்ரின் ஜேஸ்யேரி முன்வைத்துள்ளார்.

இந்நூல் இரண்டு விசயங்களை சாராம்சமாக விளக்குகிறது. ஒன்று தற்காலத்திய இஸ்லாமிய இயக்கங்களின் அரசியலைக் குறித்தும் அதன் யுத்தத்தந்திரம் மற்றும் அரசியல் திட்டம், அவற்றின் உலகக் கண்ணோட்டம் பற்றி; இரண்டாவதாக, இஸ்லாமிய அடிப்படைவாதச் சக்திகள் தலைத்தூக்குவதற்கான தேசிய மற்றும் சர்வதேசியக் காரணங்களை பற்றிய மிகச் சிறந்த ஆய்வே இச்சிறு நூல்.

மதத்தின் தோற்றம் குறித்து மார்க்சியம் ஆய்வு செய்யும் போது இவ்வாறு கூறுகிறது: “மதம் சுரண்டலின் விளைவாகத் தோன்றும் ஒரு சமூக நிகழ்வாகும்” ஆகவேதான் மதம் என்பது தொடர்ந்து ஆளும் வர்க்கங்களின் ஆயுதமாகத்தான் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

காலனியக் கட்டத்தில் உலகம் முழுவதும் பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் எப்படி தன்னுடைய சுரண்டலை அரங்கேற்றின. அதற்கு எப்படி கிறித்துவ மதம் முக்கியப் பங்காற்றியது என்பதை மார்க்ஸ் தன்னுடைய மூலதன நூலில் குறிப்பிடும்போது “உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தம்மால் காலனியாக்கப்பட்ட மக்கள் மீது கிறித்துவ இனம் என்று சொல்லத்தக்க ஒரு இனம் இழைத்த கொடூர காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு இணையாக பூமியில் எந்தக் காலத்திலும் எந்த இனத்தாலும் அது எவ்வளவுதான் கொடூரமான, மூர்க்கமான தாக்குதலாக இருந்தாலும், எவ்வளவுதான் கருணையற்றதாக இருந்தாலும், எவ்வளவுதான் வெட்கமறியாததாக இருந்தாலும், எவ்வளவுதான் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தாலும் நடைபெற்றதில்லை. இதுவே கிறித்துவ காலனியாதிக்கம் ஆகும்”.

இனவெறிக் கொள்கைகளை முன்னிறுத்தி ஹிட்லர் ஜெர்மனி நாட்டை ஏகாதிபத்தியப் போருக்குத் தயார் செய்ததைப் போல், புதிய காலனியக் கட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது ஆதிக்கத்தை விரிவு படுத்தும் பேராசையை நிறைவேற்றிக் கொள்ளவேண்டி மக்களைக் கவர்வதற்காகக் கிறித்துவ அடிப்படைவாதிகளை நோக்கித் திரும்பியுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் காலனியச் சுரண்டலுக்கு ஆகசிறந்த மிகப் பிற்போக்கான ஆட்சியையே சிறந்த அரசு வடிவமாகப் பார்க்கிறது. எல்லா மத அடிப்படைவாதமும் நாட்டிலுள்ள ஆளும் பிற்போக்கு கும்பலை பாதுகாப்பதற்கு தான் உதவுகிறது. இதுவே ஏகாதிபத்திய சுரண்டலுக்கு ஒரு கருவியாகவும் பயன்படுகிறது. மத்தியக் கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த பிற்போக்கு சுரண்டல் மற்றும் ஆதிக்கத்திற்கு எதிர்வினையாக செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மற்றும் இராணுவத் தலைமையகமான பென்டகன் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இத்தாக்குதலை காரணமாக வைத்துக்கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியம், உலக மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான ஒரு யுத்ததந்திரத்தை மேற்கொண்டது. தனக்கு அடிபணிய மறுக்கும் நாடுகள் மற்றும் புதிய காலனியத்திற்கு எதிராகவுள்ள நாடுகளை பொறுக்கி அரசுகள் ( Rogue State) என்று பட்டியலிட்டது. மத்தியக் கிழக்கில் உள்ள எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதற்கு தன்னுடைய அரசியல், பொருளாதார, இராணுவ ஆதிக்கத்தை நிறுவுவதற்கு தடையாகவுள்ள சக்திகளை போரிட்டு அழிக்கவும் மற்றும் அடிமைப்படுத்தவும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப்பட்ட செயல்தந்திரம்தான் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிரான “புனிதப்போர்” (Holy War). அதாவது பிற்போக்கு இஸ்லாமியத்தை எதிர்த்து முற்போக்கு கிறித்துவம் நடத்தும் போர், நாகரிகத்துக்கானப் போர் (War on Civilization). இது அப்பட்டமான காலனிய மேலாதிக்கமே ஒழிய வேறொன்றுமில்லை. இத்தகைய பிற்போக்கின் சேவகனே கிறித்துவ மதம்.

மனித குலத்தை அச்சுறுத்துகிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இத்தகைய தாக்குதல்களை எதிர்த்து போராடுவதற்கான தத்துவ ஆயுதம் எது என்ற கேள்விக்கு பதில் இஸ்லாம் அடிப்படைவாதமா என்றால் இல்லை. ஏன் என்றால் சமூக விஞ்ஞானங்களின் அடிப்படையில் சிந்தனை செய்ய இஸ்லாம் அனுமதிப்பதில்லை. அதாவது சமூகம் அறிவியல் அடிப்படையில் வர்க்கங்களைப் பற்றி பேசுவதே பிரித்தாளும் சூழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. அதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர்தான் ஃபிட்னா (பிரித்தாளும் சூழ்ச்சி). இஸ்லாம் மதத்தைச் சாராதவர்கள் அல்லது மத நம்பிக்கையை விமர்சிப்பவர்கள் அனைவரும் காஃபிர்கள் என்று அழைக்கப்பட்டனர். குறிப்பாக சொல்வது என்றால் கம்யூனிஸ்டுகள் காஃபிர்கள் ஆவார்கள்.

இஸ்லாமின் மிக முக்கிய கொள்கைகளில் ஒன்று ஜிஹாத் இதன் பொருள் “புனிதப் போர்”. உண்மையில் ஜிஹாத் என்றால் என்ன? யாருக்கு எதிராக யாரை வீழ்த்த இந்தப் போர்? இன்றைய உலகத்தை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய புதிய காலனியாதிக்கத்தை இந்தப் போரால் வீழ்த்த முடியுமா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் இதன் நோக்கம் அதுவல்ல என்பதுதான் உண்மை.

ஜிஹாத் போரின் இறுதி நோக்கம் என்பது ஷிஹாதத் என்பதுதான். அதாவது உயிரைவிட்டுத் தியாகியாவது, அடுத்த உலகத்திற்குச் செல்வதற்குத் தயாராக இருப்பது. அங்கு சென்று இன்பத்தையும் நல்ல பாதுகாப்பான நிலையையும் அடைவதுதான் உண்மையான நோக்கம். நிஜ வாழ்வில் உள்ள அனைத்து சுரண்டலையும் மூடிமறைத்துவிட்டு மறுமை வாழ்வை போதிக்கும் மிகவும் கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம் தான் “ஜிஹாத்”.

இஸ்லாமியத் தத்துவத்தில் தற்காலக் கருத்துகள் எதுவும் இல்லை. போர் என்பது அரசியலின் வேறு வழியின் தொடர்ச்சி என்று பார்க்கப்படுவதில்லை. ஆகவேதான் இவர்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து என்னதான் ஆயுதம் தாங்கிப் போராடினாலும் வெற்றியடையாமல் போவதற்கு காரணம் இஸ்லாமிய அடிப்படைவாதமே. இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் பிற்போக்கான வர்க்கத் தன்மைக் காரணமாக; இன, மதக் குழுக்களிடையே உள்ள முரண்பாடுகளை முதன்மைப்படுத்தி மோதல் போக்கை உருவாக்கியஏகாதிபத்தியத்தையும்புதிய காலனியாதிக்கத்தையும் எதிர்த்த போராட்டத்திற்கு ஐக்கியத்தை உருவாக்காமலும், இவர்கள் நடத்திவரும் இந்த ஜிஹாத் போர்கள் ஏகாதிபத்திய ஆட்சியாளர் மத்தியில் பயத்தை உண்டாக்குவதற்குப் பதிலாக வெகுஜனங்கள் மத்தியில் அராஜகத்தைத்தான் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. ஏகாதிபத்தியச் சக்திகளை போன்ற வலிமை வாய்ந்த அதிகார மையங்களிடமிருந்து விடுதலையடைய ஒரு சரியான அறிவியல் அடிப்படையில் அமைந்த போர்த்தந்திரம்தான் தேவை. மாறாக உயிரை விடுவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஜிஹாத்தால் ஏகாதிபத்தியத்தை வீழ்த்த முடியாது.

இஸ்லாமிய அடிப்படை சக்திகளின் வளர்ச்சி

1980ஆம் ஆண்டுகளில்தான் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வளர்ச்சிப் பெற்றன. இந்த வளர்ச்சிக்கான காரணம் என்ன? அன்றைய சர்வதேச சூழலில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சவாலாக மிக முக்கிய சக்தியாக ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் திகழ்ந்தது. மத்திய கிழக்கு நாடுகளின் தன்னுடைய ஆதிக்கத்தை நிறுவவும் அதற்குத் தடையாகவுள்ள ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பல இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களுக்கு அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ உதவி கொடுத்து அமெரிக்கா வளர்த்தது. பிற்காலத்தில் சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் அமெரிக்காவிற்கு எதிர்நிலையாகவும் மாறியது. இத்தகைய எதிர்நிலை சக்திகளால் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வீழ்த்த முடியாது என்பதைத்தான் கடந்தகால வரலாறு நிரூபித்துள்ளது.

இந்தியாவும் இஸ்லாமும்

உலகம் முழுவதும் ஏகாதிபத்தியம் மீளமுடியாத அளவிற்கு நெருக்கடிகள் ஆழப்பட்டுவரும் நிலையில் இந்த நெருக்கடியின் சுமைகளை அனைத்து ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களின் மீது சுமத்துகிறது. ஒவ்வொரு நாட்டிலும் புதிய காலனிய சுரண்டல் அதிகரித்துவருகிறது. இதை எதிர்த்துப் போராடும் மக்களை ஒடுக்குவதற்காக பாசிச அரசுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் நீட்சியாக இந்தியாவில் அமெரிக்காவின் புதிய காலனியத்தை எதிர்த்து போராடும் மக்களை ஒடுக்குவதற்காக மோடி தலைமையிலான அரசு இந்துத்துவ பாசிசத்தை கட்டவிழ்த்துள்ளது.அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் மோடி கும்பலின் ஆட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் புதிய காலனியத்தை எதிர்த்த வர்க்கப் போராட்டத்தை சீர்குலைப்பதற்காக இந்துத்துவப் பாசிசத்தைக் கொண்டு இஸ்லாம் போன்ற சிறுபான்மை மதத்தினரையும் மற்றும் பரந்துபட்ட உழைக்கும் மக்களையும் பிரித்து ஒடுக்குகிறது. இந்துத்துவப் பாசிசத்தை எதிர்த்தப் போராட்டம் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்தியாவின் மீதான புதிய காலனியாதிக்கத்தை எதிர்த்தப் போராட்டமாகும். ஆகவே இந்துத்துவ பாசிசத் தாக்குதல்களை முறியடிப்பதற்கு இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கான வழி இஸ்லாமிய தத்துவமோ, இஸ்லாம் அடிப்படைவாத இயக்கமோ அல்ல. மாறாக ஏகாதிபத்திய புதிய காலனியாதிக்கத்தை ஒழித்துக்கட்டுவதற்கும் தரகு முதலாளித்துவ நிலவுடைமை வர்க்கத்தை முறியடிப்பதற்கும் ஒரு வெல்லற்கரியத் தத்துவம் என்றால் அது மார்க்சிய லெனினியத் தத்துவம்தான். உலகில் மனிதகுல வரலாற்றில் இந்த தத்துவம் மட்டும்தான் விடுதலைக்கான உண்மையான தத்துவமாகும்.

பிரதீப்
பதிப்பாளர் 



No comments:

Post a Comment